சுதந்திரக் கட்சியின் மாநாடு இன்று : கட்சி பிளவை தடுக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு இன்று 4ஆம் திகதி குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
இதில் கலந்துக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் அதில் மகிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ளமாட்டார். அவர் இந்த மாநாட்டை தவிர்த்துக்கொள்வதற்காக மலேசியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். எவ்வாறாயினும் சந்திரிக்க அதில் கலந்துக்கொள்வார்.
இதேவேளை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , முதலமைச்சர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கட்சியின் அமைப்பாளர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். இதில் கட்சி தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சகல பிரதேசங்களிலிருந்தும் பல்லாயிரக்காணக்கானவர்களை அந்த மைதானத்திற்கு கொண்டு வருவதற்கு கட்சியினர் நடவடிக்கையெடுத்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குறைந்தது 200 பேரையாவது கொண்டு வர வேண்டுமென ஒவ்வொரு அமைப்பாளர்களுக்கும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் தமது பிரதேசத்திலிருந்து பஸ்களில் மக்களை அந்த மாநாட்டுக்கு அழைத்து வரவுள்ளனர்.
எவ்வாறாயினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள மாட்டோம் என தீர்மானித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




