அமெரிக்காவின் ‘பசுபிக் ஏஞ்சல்’ நடவடிக்கையும் விஷ ஊசி விவகாரமும்
– இளையதம்பி தம்பையா –
தங்களுக்கு விச மருந்து ஊசி மூலம் ஏற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த இங்கு வந்திருந்த அமெரிக்க வைத்திய குழுவினர் இறுதி நேரத்தில் அவர்களை மருத்துவ பரிசோதனைகுட்படுத்தவில்லை. அப்பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கான கருவிகளை கொண்டு வந்திருக்காதபடியால் அதனை செய்யமுடியாதென அமெரிக்க வைத்தியக்குழுவினர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
‘பசுபிக் ஏஞ்சல்’ என்ற தொண்டு நிறுவன அல்லது நலன்புரித் திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைப்பதற்காக அமெரிக்க வைத்தியர்களும், பொறியியலாளர்களும் இங்கு வந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் சில பாடசாலை கட்டிடங்களை திருத்தியதாகவும் மருத்துவ முகாம்களை, நடத்தியதாகவும் அறிய முடிகிறது. இயற்கை, அனர்த்தங்கள், யுத்த அழிவுகள் போன்றவற்றுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைகள் உள்ளடங்கிய நலன்புரி சேவைகளை இந்த பசுபிக் ஏஞ்சல் என்ற அமைப்பு+ உலக நாடுகள் சிலவற்றில் முன்னெடுத்துள்ளது.
அவ்வமைப்பு யுத்த அழிவுகள் ஏற்பட்டு 7 வருடங்களுக்கு பின்னர் தற்போதுதான் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளது. அதுவும் இங்கு வந்த அமெரிக்கக் குழுவினர் சேவை மிகவும் அற்பமானது. அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்ததாக கூறப்படும் வேலைகளை இங்குள்ளவர்களால் செய்ய முடியாதென்பதில்லை. அவ்வாறிருக்கும் போது, அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்பதும் ‘பசுபிக் ஏஞ்சல்’ திட்டத்தை ஏன் இப்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்தார்கள் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.
அக்குழுவினர் பிரயாணம் செய்த அமெரிக்க விமானப்படை விமானம் முன்னறிவித்தலின்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதாக செய்தியொன்று வெளியாகி இருந்தது. அதில் வந்தவர்கள் விமான நிலையத்தில் இருந்து இராஜதந்திரிகள் வெளியேறும் வாயிலினூடாக வெளியேறி கொழும்பில் பிரபல ஹோட்டலொன்றில் தங்கி இருந்து விட்டு, அவர்களின் விமானத்திலேயே யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் அவ்விமானத்தில் அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷப் மட்டுமல்ல அமைச்சர் மனோகணேசனும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சென்றனர்.
அக்குழுவினர் இங்கு வந்தவேளையில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு நிலையங்களிலும் தடுப்பு நிலையங்களிலும் இருந்தபோதும், அவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய நச்சு மருந்து ஊசி மூலம் ஏற்றப்பட்டதா என்ற சந்தேகம் கிளப்பப்பட்டிருந்தது. அப்போது அவர்களை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி உண்மையை கண்டறிய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்திருந்தது. வடமாகாண சபையும் வேண்டுகோள் விடுத்திருந்தது. சந்தேகத்திற்கிடமாக இறந்த மற்றும் சுகவீகமடைந்துள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை திரட்டும்படி முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டிருந்தார்.
வெளிநாட்டு மருத்துவ பரிசோதனையே தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்ததால் ‘பசுபிக் ஏஞ்சல்’ திட்டத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த அமெரிக்க வைத்தியர்களினால் முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அமெரிக்க தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமெரிக்க தூதுவர் அமெரிக்க வைத்தியர்கள், முன்னாள் போராளிகளை பரிசோதிப்பர் என்று தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகி இருந்தது.
இதற்கிணங்க முன்னாள் போராளிகள் சிலர் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் சென்றிருந்த போதும் அவர்களை அமெரிக்க வைத்தியர்கள் பரிசோதிக்கவில்லை. அப்பரிசோதனைக்கான கருவிகளை கொண்டு வராதபடியால் அதனை செய்ய முடியாது என்று அமெரிக்க தூதுவராலயம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி இலங்கை வைத்தியர்கள் சிலரிடம் கேட்டபோது அவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்ள சில சமயங்களில் நுண்ணிய கருவிகள் தேவைப்படலாம். ஆனால் ஆரம்ப கட்ட பரிசோதனைகளை செய்ய அக்கருவிகள் அவசியமில்லை. அதிகமான சந்தர்ப்பங்களில் சாதாரண பரிசோதனைகளை செய்து விஷம் ஏற்றப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறினர்.
