பேரவையின் அறைகூவலும் கூட்டமைப்பின் தளம்பலும்
-நரேன்-
2009 ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக ரீதியில் பாராளுமனற்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் மக்களுக்கு சார்பாக அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்த தமிழ் தேசியக் கூட்மைப்பு சர்வதேச விருப்பங்களுக்கு ஏற்ப நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தில் இணங்க அரசியலை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனைத் தான் தான் விரும்பி ஏற்றுக் கொண்டதாக தெரிவித்த போதிலும் அந்த சூழலுக்குள் இடறி விழுந்தது என்பதே மறுக்க முடியாத உண்மை. யுத்த வெற்றியில் திளைத்த மஹிந்தா அரசு அரசியல் ரீதியாகவும் தமிழர்களை ஒடுக்கும் முயற்சியில் தீவிரம்காட்டியது. உள்நாட்டில் தான் ஒரு ஏகாத்திபத்திய எதிர்ப்பு வாதியாகவும், சர்வதேசத்தில் இடதுசாரி ஜனநாயகத்தை வரித்துக் கொண்ட நாடுகளின் நண்பனாகவும் காட்டிக் கொண்டு அந்த தத்துவங்களுக்கு முற்றிலும் எதிரான தேசிய இன ஒடுக்குமுறையை மேற்கொண்டிருந்தது. இந்திய- இலங்கை ஒப்பந்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தத்தை தும்புத் தடியாலும் தொடமாட்டோம் என்று சொன்ன அன்றைய கூட்டனியும் இன்றைய தமிழரசுக் கட்சியும் அந்த 13ஐ அமுல்படுத்துமாறு கோருகிறது. மறுபுறத்தில் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் மஹிந்தா தரப்பினர் 13 பிளஸ் என்று வைத்த முழக்கமும் கானல் நீராகி போனது.
ஆக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது ஒரு காத்திரமான அரசியல் அழுத்தங்கள் ஏதுமற்ற தற்போதைய சூழலில் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு அணிசேர்க்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான சித்தார்த்தன் மு.திருநாவுக்கரசு அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் கூறிய கருத்து அமைகிறது. இன்றைய சூழலில் நீங்கள் கூறிய உங்களது அரசியல் தீர்வை முன்வைத்து நடைமுறைப்படுத்த உதவுவீர்களா..? என்று கேட்ட போது அதற்கு அவசியமில்லை. ஏன்எனில் இன்று புலிகள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியதாக சித்தார்த்தன் கூறியுள்ளார். இது ஆயுதப்போராட்ட அரசியல் இலங்கையின் சிங்கள தேசியவாதிகளை அரசியல் தீர்வு காண்பதற்கு நிர்பந்தித்து இருந்தது என்பதைக் காட்டுகிறது. இன்று அந்த சக்தி இல்லாததன் காரணமாக தமிழ் தேசிய இனத்திற்கு அதற்கு உரித்தான எதனையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்ற சிங்கள தேசியவாதிகளின் மனோநிலையையும் தெளிவாக காட்டுகிறது.
இத்தகைய சூழலில் சிங்கள தேசியவாதிகளிடம் இருந்து வருகின்ற நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, எல்லோரும் சமமாக மதிக்கப்படுதல் என்பவை வெற்றுக் கோசங்களாகவே அவதானிக்க முடிகிறது. இவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இதயசுத்தியுடனான செயற்பாடு சிங்கள அரசியல் சக்திகளிடம் இல்லை என்பது தெளிவாகிறது. ஜதார்த்தங்கள் இவ்வாறு இருக்க கூட்மைப்பு வழக்கத்திற்கு மாறாக இணக்க அரசியலில் ஈடுபட்டுள்ளது. இந்த இணக்க அரசியல் தான் தமிழ் மக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது அன்றாட பிரச்சனைகள் தொடக்கம் அரசியல் தீர்வு வரையிலான அனைத்து விடயங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கறையுடன் கவனம் செலுத்தும் என்று நம்பியிருந்த தமிழ் மக்கள் இன்று அதனுடைய வெளிப்படை தன்மையற்ற செயற்பாடுகளினாலும், தமது நாளாந்த பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்காத தன்மையினாலும் கூட்டமைப்பின் மீது வெறுப்பு அடையத் தொடங்கியுள்ளார்கள். ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், சர்வதேசம் எம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது, ஐ.நாவுக்கு எமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும், எமது பேரம் பேசும் சக்தி எமது ஒற்றுமையே என்றும் இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சுயாட்சி அலகை உருவாக்குவதே எமது இலக்கு என்றும் வீரமுழக்கமிட்டு அரசியல் மேடைகளில் ஆர்ப்பரித்த கூட்டமைப்பு அதற்கு ஏற்றாற் போன்ற செயற்பாடுகள் எதையும் காத்திரமான வகையில் முன்னெடுக்கவில்லை.
