வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் தமிழ் மொழி மூலமான ஒருமைப்பாடு வழிவகுக்கட்டும்: முத்தமிழ் விழாவில் விக்னேஸ்வரன்
வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் தமிழ் மொழி மூலமான ஒருமைப்பாடு வழிவகுக்கட்டும் என்று வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அரங்கில் ஆரம்பமான முத்தமிழ் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ” உலகமயமாக்கல் சூழலில் ஈழத்து கலை, இலக்கிய, கலாச்சாரப் போக்கும் சவால்களும் ” என்ற தலைப்பில் உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
“எம் தமிழினத்தை இனி ஒன்றுபடச் செய்யப் போவது அரசியல் இல்லை. எமது தமிழ்; எமது தமிழ் இலக்கியம்; எமது தமிழ்க் கலைகள்; எமது தமிழ்ப் பாரம்பரியங்கள்; எமது தமிழ் வாழ்க்கை முறை. எமது சமூக ஒருமைப்பாடே வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் வழி அமைப்பன. இதுவரை காலமும் நாங்கள் பல விதங்களில் எமது முரண்பாடுகளையே முன்னிறுத்தி வந்துள்ளோம். நான் வேறு குடி நீ வேறு குடி என்றோம்; நான் வடக்கு நீ கிழக்கு என்றோம்; நான் விவசாயி நீ மீன்பிடிப்பவன் என்றோம்; நான் தமிழன் நீ முஸ்லீம் என்றோம். எம்மை எல்லாம் இனிமேலாவது தமிழ் மொழி ஒன்றுபட வைக்கட்டும்! தமிழ் மொழியின், அதன் இலக்கியத்தின், அதன் பாரம்பரியத்தின், அதன் இலட்சியத்தின் அழகில் இனி ஒன்றுபட முன்வருவோமாக!” என்று விக்னேஸ்வரன் கூறினார்.
அவரின் உரையின் முழு விபரமும் வருமாறு,
இன்று ஓர் இனிய நாள். செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி, தமிழர் தம் தொன்மை பற்றி அவர்தம் கலைகள் பற்றி, கலாச்சாரம் பற்றி மீன்பாடுந் தேன்நாடாம் அழகிய மட்டு நகரில் நாம் பேசவிருக்கும் நாள். எமது இலக்கியப் படைப்புக்களின் தன்மை பற்றியும் அவற்றில் காணப்படும் உரைநடைகளின் உயர்வு பற்றியும் ஆராயப்படவுள்ள நாள். தமிழ் அன்னையின் குழந்தைகள் என வர்ணிக்கத்தக்க, தமிழ் மொழியை அழகுறப் பேசுகின்ற தமிழர்கள் வாழும் கிழக்கிலங்கைப் பகுதியின் தலைநகராகிய மட்டக்களப்பில் இன்றில் இருந்து மூன்று தினங்களுக்கு இலக்கியச் சுவைகளைப் பருகுவதற்கு அழகியதொரு தமிழ் மேடையை உருவாக்கித் தந்திருக்கிறார்கள் தமிழ் மக்கள் பேரவையின் மட்டக்களப்பு உபகுழுவினர். இந்த உபகுழு அங்கத்தவர்களுக்கும், அவர்களுடன் இணைந்து செயலாற்றிய அனைத்துத் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது அரசியல் விவகாரங்களில் அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், அரசியல் திருத்த சட்ட மூலங்களில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் தமிழ் மக்கள் சார்ந்த இன்னோரன்ன விடயங்களில் தமிழ் மக்களுக்கு பக்கபலமாக நின்று உதவுவதற்கும் ஏற்றதொரு அமைப்பை உருவாக்க வேண்டும் என பல அறிஞர்களும், கல்விமான்களும், வைத்தியகலாநிதிகளும், அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டதால்த்தான் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பு உருவாகியது.
அவர்களின் நோக்கம் நன்றாக இருந்தது. அவர்கள் மேற்கொள்ளவிருந்த முயற்சிகளில் தெளிவுத் தன்மை காணப்பட்டது. ஒவ்வொரு விடயத்தையும் அலசி ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ளக் கூடிய அறிவுசால் அங்கத்தவர்களைக் கொண்ட சபையாக தமிழ் மக்கள் பேரவை மிளிர்ந்தது. இவர்களின் இந்த புதிய முயற்சி தமிழ் மக்களின் விடிவுப் பாதைக்கான ஒரு உந்துசக்தியாக அமையும் என்ற காரணத்தினால் நானும் அந்த அமைப்புக்கு அனுசரணை வழங்க முன்வந்தேன். ஆனால் ஓர் வரையறையுடன்! அதாவது தமிழ் மக்கள் பேரவை எக்காலத்திலும் ஒரு அரசியல் கட்சியாக மாற்றம் பெறக்கூடாது என்ற நிபந்தனையுடனேயே இணைந்து கொண்டேன்.
