யாழில் ஆரம்பமாகிய மனித உரிமை அமைப்பின் நல்லிணக்கத்திற்கான பாத யாத்திரையில் தமிழ் மொழி புறக்கணிப்பு!
மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் இருந்து அம்பாந்தோட்டை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்கத்திற்கான பாதயாத்திரையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் யாழில் ஆரம்பித்த இப்பாதயாத்திரை இன்று வவுனியாவை வந்தடைந்தது. எதிர்வரும் 7 அம் திகதி அம்பாந்தோட்டையை சென்றடைந்து அங்கு இனங்களுக்கு அடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மகமாக நிகழ்வு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளவர்கள் அணிந்துள்ள ரீசேட்டில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டு சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நல்லிணக்க பாதயாத்திரைர தொடர்பில் எழுதப்பட்டுள்ளது. அதேபோல், பாதயாத்திரையுடன் இணைந்து 7 வாகனங்கள் பாதயாத்திரை குறித்த படங்கள், தகவல்களை காட்சிப்படுத்தியவாறு செல்கின்ற போதும் அதில் ஒரு வாகனத்தில் மட்டுமே தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றைய வாகனங்களில் சிங்கள மொழி மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நல்லிணக்கத்திற்கான பாத யாத்திரையை வடபகுதியில் ஆரம்பித்துள்ள போதும் வடபகுதி மக்களின் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதே, மும் மொழிக் கொள்கை உள்ள நிலையில் தமிழ் மொழியைள மட்டும் புறக்கணித்துள்ளீர்கள். இப்படி செய்தால் நல்லிணக்கம் வருமா..?, மனித உரிமை அமைப்புக் கூட தமிழ் மொழியை புறக்கணித்து நல்லிணக்க நடவடிக்கையை செய்தால் அரசியல்வாதிகளிடம் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்..? என பல வினாக்களை வவுனியா ஊடகவியலாளர்கள் பாத யாத்திரையில் ஈடுபட்டவர்களிடம் வினவினர்.
இதற்கு அவர்கள் பதில் அளிக்க முடியாது தடுமாறியதுடன் இறுதி நாள் அம்பாந்தோட்டையில் வந்து பாருங்கள். அங்கு தமிழ் மொழி இருக்கும் எனப் பதில் அளித்தனர்.
N5







