வடக்கில் முன்னாள் போராளிகளை பரிசோதிக்க மருத்துவ குழு: மாகாண சபை நியமித்தது
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்குமுகமாக மருத்துவர்களை கொண்ட உயர்மட்ட குழுவை வட மாகாண சபை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் சுமார் 100 பேரின் திடீர் மரணத்தையடுத்து விஷ ஊசி ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்துமாறு முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் வட மாகாண முதலமைச்சு மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஆலோசனை வழங்குமுகமாக வைத்திய நிபுணர் ஒருவரை நியமித்துள்ளார். இது இவ்வாறிருக்க வட மாகாண சுகாதார அமைச்சர் முன்னாள் போராளிகள் அவர்கள் இருக்கும் அந்தந்த மாவட்டங்களில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
போராளிகள் வவுனியா, மன்னார் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை பெற வைத்திய நிபுணர்களை நியமித்துள்ளது. இவர்களுக்கு உதவும் முகமாகவும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் பரிசோதனை மாதிரிகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பரிசோதிக்க வட மாகாண சபை நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.