தமிழ் மக்கள் பேரவையின் முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வுகள் எப்பொழுது நடைபெற்றதோ அன்றில் இருந்தே திகிலடையத் தொடங்கிவிட்டன எமது உள்ளூர் பத்திரிகைகள்! அரசியல்த் தலைமைகளும் வெகுவாக விமர்சிக்க ஆரம்பித்தனர். தமிழ் மக்கள் பேரவை என்பது ஒரு மக்கள் அமைப்பே அன்றி அது ஒரு அரசியல் கட்சி அல்ல என நாம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தினோம். அவர்களோ ‘இல்லை இல்லை! நீங்கள் ஒரு அரசியல் கட்சியாக மிளிரப் போகின்றீர்கள். அதற்கான முத்தாய்ப்பு வேலைகளிலேயே இப்போது ஈடுபட்டிருக்கிறீர்கள்’ என்று இப்பொழுதும் கூறி வருகின்றார்கள். இவர்களை எப்படித் திருப்திப்படுத்துவது என்பது புரியாமல் உள்ளது. ஆனால் அவர்களின் சந்தேகங்களிற்காக நாம் செய்யும் நல்ல காரியங்களை நாம் இடைநிறுத்த முடியாது.
நாம் எமது கடமையைச் செய்து கொண்டு போகின்றோம். பேரவையானது இந்தக் கலை கலாச்சார நிகழ்வை இத்தனை பிரம்மாண்டமாக ஒழுங்கு செய்து எம்மை இங்கு அழைத்தமைக்கு என் நன்றிகள் உரித்தாகுக!
நான் என் நீதித்துறைப் பயணத்தில் கால்அடி பதித்ததே இந்த மட்டு மண்ணில்தான். 1978ம் ஆண்டு நடைபெற்ற சூறாவளியின் காரணமாக வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட ‘மன்னிங் ட்ரைவ்’ வீதியில் இருந்த எமது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் மிகவும் பாதிப்படைந்து காணப்பட்டது. பயன்பாட்டுக்குத் தகுதியற்றதென்று இடித்துக் கட்ட இருந்த அந்த பழைய பங்களாவை அரசாங்கத் திணைக்களங்கள் ஊடாகப் புனருத்தாரணம் செய்து வைத்தேன். அப்பொழுது சிரேஷ;ட சட்டத்தரணியாக இருந்த திரு. டேவிட் அவர்களின் பாரியார் ‘நான் இந்தக்; கட்டடத்தை ஐம்பது வருடங்களுக்கு மேல் கண்ணுற்றிருக்கின்றேன். இத்தனை அழகாக இப்பொழுது தான் இதைக் காண்கின்றேன்’ என்று வர்ணித்தார்.
புராதன இந்து ஆலயங்களில் ஏற்படும் சர்ச்சைகளை நீதிமன்றங்களுக்குச் செல்லாது மக்களே தமது பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதற்கான யாப்பையும் ஆக்கிக் கொடுத்தேன்.
ஆனால் சிறையில் சுமார் இரு வருடங்கள் மறியலில் இருந்த மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன் போன்றோருக்கு பிணை அளித்ததன் காரணமாக உடனேயே நான் சாவகச்சேரிக்கு மாற்றலாக்கப்பட்டேன். ஏழு மாதங்களே என்னை இங்கு இருக்க விட்டார்கள். அப்போது என் அன்புக்குப் பாத்திரமான சுவாமி ஜீவனானந்தா இராம கிருஷ;ண மடத்தின் தலைவராக இருந்தார். அதே போல் நண்பர் தேவநேசன் அடிகளார் கத்தோலிக்கக் குரு முதல்வராக இருந்தார் என்று நினைக்கின்றேன். 37 வருடங்களின் பின்னர் பிறிதொரு கோலத்தில் உங்கள் முன் நிற்கின்றேன். என் இனிய மட்டு நகர் மக்கள் முன்னிலையில் மீண்டும் உரையாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். அன்றிருந்த பலர் இன்று இங்கில்லை. இன்றிருக்கும் இளைஞர் யுவதிகள் பலர் அன்று பிறக்கக் கூட இல்லை என்பது வாழ்க்கை தரும் பாடம். மாற்றம் ஒன்றே மாநிலத்தின் மாறாத தோற்றம் என்றார் புத்த பகவான்.
