செய்திகள்

அபிலாசைகள் நிறைவேறுமா…?

-நரேன்-

இலங்கைத்தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னரே தென்பகுதி தேசிய அரசியல் சக்திகள் கட்சிகளாக தம்மை நிலைப்படுத்திக் கொண்டன. 1946 இல் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய இனங்களுக்கு மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்ற போர்வையில் உருவானபோதிலும் சுதந்திரத்திற்கு பின்னர் தமிழர் விரோத செயற்பாடுகளில் தன்னை ஒரு காத்திரமான சக்தியாக வெளிப்படுத்திக் கொண்டது. சுதந்திரத்திற்கு முன்னர் சில கட்சிகள் இருந்தாலும் அவை இயக்கங்களாக, அமைப்பு ரீதியாகவே செயற்பட்டு இருந்தன. கட்சி அரசியல் வளர்ச்சியடைந்த பின்னர் அவை தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த நிலையில் தமிழ் தரப்பு தன்னுடைய வாழ்வுரிமைக்கான போராட்டத்தை அகிம்சை வழியிலும், பாராளுமன்ற பாதையிலும், பின்னர் தற்காப்பு ஆயுதப்போராட்டத்தின் மூலமாகவும் வெளிப்படுத்தியது. இந்தக் காலப்பகுதிகளில் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக அரசியசிற்கான எத்தகைய ஒரு கட்டமைப்புக்களும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை.

கட்சிகளும், கொள்கைகளும் அவற்றின் நிறங்களும் தென்னிலங்கையில் மாறுபட்டதாக இருந்த போதும் அவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளின் ஒன்றுக்கொன்று சளைத்ததாக இருக்கவில்லை. தமிழ் மக்களை அடக்கி ஆளுவதிலும், அவர்களுக்குரிய உரிமைகளை மறுப்பதிலும் அவை முனைப்பு காட்டின. அவற்றில் ஒரு படி மேலே சென்று மனித உரிமைமீறல்கள், போர்குற்றங்கள் என்பவற்றை உச்ச அளவில் வெளிப்படுத்தும் வகையில் கடந்த மஹிந்தா அரசாங்கத்தின் ஆட்சி நிலைபெற்றிருந்தது. இது அசைக்க முடியாத மன்னராட்சி போன்றே காணப்பட்டது.

இதுவரை காலமும் இந்த நாட்டில் வரவு செலவுத் திட்டத்தில் ஏனைய அமைச்சுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டிருந்த பொழுதிலும் அந்த அமைச்சுக்களின் பணிகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாத அளவிற்கு நாட்டின் பாதுகாப்பு என்பதை காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது சிவில் அமைப்புக்களின் துணையுடன் சிறுபான்மை கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய இனத்தின் தலைமைகளின் ஆகியவற்றின் துணையோடு மைத்திரிபால சிறிசேன ஆட்சிபீடமேறினார். தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்தா அரசாங்கத்தின் காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான விசாரணைகளை நடத்தி குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று தெரிவித்திருந்தார். ஒரு சர்வதிகார ஆட்சிக்கு எதிராக கிளர்தெழுந்த பெரும்பான்மை இனத்தின் சிறுபான்மையினரும், சிறுபான்மை இனத்தின் பெரும்பான்மையினரும் தங்களுக்கு இருந்த வாக்குரிமையைப் பயன்படுத்தி ஒரு துளி இரத்தமும் சிந்தாது எத்தகைய வன்முறையும் இல்லாது ஒது மௌனப்புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்கள் ஓரளவு நம்பிக்கை கொண்டிருந்த போதும் ஜனாதிபதி தெரிவித்து வரும் கருத்துக்களும் அவரது ஆதரவுடன் அரசாங்கம் நடத்தி வரும் பிரதமரின் கருத்துக்களும் தமிழ் மக்களின் நம்பிக்கையை சிதறடிப்பதாகவே உள்ளது. இதன் விளைவாக தேசிய அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதும் தமிழ் மக்களின் கோபம் திரும்பியிருக்கின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தமது கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் முன்வைத்து வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். கூட்டமைப்பு மக்களின் பக்கம் நிற்பதா அல்லது அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்வதா என்பது தெரியாமல் இருதலைக் கொள்ளி எறுப்பாக தத்தளிக்கின்றது. இந்நிலையிலேயே புதிய தேசிய அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ‘ புதிய கட்சி ஆரம்பித்தால் இரகசியங்கள் வெளிவரும் என்றும் பிரதமரும் நானும் ஆட்சி மாற்றத்திற்கு தலைமை தாங்கியிருக்கவிடின் இலங்கை இன்று பிச்சை எடுத்திருக்கும். ஐ.நா மனித பேரைவையின் தீர்மானத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் அச்சப்பட்டு ஆட்சியை விட்டுச் சென்றவர்கள் இன்று வீராப்பு பேசுகின்றார்கள் ‘ என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள் மிகவும் ஆழமாகவும் அவதானமாகவும் நோக்கப்பட வேண்டியவைகள்.

ஒரு ஆண்டுக்குள்ளாகவே அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் நழுவிச் சென்றுள்ளமை இஙகு உற்று நோக்கப்பட வேண்டிய விடயம். புதிய கட்சி தொடங்கினால் மாத்திரமே இரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்ற தொனிப்பட அவர் பேசியிருப்பது சிவில் சமூகத்தினரையும், தமிழினத்தையும் ஏனைய சிறுபான்மை சமூகத்தையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. மறைப்பதற்கு ஏதோ ஒன்று தன்னிடம் இருப்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதையே அவருடைய கூற்றில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ள கருத்துக்களும் சற்று அவதானிக்க வேண்டியதாகவே இருக்கின்றது.

உண்மைகள் கண்டறியப்படும் என்று நல்லாட்சி அரசாங்கம் வாக்குறுதியளித்த போதிலும் இன்றுவரை அதற்கான காத்திரமான முன்னெடுப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆடசியாளர்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவர்கள் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அனைத்தும் கட்சியின் நலன்கருதியே மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆட்சி செய்யும் கட்சியோடு இணைந்திருப்பவர்கள் எத்தகைய குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தப்புவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதையே அரசாங்கத்தின் செயற்பாடுகள் இருப்பதாக தோன்றுகின்றது.

தமிழ் மக்களினுடைய ஆதரவைப் பெற்று வந்த இந்த அரசாங்கம் அவர்களுடைய காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, சுயதொழில் முயற்சி, அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனோரை கண்டறிதல் போன்ற விடயங்களில் மிகவும் மெத்தனமாக செயற்படுவதாகவும் அக்கறையின்றி இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நம்பிக்கையீனங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் ஜனாதிபதியினதும், சுகாதார அமைச்சரினதும் கூற்றுக்கள் அமைந்திருக்கிறது. இணக்க அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் யுக்தியை கையில் எடுக்குமா? அல்லது தனது தரகு அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்குமா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு கூட்டமைப்புக்கே இருக்கிறது.

N5