வடமாகாண சபை எல்லா விடயங்களுக்கும் வெளிநாடுகளை நாடாமல் தனக்கு நம்பிக்கைக்குரிய வைத்தியர்களின் மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தாமல் பரிசோதனைகளை மேற்கொண்டு உண்மைகளை கண்டறிந்து இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். உண்மையில் அவ்வாறு விஷம் ஏற்றப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் சிறியதொரு வேலையை செய்ய அமெரிக்க வைத்தியர்கள் வந்தார்கள் என்பதற்குள் அமெரிக்காவிற்கு அவசியமான பெரிய விடயங்கள் இருக்கலாம். அப்பெரிய விடயங்களை சாதிப்பதற்கு போராளிகளை பரிசோதனை செய்வது தடையாகிவிடலாம். அந்நோக்கத்திலேயே முன்னர் சம்மதம் தெரிவித்த அமெரிக்க தூதுவர் பின்னர் மிகவும் வசதியாக தட்டிக் கழித்திருக்கலாம்.
இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் அமெரிக்கா முதலாமிடத்தில் இருந்தாலும், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்த பொருளாதார, கடன் உதவிகள் அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் கிடைக்கவில்லை. இலங்கையின் எதிர்பார்ப்பை இந்தியாவும் தீர்த்து வைக்கும் நிலையில் இல்லை. ஏற்கனவே பொருளாதார ரீதியாக இலங்கையை கபளீகரம் செய்திருந்த சீனா, தான் இலங்கைக்கு கை கொடுக்கும் என்ற நிலை உறுதி செய்யப்பட்ட பிறகு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சீனாவையே நாட வேண்டியுள்ளது.
முன்னைய அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட துறைமுக நகர திட்டம் உட்பட எல்லா திட்டங்களையும் முன்னெடுக்க சீனாவிற்கு தற்போதைய அரசாங்கமும் இணங்க வேண்டியதாயிற்று. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் சீனாவிற்கு சென்றிருந்த போது சீனாவுடன் பல உடன்பாடுகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. அங்கு கருத்து தெரிவித்த பிரதமர் இன்று உலகப் பொருளாதாரம் ஆசியாவிலேயே தங்கி இருக்கிறது என்று கூறியதுடன், இலங்கையின் பொருளாதார விடயங்களில் சீன மாதிரிகளையே இலங்கை கடைப்பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையின் இன்றைய பொருளாதார தேக்கநிலையில் எவரிடமிருந்தாவது கடனுதவி கிடைக்காதா என்ற நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இருக்கிறது. அதனால் பொருளாதார வல்லமை கொண்ட சீனாவிடமே தஞ்சமடைய வேண்டிய நிலை இருக்கிறது.
சீனாவும் கூட இலங்கை மீது இரக்கப்பட்டன்றி, அதன் உலக பொருளாதார வல்லமையை நிலைநாட்டும், நவதாராளவாத பொருளாதார நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை கொண்டுள்ளது. சீனா எந்தவொரு நாட்டிலும் அதன் படைகளை வைத்திருக்காமல் இருக்கலாம். நவகாலனித்துவத்திற்கு நேரடி கட்டுப்பாடு படைக்குவிப்பு, ஆக்கிரமிப்பு அவசியமல்ல. ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சம். அதில் படைகள் என்பது ஒரு அம்சமேயன்றி, முழுமையல்ல. பொருளாதார விஸ்தரிப்பு, சுரண்டல், ஆதிக்கம் என்பவையே அடிப்படைகள். நவகாலனித்துவத்தில் பாதுகாப்பு மற்றும் படைகள் குவிப்பு போன்றன மறைமுக நிகழ்ச்சி நிரலே ஆகும். காலனித்துவ ஆய்வுகளின்படி சீனா இன்று நவகாலனித்துவ ஏகாதிபத்திய நாடாகும். சீனாவின் அளவில் பொருளாதார பலம் இல்லாவிட்டாலும் இந்தியாவும் அவ்வாறே மதிப்பிடப்படுகிறது. இன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்கா முதன்மையாக இருக்கிறது. ஆனால், உலக பொருளாதார வல்லமை சீனாவிடமே இருக்கிறது.