இன்றைய விழாவிலும் அடுத்துவரும் இரு தினங்களில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் விழாவிலும் ‘உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து கலை, இலக்கிய, கலாச்சாரப் போக்கும் சவால்களும்’ என்ற தொனிப் பொருளில் பல்வேறு உரைகள், கூத்துகள், நாடகங்கள், குறும்படம், ஆவணப்படம் என விதவிதமான கலை நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. எமது கலை, கலாச்சாரம், இலக்கியம் அனைத்திற்கும் அடி நாதமாக விளங்குவது எமது மொழி. மொழி இன்றேல் கலை இல்லை. கலாச்சாரம் இல்லை. இலக்கியம் இல்லை. எம் பாரம்பரியத்திற்கான வடிவம் மொழியே. சிங்கள மக்களுக்கும் அவ்வாறே. எனதினிய முஸ்லீம் சகோதரர்கள் மட்டும் அரசியல் காரணங்களுக்காகத் தமது வடிவம் மதம் பாற்பட்டதே மொழி பாற்படவில்லை என்று கூறி வருகின்றார்கள். ஆனால் என் கிழக்கிலங்கை முஸ்லீம் மக்கள் தமிழ் மொழியில் பேசும் போது, கவிதைகள் யாத்துப் பாடும் போது அவர்களின் கலை வடிவமும் மொழி பாற்பட்டதே என்றே சொல்லத் தோன்றுகின்றது. மொழி பேசக் கற்றதன் பின்னரே மதத்தை அறிந்து கொண்டோம். எனவே எமது முஸ்லீம் சகோதரர்களும் அடிப்படையில் தமிழ் மொழிபால்ப்பட்டவர்களே என்பது எனது கருத்து.
தமிழ் மொழியின் பயன்பாடு மற்றும் இலக்கியப் பிரயோகம் என்பன எமது இளைய சமூகத்தினரிடம் எவ்வாறான வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது என்பதையும் அதன் பயன்பாடு சுமூகமான பாதையில் செல்லாது மருவிச் செல்கின்றது எனின் அதற்கான காரணங்களையும் அவற்றை சீர்படுத்தக்கூடிய வழிமுறைகளையும் ஆராய்ந்தால் நன்மை பயக்கும் என்று கருதுகின்றேன். இந்த ஆராய்வின் போது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஊடகங்கள் ஆற்றி வரும் பங்கினையும் தொட்டுச் செல்லலாம் என்று கருதுகின்றேன்.
தமிழ் மொழியின் பயன்பாடு :
தமிழ் மொழி என்பது உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகவும், செம்மொழி என்ற சிறப்பைப் பெற்ற இலக்கிய வளங்களைக் கொண்ட மொழியாகவும் அமைந்துள்ளது.
எமது சங்க இலக்கியங்கள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. சங்க இலக்கியங்களைக் கற்பதனினூடாக அக்கால எம் முதாதையரின் நல் வாழ்க்கை முறைகள், மன்னர்களின் நீதிவழுவா ஆட்சி, வீரம், கொடை, புலவர்களின் கவித்திறன் என்பவற்றை எல்லாம் எம்மால் உணர முடிகின்றது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா’
என்றார் சோதிடக் கலை வல்லுநரான கணியன் பூங்குன்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த புறநானூற்றின் 192வது பாவாக வருகின்றது அவரின் கவிதை. அன்றைய அவரின் தமிழ் மொழியின் பயன்பாடு எமக்கு தமிழன் ஒருவனின் குணாதிசயங்கள் எவை என்பதை எடுத்துக் காட்டியது. எவ்வூராயினும் அது எம் ஊரே. மனிதர்கள் யாவராயினும் அவர்கள் எம் உறவினரே. தீதும் நன்றும், மனம் நோதலும் பின்னர் தணிதலும் பிறரால் ஏற்படுத்தி வருவதன்று; நம்மாலேயே அவை வருவன என்கின்றார். முழுப் பாடலின் சாராம்சத்தையும் முதலில் தந்துவிடுகின்றேன். தொடர்ந்து அவர் கூறுகின்றார் – சாதல் என்பது இந்த உலகில் புதியதொரு செய்தியன்று. வாழ்தல் மட்டும் இனிது என்று கருதி மகிழ்வதும் அல்லது அதே வாழ்க்கையை வெறுத்து ஒதுக்குதலும் எங்கள் மனோநிலையன்று. பேரியாற்று நீரிலே செல்லும் ஓடம் போல் எங்கள் உயிர்கள் உரிய காலத்தில் கரை சேர்வன என்று எங்கள் இலக்கியம் வாயிலாக அறிஞர்களிடம் இருந்து அறிந்து கொண்டுள்ளோம். ஆகவே செல்வச் சீமான்கள் என்பதால் அவர்களை மதிப்பதும் வறியவர்கள் என்பதால் அவர்களை இகழ்தலும் எங்கள் குணாதிசயம் அல்ல என்கின்றார் பூங்குன்றனார்.
