மணற் கொள்ளையால் உவர்பரப்பாகும் கிளிநொச்சி: தடுப்பதற்கு வழி என்ன?
பா.ஜதுர்சிகா
ஒரு பிரதேதசத்தினது வளங்கள் அழிக்கப்படுவதற்கு ஏற்ப அந்தப்பிரதேசத்தினது அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதில்லை. மீள்குடியேற்ற மாவட்டமாக கானப்படும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு கட்டுமானங்கள் வீடுகள் குளங்கள் என பலதரப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் மேலும் அதிகளவான தேவைகள் கானப்படுகின்றன.
இந்தநிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமாக காணப்படும் இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகளுக்கான மண் பெற்றுக்கொள்வதற்கும் வீட்டுத்திட்ட பயனாளிகள் தமக்குத் தேவையான மணலைப்பெற்றுக் கொள்வதிலும் தடைகள் காரணமாக அவற்றைப் பெற்றுக் கொள்ளமுடியாது பெரும் சிரமங்களை எதிர் கொள்ளவேண்டிய நிலைகாணப்படுகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத மணல் அகழ்வு கள் பெறுமதியான மரங்கள் அழிக்கப்படுவது போன்ற செயற்பாடுகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறு இந்த மாவட்டத்தில் வகை தொகையின்றி அழிக்கப்படும் வளங்கள் இந்த மாவட்டத் தேவைகளுக்குப் பயன் படுவது என்பது மிகமிக அரிது. ஆனால் வியாரநோக்கங்களுக்காக இவை அழிக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால் கிளிநொச்சி மாவட்ட மக்களே பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்குகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத மணல் அகழ்வுகள் காடழிப்புக்கள் தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன.
அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிகள் எவையுமில்லாத போதும்இவ்வாறான வளங்கள் கொள்ளையிடப்பட்டு வெளிமாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்படுகின்றன. இது தொடர்பாக மாவட்ட அரச அதிபர் அவர்கள் கருத்துதெரிவிக்கும் போது இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்வதற்கான எந்த அனுமதிகளும் இல்லை. இந்தமாவட்ட மக்கள் தமக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. என்றும் அதற்கு உரிய அனுமதிகளைப்பெற்று தமக்குத்தேவையான மணலைப்பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது கிளிநொச்சி மாவட்டதில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் விவசாய நிலங்கள் மற்றும் வீதிகள் என்பனவும் சேதமடைகின்றன. மீள்குடியமர்வின் பின்னர் போடப்பட்ட சில வீதிகள் தொடர்ச்சியான மணல் அகழ்வினால் சேதமடைந்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்த பல்வோறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தும் தினமும் இவ்வாறான மணல் அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. இவ்வாறு மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகனங்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டு அவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மணல் மற்றும் பெறுமதியான காட்டு மரங்கள் என்பவற்றை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான எதுவித அனுமதிகளும் வழங்கப்படுவதில்லை ஆனால் எதுவித அனுமதிகளுமின்றி இரவு பகலாக இவ்வாறான வளங்கள் கொள்ளையிடப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் 12 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன மூங்கிலாறு வண்ணாத்தியாறு கல்லாறு புளியம் பொக்கணை முரசுமோட்டை தடடுவன் கொட்டி நெத்தலியாறு தருமபுரம் வன்னேரிக்குளம் அக்கராயன் குளம் கண்ணகை புரம் கோரமோட்டை பழையஜயன்கன்குளம் ஆகிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இடங்கள்தவிர கட்டுமானங்களுக்கு ஏற்ப தரமற்ற மணலே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. கிளி நொச்சி மாவட்டதத்தின் பன்னங்கண்டி தடடுவன் கொட்டி ஊரியான் உருத்திர புரம் செருக்கன் உள்ளிட்ட இடங்களில் கட்டுமாணங்களுக்குப் பயன்படுத்த முடியாத உவர் நில மணல் மற்றும் மயானங்களிலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மணலே வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நுகர்வோரை ஏமாற்றி வெளிமாவட்டங்களில் இந்த மணல் விற்பணை செய்யப்பட்டு வருகின்றன.
இங்கிருந்துகொண்டு செல்லப்படும் தரமற்ற மணல் யாவும் வெளிமாவட்ட அபிவிருத்திக்கே பயன்படுகின்றன. இதனால் இதனை பெறுபவர்களும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு கே.என் 32 கிராம அலுவலர் பிரிவின் குடமுருட்டி பாலத்திற்குஅருகாக சட்டவிரோத பாதையமைத்து பெருமளவுமணல் அகழ்வுமேற்கொள்ளப்பட்ட இடம்ஒன்று அடையாளம் காணப்பட்டு அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதாவது உருத்திரபுரம் வடக்குகிராம அலுவலர் பிரிவிலிள்ள ஆனையிறவு கடல் நீரேரியை அண்டிய உவர் நிலப்பகுதிகளிலும் பயிர் செய்கை நிலங்களிலும் என்றுமில்லாதவாறு மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தப்பகுதிகளில் ஏற்கனவே பயிர் செய்கை நிலங்களிற்குபாதுகாப்பாக காணப்பட்டஉவர் நீர்த்தடுப்புஅணைகள் கடந்த கால யுத்தம் காரணமாக அழிவடைந்து கடல்நீர் உட்புகுந்து பயிர் செய்கை நிலங்கள் பல உவர் நிலங்களாக மாறியுள்ளன. இதனால் ஏராளமான ஏழை விவசாயக்குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க மேலும் கடல் நீர் உட்புகும் வகையில் பாரிய மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்;டுள்ளன. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள செருக்கன் உருத்தரபுரம் பகுதிகளில் குடிநீர்இன்றி இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.மேலும் இவ்வாறான மணல் அகழ்வுகளால் கடல்நீர் உட்புகுந்து பெரும்பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயநிலை காணப்படுகின்றது.