உலக பொருளாதாரம் ஆசியாவிலன்றி ஆசிய நாடொன்றிடம் சீனாவிடம் உலக பொருளாதாரத்தின் பெரும்பகுதி இருக்கிறது. இது உலக மக்களுக்கு அல்லது ஆசிய மக்களுக்கு பொருளாதார விமோசனம் அளிக்கும் மாற்று அல்லது புதிய பொருளாதார ஒழுங்கமைவின் பிரதிபலன் அல்ல. மாறாக அதே ஏகாதிபத்திய அடிப்படையிலானதுதான். இல்லாவிட்டால் சீனாவை ரணில் புகழ்ந்து பேசும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு இலங்கை சீனாவிடம் பொருளாதாரத்திற்காக சரணடைவது அமெரிக்காவிற்கோ, ஐரோப்பியாவிற்கோ பாரிய கவலை தருவதாக இல்லை. இந்தியாவிற்கு வேதனையானதுதான். ஆனால், பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் அமெரிக்கா இலங்கை மற்றும் இந்தியாவினூடாக தலையிட்டுக் கொண்டே இருக்கும். அதனால் அமெரிக்க யாழ்ப்பாணத்தில் ‘பசுபிக் ஏஞ்சல்’ திட்டத்தை ஆரம்பித்து வைப்பது, கண்சிகிச்சை முகாம்களை நடத்துவது போன்ற சின்ன சின்ன விடயங்களையும் விட்டு வைக்காது. அவ்விடயத்திற்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் ஆசீர்வாதம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கும். தற்போதைய அரசாங்கத்தையும் மிரட்டுகின்ற அதேவேளை, அதனை பாரிய அசௌகரியத்துள்ளாக்காது.
முன்னறிவித்தலின்றி அமெரிக்க விமானப்படை விமானம் இங்கு வந்ததும் அவ்விமானத்திலேயே இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கு மாறாக இலங்கை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களையும் வடமாகாண முதலமைச்சரையும் ஏற்றிச் சென்றதும் சாதாரண விடயமல்லவெனினும், முன்னாள் போராளிகளை அமெரிக்க வைத்தியர்கள் பரிசோதனை செய்து இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா அசௌகரியப்படுத்த விரும்பவில்லை.
உரிமைப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மக்கள் அவர்களின் மாற்று பொருளாதாரம், மாற்றுக் கல்வி, போக்குவரத்து, சுகாதார சேவைகள் போன்றவற்றில் கவனஞ் செலுத்துவதுடன் உரிமை மறுக்கும் உள்நாட்டு ஆதிக்க சக்திகளிடம் மட்டுமன்றி வெளி ஆதிக்க சக்திகளிடமும் தங்கி வாழ்பவர்களாக இருக்கக்கூடாது. இது ஆயுதப் போராட்டத்திற்கு மட்டுமல்ல. சாதாரண வெகுஜனப் போராட்டங்களுக்கும் உரிமை கோரிக்கை சார்ந்த சாதாரண செயற்பாடுகளுக்கும் ஏற்புடையதாகும். ‘பசுபிக் ஏஞ்சல்’ எல்லாம் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை தராது.
இதைப்பற்றி காலம் பிந்தியாகிலும் முடிவெடுப்பது அவசியம். ‘பசுபிக் ஏஞ்சல்’ திட்டத்தை ஆரம்பித்து வைக்க யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதுவர் மேற்கொண்ட விஜயத்தினால் வடக்கு மக்களுக்கு எவ்வித பயனுமில்லை என்று வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளையும் செய்வதாக அமெரிக்க தூதுவர் வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் வடக்கு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக உதவிகளை கேட்டபோது அமெரிக்க தூதுவர் மௌனமாக இருந்தார் என்றும் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஆய்வறிவையும் விட பட்டறிவு மேலானதுதான். ஆனால் பட்டுப் பட்டே தெளிய விரும்புவதனால் அழிவுகளையும், இழப்புகளையும் தடுக்க முடியாது. எனவே,அமெரிக்கா கைவிரித்து விட்டது என்று சும்மா இருந்துவிடாமல் முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பில் மாற்று வழிகளை தேட வேண்டும். அவசியமெனின் வடமாகாண வைத்தியர்களே அப்பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் ஆலோசனைகளையும் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
உள்நாட்டு மக்கள் விரோதிகளுக்கும் உலக மக்கள் விரோத வெளிச்சக்திகளுக்கும் இடையேயான முரண்பாடுகளை மக்கள் நலனுக்காக கையாள வேண்டிய தேவை இருக்கும் போது அவற்றை கையாள வேண்டும். அதற்காக வெளிச்சக்திகளிடம் சரணடையக் கூடாது என்பதனை வரலாறு எமக்கு மீண்டும் மீண்டும் பாடம் புகட்டியுள்ளது. புகட்டப்பட்ட பாடத்தின் அடிப்படையில் ஒழுகுவது சிறப்பானதும், ஆக்கபூர்வமானதுமாகும்.