பாரம்பரிய தமிழனின் குணாதிசயங்களை ஆராய வேண்டுமானால் இந்த ஒரு பாடலே போதும். அவர் என்ன கூறுகின்றார்? உலகியலில் அமிழ்ந்திருந்தாலும் அதற்கப்பாலான அகன்ற பார்வை கொண்டவன் தமிழன். அகிலத்தை அரவணைக்கும் அகம் கொண்டவன். யாதும் ஊரே யாவருங் கேளிர் என்றான் புலவன். தமிழன் பார்வை சம பார்வையுடையது. மரணத்தைக் கண்டு அஞ்சாத வீரம் கொண்டவன் அவன். உள்ளதை உள்ளபடி நோக்கும் மன உரவு கொண்டவன் அவன். ஏழ்மையை ஏளனஞ் செய்யாத மனோநிலை கொண்டவன். பணத்திற்கும் பதவிக்கும் மனம் பறிபோகாத தன்மை கொண்டவன் அவன். மக்களின் வெளிப் புலத்தில் மயங்காது அவர்களின் நல்லுள்ளப் பான்மையையே கருதுபவன் அவன் என்கின்றார் பூங்குன்றனார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும்; பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே – வாழ்தல்
இனிது என மகிழந்தன்றும் இலமே முனிவன்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கு மல்லல் பேர்யாற்று
நீர் வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே.
என்றார். தமிழனின் சமபார்வை, வீரம், சோரம், போகாத தன்மை போன்ற பலதையும் குறிப்பிடுகின்றார் பூங்குன்றனார்.
சங்ககாலத்தின் பின்னர் வந்த காலத்தை சங்கம் மருவிய காலம் என்போம். சங்கம் மருவிய காலத்தில் தமிழ் மொழியில் எழுந்த இலக்கியங்களினூடாக அறம் என்பது அறிவுறுத்தப்பட்டது. பல்லவர் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பக்தியை உணர்த்தி நின்றன.
சோழர் காலத்தில் தோன்றியவையே ஐம்பெருங் காப்பியங்களும், சிறு காப்பியங்களும். பின்னர் வந்த விஜயநகர நாயக்கர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் புலவர்களின் வித்துவத் தன்மையூடாக வெளிப்பட்ட சிலேடைப் பாடல்களும், ஐரோப்பியர் காலத்தில் தமிழில் வெளிவந்த சிறந்த உரைநடை இலக்கியங்களும் இருபதாம் நூற்றாண்டில் புரட்சிக்கவிஞர்களின் உணர்ச்சிக் கவிதைகளும் தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு மெருகூட்டின.
எனினும் 21ம் நூற்றாண்டில் அந்நிய மோகம், புலம் பெயர் தமிழ் மக்களின் வேற்றுமொழிக் கலாச்சாரம், ஆங்கில மொழியின் மீதான அபரிமிதமான நாட்டம், கணனிப் பாவிப்பால் மொழிக்கேற்பட்ட பாதிப்புக்கள் என்பவற்றால் தமிழ் மக்களின் மத்தியில் தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து செல்கின்றதோ என்று கவலையுடன் நோக்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் தமிழைத் தமிழாகவும் பாவிப்பதில் எந்தப் பாதிப்பும் இல்லை. தமிழில் பிறமொழிப் பிரயோகம் அல்லது ஊடுறுவல் தமிழ் மொழியை மாற்றிவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கின்றது. ஊடகங்களில் கேட்கப்படும் ஆங்கிலங் கலந்த தமிழைக் கேட்டு விட்டு சென்னையில் இன்னும் 25 வருடங்களில் தமிலிஷ; என்ற ஒரு புது மொழி உதயமாகும் என்கிறார்கள் மொழி வல்லுனர்கள்.
அடுத்து எம் இலக்கியம் பற்றி நோக்குவோம்.
இலக்கியப் பிரயோகம்:
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகளாக விளங்குபவை. இலட்சிய நோக்கம் கொண்டவை. ஆனால் இன்றைய இளைய சமுதாயம் தமிழ் இலக்கியத்தைப் புறக்கணித்து வருவது மனவருத்தத்தைத் தருகின்றது. எமது வீரவரலாற்றுக் காவியங்கள் கவனிப்பாரற்று கிடப்பில் போடப்பட்டுள்ளன. அறநூல்கள் அநாதைகள் ஆகிவிட்டன.