தாங்கள் அபிமானம் வைத்த கூட்மைப்பினர் தங்களது பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்காதையடுத்து கவலையும், ஆத்திரமும் அடைந்த மக்கள் தத்தமது தேவைக்கேற்ப அமைப்புக்களை அமைத்துக் கொண்டு வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். ஒரு கட்சியாக வழிநடத்த வேண்டிய கூட்டமைப்பினர் அதிலும் குறிப்கபா தமிழரசுக் கட்சியினர் அந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையிலேயே உள்ளது. அங்கத்துவ கட்சிகளுடன் இதயபூர்வமான ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் இருந்து விடுபட்டு தனது கட்சியை மட்டும் பலப்படுத்தும் முயற்சியில் தமிழரசுக் கட்சி செயற்படுவதானலேயே கூட்டமைப்பினால் எத்தகைய போராட்டங்களையும் முன்னெடுக்க முடியாமலும் உள்ளது.
பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சி என்ற பெயரில் செயற்படுவதன் காரணமாக அங்கத்துவ கட்சிகளைச் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக கருதப்படுவதனாலும், அவர்களே பெரும்பான்மையினராக இருப்பதாலும் தமிழரசுக் கட்சியின் முடிவை ஏற்று செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் பங்களாளிக்கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியில் பரந்த அளவில் மக்களை ஒன்று திரட்டி ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்வதற்கும், வெறுமனே பாராளுமன்ற கதிரைகள் மட்டுமே அரசியல் பிரச்சனைகளை தீர்வைக் கொண்டுவராது என்பதையும் சகலருக்கும் தெரிவிப்பதற்கும் ‘தமிழ் தேசியப் பேரவை’ என்கின்ற ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று பங்களாளிக் கட்சிகள் தொடர்ந்தும் கோரி வந்தனர். ஆனால் தமிழரசுக் கட்சி அதனை கண்டுகொள்ளவில்லை. இதன் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றது.
தமிழ் மக்கள் பேரவையில் புத்திஜீவிகளும், துறைசார்ந்த வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும், தொழிற்சங்க பிரதிநிதிகளும், கல்விமான்களும், ஏனைய பொது அமைப்புக்களும், சில அரசியற் கட்சிகளும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கமும், சர்வதேச சமூகமும் தமிழ் மக்களை திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் ஒரு கவனயீர்ப்பு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், கூட்டமைப்பின் தலைமையோ ஐயையோ இந்த நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட்டு விடாதீர்கள். நிலமைகளை குழப்பி விடாதீர்கள் என்று கூக்குரல் இடுகிறது. மறுபுறத்தில் பேரவையின் அறைகூவலைக் கண்டு அஞ்சி, அவசர அவசரமாக அரசாங்க தரப்பினரை சந்தித்து முக்கியமான விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. பேரவையினர் வைத்திருக்கும் ஆறு அம்சக் கோரிக்கைகளை கையில் எடுத்துக் கொண்டு நித்திரையில் இருந்து விழித்தெழுந்தவர்கள் போல் கூட்மைப்பின் தலைமை செயற்படுவதானது பேரவையின் உதயத்தை நியாயப்படுத்தி இருக்கிறது. தாம் பிரதிநித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சனைகளை முன்னின்று முகம் கொடுக்காத எவரையும் மக்கள் தமது தலமையாக ஏற்கமாட்டார்கள். என்ற உண்மையை கூட்டமைப்பின் தலைமை விரைவில் புரிந்து கொள்ளும்.
கூட்டமைப்பின் தலைவர் அரசாங்க முக்கியஸ்தர்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ‘ தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலை வைப்பதையும், வலிந்து சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்ததுடன் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தாம் மற்கொண்ட நடவடிக்கைகளை முதன்முறையாக பட்டியல் இட்டும் ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார்’. இது பேரவையின் பேரணி அறைகூவல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.
N5