அதாவது மேற்படி உருத்திரபுரம் பகுதியில் குடமுருட்டிப் பாலத்திற்கு அருகை சட்ட விரோதமான முறையில் பாதையொன்று அமைக்கப்பட்டு அதனூடாக கனரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு பெருமளவான மணல் அகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணலானது இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதில்லை காரணம் அதிக உவர் தன்மை கொண்டது என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அகழ்வு செய்யப்பட்ட மணல்கள் யாவும் வெளிமாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் உருத்திரபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குள் உவர்நீர் உட்புகும் அபாயநிலை காணப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள்சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்றுநிலமைகளை பார்வையிட்டதுடன் உடனடியாக சட்டவிரோத பாதையினை அகற்றுமாறு இதுதொடர்பான நடவடிக்கைகளைஉடனடியாக மேற்கொள்ளுமாறும் கரைச்சிப்பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி மற்றும் பூநகரி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த சட்டவிரோத பாதை அகற்றப்பட்டுள்ளது. இதேபோன்று செருக்கன் பகுதிகளிலும் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு மணலைக்கொண்டு செல்வதற்கு எதுவித அனுமதிகளும் வழங்கப்படாவிட்டாலும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ-35 வீதி ஏ-32வீதி ஏ-9 வீதியூடாக வெளிமாவட்டத்தில் இருந்து மணலைக்கொண்டு செல்வதற்கு வழித்தட அனுமதிகள் உள்ளமை. இவ்வாறான சட்டவிரோதமான மணல் அகழ்வுகளுக்கு வாய்ப்பாகவுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் மிக அண்மையில் பொது மயானத்தில் இருந்து பெருமளவான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சடலங்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் புதைக்கப்பட்ட எச்சங்கள் காணப்பட்டன. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட அரசியல் வாதிகளுக்கு மக்கள் வழங்க தகவலையடுத்து சம்பவ இடத்திற்குசென்று நிலைமைகளை பார்வையிட்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டபோதும் அவ்விடத்திற்கு வந்த மணலை கொள்ளையர்களுடன் சமரசம் செய்து விட்டு எவரையும் கைது செய்யாது எந்த சட்டவிரோத நடவடிக்கைகளையும் எடுக்காது சென்றுள்ளனர்.
இதேபோன்று தட்டுவன் கொட்டிப்பகுதியில் தனியாருக்குச்சொந்தமான வயல் நிலங்களில் மணல்அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட சமயம் கிராமஅலுவலர் மற்றும் பொதுமக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு அவ்விடத்திற்கு வந்தபொலிசார் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரங்களையும் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களையும் பாதுகாப்பாக விடுவித்து விட்டுசென்றுள்ளனர்.
இதேபோன்று திருவையாறு கல்லாறு ஆகிய பகுதிகளிலும் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை பொலிசார் கைது செய்து விட்டு பின்னர் அவர்களை விடுவித்து வருகின்னர். சட்டவிரோத மணல்கொள்ளைகளில் ஈடுபடுவது தொடர்பாக பொதுமக்களால் பொலிசாருக்கு தகவல்கள் வழங்கப்படுகின்ற போதும் தகவல் வழங்கிய நபர்களின் விபரங்களை பொலிசார் மணல் கொள்ளையருக்கு சொல்லி வருகின்றனர். இதனால் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் கூட ஏற்படுகின்றன என கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் பொலிசாருக்கும் மணல் கொள்ளைகளில் ஈடுபடுபவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வினால் பெருமளவான பயிர்செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறுவதுடன் குடிநீர் கிணறுகள் உவர் நீராக மாறி வருகின்றன.
ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கரையோரப்பகுதிகளில் காணப்பட்ட உவர் நீர்த்தடுப்பணைகள் சேதமடைந்தமையால் சுமார் ஆறாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.
வன்னேரிக்குளம் குஞ்சுக்குளம் பல்லவராயன்கட்டு அதுபோல் கண்டாவளை பிரதேசத்தின் கல்லாறு தட்டுவன்கொட்டி ஊரியான் செருக்கன் உருத்திரபுரம் போன்ற பகுதிகளில் உவர் நிலங்கள் அதிகரித்து வருவதுடன் குடிநீர் தட்டுப்பாடுகளும் நிலவி வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு பெருமளவு வளமான நிலப்பரப்பை கொண்ட கிளநொச்சி மாவட்டத்தின் உவர் நீர்ப்பரம்பல் அதிகரிக்கும் அபாயநிலை காணப்படுகின்றது. தற்போது இவ் உவர்நீர்ப்பரம்பல் கிளிநொச்சி நகரின் மையத்தில் இருந்து மூன்றுநான்கு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இவ்வாறு நிலமைதொடருமாக இருந்தால் இன்னும் குறுகிய காலத்;திற்குள் கிளிநொச்சி நகரையும் உவர் நீர்ப்பாதிப்பு அக்கிரமித்து விடும் இதனால் பாதிப்புக்களை எதிர்கொள்வது எமது எதிர்கால சந்ததியினரே என்பதை எல்லோரும் உணர்ந்து இதனை தடுக்க வேண்டும்.
இதேபோன்று தினமும் பெறுமதியான காட்டு மரங்கள் மாவட்டத்தில் இறுக்;கமான நடவடிக்கைகள் உள்ளபோதும் வெட்டப்பட்டு வெளியிடங்களிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இவை ஏதோ ஒரு விதத்தில் அதகாரிகளின் துணையுடன் கொண்டுசெல்லப்படுகின்;றது என்றே மக்களால் குற்றம் சாட்டப்பட்டுளள்ளது.
இவ்வாறான வளங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
N5