சங்கம்மருவிய காலத்தில் தமிழில் தோன்றிய சிறந்த இலக்கியம் திருக்குறள். அது மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு நூல். மக்கள் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என வழிகாட்டும் நூல் திருக்குறள். எந்த அளவுக்கு திருக்குறள் மாணவ மாணவியர்களினால் கற்றுணரப்படுகின்றது என்பது கேள்விக் குரியதாய் உள்ளது. எமது பாடவிதானங்களை நிர்ணயிப்போர், எமக்குப் பாடங்களைப் புகட்டுவோர். தமிழ் மொழியில் ஈடுபடும் தமிழ் நெஞ்சம் கொண்டவர்களாகவும் இருந்தால், தான் மாணவ உலக இலக்கியப் பிரயோகம் மாண்புடன் அமைவன.
தமிழ் இலக்கியப்படைப்புக்கள் இலக்கண வரம்பிற்கு உட்பட்டதாகவும், தூய தமிழ் நடையினைக் கொண்டதாகவும் அமைந்திருந்ததைத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலப்பகுதியில் தோன்றிய படைப்புக்களில் அவதானிக்க முடிந்தாலும், இன்றைய இலக்கியப் படைப்புக்கள் அவ்வாறான தன்மைகளை வெளிக் கொண்டு வருவனவாக இல்லை. இன்றைய இளைஞர் யுவதிகள் இலக்கியங்களைக் கற்க அல்லது ஏற்க மறுப்பதும் அதன்படி ஓழுகப் பின்நிற்பதும் காலத்தின் கோலமாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் புராதன எமது இலக்கியத்தினுள் புதையல்கள் பொதிந்திருக்கின்றன என்பதை மட்டும் இங்கு கூறி வைக்கின்றேன். கல்வி என்றால் ஆழமாகத் தோண்டுதல் என்று அர்த்தம். ‘கல்லுதல்’ என்றால் தோண்டுதல். ‘வி’ என்றால் அகலம் அல்லது ஆழம் எனப் பொருள்படும். தமிழ் இலக்கியத்தை ஆழமாகத் தோண்;டத் தோண்ட அறிவுப் பொக்கிஷங்கள் வெளிவருவன.
தமிழ் மொழியை ஐயந்திரிபறக் கற்காமை ஒரு பாரிய பிரச்சனையாகத் தமிழ் மாணவ மாணவியரிடையே வளர்ந்து கொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ‘ழ’கர, ‘ல’கர, ‘ள’கர வேறுபாடு புரியாத புதிராக உள்ளது பலருக்கு.
தமிழ் மொழியை சிறுவயதிலேயே விருப்புடன் கற்பதற்கு அதன் தேமதுரச் சுவையை ஊட்டிவிடுவதற்கு ஏற்ற ஆசிரியப் பெருந்தகைகளும், பண்டிதர்களும் இன்று குறைவடைந்து வருகின்றமை ஒரு பிரச்சனையாக உள்ளது.
பாடவிதான சீர்திருத்த நடவடிக்கைகளின் போது தமிழ் மொழிக்கு உரிய ஸ்தானம் வழங்கப்படாமை இன்னொரு பிரச்சனை. பாடப்புத்தகங்களில் தமிழ் மொழியானது தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் எனப் பிரித்துத் தெளிவுபடுத்தாது தமிழ் மொழி என்ற பொதுப் பெயரின் கீழ், குறிப்பிட்ட பாட வேளைகளில் மட்டும் கற்பிக்க முற்பட்டுள்ளமையால் மொழியின் விசேடங்கள் விலை போய் விடுகின்றன. வெறும் விற்பனைப் பொருளாகி வருகின்றது மொழி. என்னைப் போன்றவர்கள் கொழும்பில்ப் படித்தாலும் பற்றுடனும் பக்தியுடனும் எமது தமிழ் மொழியை நோக்கினோம். மொழி தான் எங்கள் அடையாளம் என்பதை உணர்ந்திருந்தோம். இன்று மொழி மேல் இருந்த அந்த பக்தியும் பவித்திரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பறக்கவிடப்பட்டுள்ளன, மொழி வெறும் பரிவர்த்தனை ஊடகம் மட்டுமல்ல எமது பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு எங்கள் நோக்கங்களின் கண்ணாடி என்பதை நாம் மறத்தலாகாது.
தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமையால் கணிசமான மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைக் கைவிட்டு வருகின்றார்கள். இந்த விடயம் ஆழமாக ஆராயப்பட வேண்டியுள்ளது. பிறமொழிப் புலமை மாணவர்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் தாய் மொழித் தேர்;ச்சியின்றி பிறமொழி இலக்கியத் தேடல்கள் என்பது ஒரு முழுமை பெறாத தேடலாகவே கருதப்படும். தன்னை அறிந்தே பிறரை அறிய முற்பட வேண்டும். தன் மொழி அறிந்தே பிறமொழி பாண்டித்தியம் பெற வேண்டும். இல்லையேல் நாம் கலப்பினக் கடையர்கள் ஆகிவிடுவோம்.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் இனவிடுதலை நோக்குடன் ஊடகங்கள் தொழிற்பட்டமையால் பெருமளவிற்கு அவை மொழித் தூய்மையையும் பாரம்பரிய இலக்கியப் பிரயோகத்தையும் பின்பற்றின.
சுதந்திரம் அடைந்த பின்பு மேலைத்தேய கலாச்சாரமோகம், ஆங்கிலக் கல்வித் தொடர்பு என்பன மொழித் தூய்மையை இழக்க வழிகோலின. இலக்கியப் படைப்புக்களில் மேலைத்தேய கலாச்சார பிரதிபலிப்புக்கள் காணப்பட்டமையால் இளம் சந்ததியினரும் அதற்கு இசைவாக்கம் பெற்றவர்களாக கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்புக்களில் மேலைத்தேயப் பாணியை பின்பற்றத் தலைப்பட்டார்கள். இன்று வானொலி மற்றும் தொலைக்காட்சி சாதனங்களில் இலக்கிய படைப்புக்களிலும், சாதாரண ஒலி, ஒளி பரப்பிலும் தமிழ் மொழியின் தூய்மைத்தன்மை பேணப்படாதது மொழிப் பாவனையின் குறைபாட்டிற்குக் காரணமாக காட்டப்படலாம். தமிழை இலக்கணத் தழிழாகப் பேசவேண்டும் என்று நான் கூறவில்லை. கொச்சையாகப் பேசாதீர்கள் என்று தான் கூறுகின்றேன்.
கிராமியப் பகுதிகளில் தாலாட்டு பாடல், பெண்கள் நெல் குற்றும் போது இசைக்கின்ற எளிய இசை வடிவங்கள், அருவி வெட்டுப் பாட்டு, வடமோடி தென்மோடி கூத்து வடிவங்கள் போன்ற இன்னோரன்ன இலக்கிய இசைவடிவங்கள் செவி வழியாகவே இளஞ் சிறார்களின் காதுகளில் தினமும் கேட்கப்பட்டு அவற்றில் காணப்படுகின்ற இசை வடிவம், தாள லயம் என்பன உணர்வுடன் கலந்து மொழியின்பால் நாட்டம் கொள்ளச் செய்து வந்தன. இவையெல்லாம் இன்று அற்றுப் போய்விட்டமையும் மொழிப் பிரயோக பின்னடைவுக்கு ஒரு காரணமாகக் காட்டப்;படலாம். இன்று பெண்கள் நெல் குற்றுவது இல்லை. மெஷPன்கள் பக்கவாட்டாகக் குற்றுகின்றன. பாரம்பரிய பண்ணிசை பறந்தே போய்விட்டன.
இவற்றிற்கும் மேலாக உலகமயமாக்கல் என்ற நவீன சூழல் மாற்றத்தின் ஊடாக அந்தந்தப் பகுதிகளுக்கு இருக்கக்கூடிய தனியான அடையாளங்கள், இலக்கிய பாவனை முறைகள், இயற்கையுடன் இணைந்த இலக்கியச் சுவை என்பவற்றைத் தொலைத்துவிட்டு இன்று பொதுக் கொள்கைகளின் கீழ் இயங்க முற்பட்டுள்ளோம். அது கூட எமது மொழிப் பின்னடைவுக்கு காரணமாகக் காட்டலாம் அதாவது தனித்துவத்தைத் தொலைத்து வருகின்றோம்.
அத்துடன் பழைய தமிழ் இலக்கியங்களைப் படித்துப் புரிந்து கொள்ளுதல் கடினம் என்ற மனப்பாங்கில் தமிழை ஒதுக்கி இலகுவான பாடங்களை இலகுவில் கற்க விரும்பும் பல்கலைக்கழக மாணவர்களின் போக்கு கூட தமிழ் மொழிப் பிரயோகத்தின் பின்னடைவிற்கான காரணங்களில் சில என்று அடையாளம் காட்டலாம். ஆகவே மொத்தத்தில் பல காரணங்கள் எமது மொழிப் பிரயோகத்தை வெகுவாகப் பாதித்துள்ளன எனலாம்.
சீர்படுத்தக்கூடிய வழிமுறைகள்:
இவ்வாறு மருவிச் சென்று கொண்டிருக்கும் தமிழ் மொழியின் தனித்துவத்தையும் அதன் இலக்கியப் பாவனையையும் மீண்டும் ஒரு முறை கட்டியெழுப்பி உயரிய ஸ்தானத்தில் தக்க வைக்க முயற்சிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
மொழிப் பரம்பல், மொழியாட்சி, மொழிப் பிரயோகம் தொடர்பான விடயங்களை முன்நோக்கி எடுத்துச் செல்கின்ற பாரிய பொறுப்பு கல்லூரிகளினதும் பல்கலைக்கழகங்களினதும் ஊடகங்களினதும் தலைமைகளையே சார்ந்ததாக காணப்படுகின்றன. எனவே அவை
1. பாடசாலைப் பாடப் புத்தகங்களில் சிறந்த இலக்கியப் படைப்புக்களை இடம்பெறச் செய்ய வேண்டும்.
2. மாணவ, மாணவியர்களின் இடைநிலை கற்கைநெறிகளின் போதே தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் எனப் பாட வேளைகள் பிரித்தொதுக்கப்பட்டு அவற்றிற்கான பாடத்திட்டம் பயன்படுத்தக் கூடிய நூல்களைத் தெரிவு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. தமிழ் ஆசிரியர்களின் தமிழ்ப் புலமையை விருத்தி செய்ய முன்வர வேண்டும்.
4. ஊடகங்களில் மொழிச் செம்மையானது கட்டாயமாகப் பேணப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தவும், நடைமுறைப்படுத்தவும் அவை முன்வர வேண்டும்.
மேற்படி விடயங்களில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றின் உயர் பீடங்கள் உரியவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தி இவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது வரவேற்புக்குரியது.
வெறுமனே கல்லூரிகளினிடமும், பல்கலைக்கழகங்களிடமும் ஊடக நிறுவனங்களிடமும் மட்டும் பொறுப்புக்களைக் கையளித்துவிட்டு நாம் பார்வையாளர்களாக இருக்காது மொழி வளர்ச்சியில் எம்மையும் பங்காளர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும்.
இதிகாச, புராண, இலக்கிய பேருரைகளையும், அவற்றின் இலக்கிய இலட்சிய சுவைகளையும் இளைய சந்ததியினர் தொடர்ந்து கேட்க வசதிகள் ஆக்கித்தர வேண்டும். அவற்றைக் கேட்டு இரசித்து அவற்றின்பால் ஆர்வம் கொள்ளத்தக்க வகையில் கோவில்களிலும், பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் விவாத மேடைகள், தூய இசைக் கச்சேரிகள், வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம், பட்டிமன்றம், சொல்லாடு களம் என பல்வேறு நிகழ்வுகளையும் நாட்டுக்கூத்துகள் மற்றும் வாய்மொழி நாடகங்கள் கூத்துக்கள் என்பவற்றையும் அரங்கேற்றுவது, அவற்றிற்கான எழுத்து வடிவங்களை உருவாக்கி பாதுகாப்பது, பரிசுகள் கொடுத்து கவிஞர்களைக் கௌரவிப்பது போன்றவை எமது தலையாய கடமைகளாகின்றன.
நாங்கள் கம்பன் கழகத்தினூடாகப் பல இளைஞர்களை இராமாயணத்தின் இலக்கியச் சுவையிலும் உவமான உவமேயங்களிலும் கம்பனின் தமிழிலும் ஊறச் செய்து தமிழின்பால் ஆர்வம் உள்ளவர்களாக ஆக்கினோம். தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் சுவையையும் நன்கு கற்றுத் தேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் பலரைத் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து எமது இளைஞர்களைத் தமிழ் மணம் கொண்டு மிளர்பவர்களாக ஆக்கினோம். இன்றும் யாழ் மண்ணில் கம்பன் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அன்று மணி பாகவதரால் கதாப் பிரசங்கத்திற்கு என ஒரு தனி வடிவத்தை உருவாக்கிக் கொடுக்க முடிந்தது. சின்னமணியினால் வில்லுப்பாட்டின் வரன்முறைகளையும் தெய்வீக சிந்தனைகளையும் மற்றும் புராணக் கதைகள்;, சமூகவியல் நடப்புக்களை அழகிய இசைத் தமிழில் மக்களுக்கு எடுத்துக் கூற முடிந்தது. அவர்கள் சபையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தம்மை மறந்து இலக்கியச் சுவையில் ஆழ்ந்திருக்கச் செய்ய முடிந்தது. அவர்கள் போன்று இன்றும் எம்முள் சிலர் முயற்சித்தால் ஆயிரம் இளைஞர் யுவதிகளை தமிழ் விற்பன்னர்களாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
எம் தமிழினத்தை இனி ஒன்றுபடச் செய்யப் போவது அரசியல் இல்லை. எமது தமிழ்; எமது தமிழ் இலக்கியம்; எமது தமிழ்க் கலைகள்; எமது தமிழ்ப் பாரம்பரியங்கள்; எமது தமிழ் வாழ்க்கை முறை. எமது சமூக ஒருமைப்பாடே வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் வழி அமைப்பன. இதுவரை காலமும் நாங்கள் பல விதங்களில் எமது முரண்பாடுகளையே முன்னிறுத்தி வந்துள்ளோம். நான் வேறு குடி நீ வேறு குடி என்றோம்; நான் வடக்கு நீ கிழக்கு என்றோம்; நான் விவசாயி நீ மீன்பிடிப்பவன் என்றோம்; நான் தமிழன் நீ முஸ்லீம் என்றோம். எம்மை எல்லாம் இனிமேலாவது தமிழ் மொழி ஒன்றுபட வைக்கட்டும்! தமிழ் மொழியின், அதன் இலக்கியத்தின், அதன் பாரம்பரியத்தின், அதன் இலட்சியத்தின் அழகில் இனி ஒன்றுபட முன்வருவோமாக!
வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். இறைவன் மலர்களில் எத்தனை மலர்களைப் படைத்துள்ளான்? மிருகங்களில் எத்தனை மிருகங்களைப் படைத்துள்ளான்? பறவைகளில் எத்தனை பறவைகளைப் படைத்துள்ளான்? மனிதர் மட்டும் விதி விலக்கல்ல. எங்களுள் வேற்றுமைகள் பல உண்டு. கட்சி வேற்றுமையுண்டு, காட்சி வேற்றுமையுண்டு; ஆனால் நாம் அன்பால் ஒன்றுபட முடியும். தமிழ் அழகால் ஒன்றுபட முடியும். இலக்கிய அறிவால் ஒன்று பட முடியும். அந்த ஒற்றுமையை வட கிழக்கு மாகாண மக்களாகிய நாம் யாவரும் வரவேற்போமாக!
இன்று தொடங்கும் இந்த முத்தமிழ் விழா எம்மை எல்லாம் தமிழோடு இணைக்கட்டும். தமிழ்க் கலைகளோடு இணைக்கட்டும், தமிழ் பாரம்பரியத்தோடு இணைக்கட்டும்!
நாளைய நிகழ்வுகள் சு.வித்தியானந்தன் அரங்கத்தில் நடைபெறவிருப்பதாக உங்கள் அழைப்பிதழில் அவதானித்தேன். கிராமிய மட்டங்களில் உள்ள கலை வடிவங்களுக்கு உயிர் கொடுத்தவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள். ஏழைக் குடிசைகளிலும் சமூகப் பின்னடைவுகளை உணர்ந்த குடும்ப சூழல்களிலும் காணப்பட்ட நாட்டார்பாடல்கள், கிராமிய இசை வடிவங்கள் மற்றும் கூத்து முறைமைகள் ஆகியவற்றை அவர்களின் வீடுகளுக்கும் மற்றும் கூத்துக் கொட்டகைகளுக்கும் நேரடியாகச் சென்று அவர்களுடன் அமர்ந்திருந்து அவ் இசை வடிவங்கள் மற்றும் கூத்துக்களில் காணப்பட்ட கலை வடிவங்களை எழுத்து மூலத்தில் வடித்தது மட்டுமன்றி அவர்களின் கலைகளை உலகறியச் செய்த அந்தப் பேராசிரியரைக் கௌரவிப்பதற்காக இங்கு அவரின் பெயரால் ஓர் கலையரங்கம் உருவாகியிருப்பதை நான் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக மட்டும் பார்க்காது தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் வழங்கப்பட்ட கௌரவமாகவே காண்கின்றேன்.
இன்றைய தினமும் அடுத்து வருகின்ற இரு தினங்களிலும் இங்கே நடைபெறவிருக்கின்ற நடனம், மிருதங்க இசை, வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு இசை, மொழி, இலக்கிய சிறப்புக்களையும் கண்ணுக்கு விருந்தாக அமையவிருக்கும் ஆடற்கலைகளையும் கண்டுகளித்து தமிழ் மொழியின் சிறப்பு குன்றிவிடாது அதனைப் பாதுகாப்பதற்கு அனைவரையும் முன்வருமாறு அன்புடன் வரவேற்று எனது உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.




