செய்திகள்

கூட்டமைப்பு குறித்த விமர்சனங்களுக்கு சம்மந்தன் ஐயாவே பதிலளிக்க வேண்டும்: ஆனந்தன் எம்.பி

கூட்டமைப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு சம்மந்தன் ஐயாவே பதில் அளிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பொது அமைப்புடனான சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எழுக தமிழ் பேரணியில் கூறப்படவுள்ள விடயங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவையே. காணி விடுவிப்பு, பௌத்தமயமாக்கல், அரசியல் கைதிகள் பிரச்சனை, காணாமல் போனோர் விவகாரம் என பலவிடயங்களை முன்னிறுத்தியே நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவை மற்றும் வடமாகாண சபை என்பன இரு யாப்பு சீர்திருத்த திட்ட வரைபை தயாரித்து வழங்கியிருக்கின்றன. அதிலும் இவை உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த திட்டவரைபை சம்மந்தன் ஐயா கூட பரிசீலித்து இருக்கிறார்.

எழுக தமிழ் பேரணி தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலும், கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் பேசப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்தார்கள். இந்தப் பேரணியால் குழப்பம் வருமா என்று கூட பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இதில் பிரச்சனையும் வராது. இதை பலரும் ஏற்றுக் கொண்டார்கள். இதில் கூட்டமைப்பில் இருந்து யார் யார் கலந்து கொள்கிறார்களோ தெரியாது. ஆனால் இவ்வாறான மக்கள் போராட்டங்கள் அவசியமானது. இவ்வாறான போராட்டங்கரளைக் கூட சம்மந்தன் ஐயா இராஜதந்திர ரீதியாக பயன்படுத்தி தென்னிலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகைளை முன்னிறுத்த வாய்ப்பாக இருக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்து ஒரு கட்சியாக ஒற்றுமையாக இயங்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள். அதற்கு நாம் தடையில்லை. கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் அதனை வலியுறுத்தியே வருகின்றனர். ஆனால் தமிழரசுக் கட்சி தான் அந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர்கள் இதற்கு பதில் தர வேண்டும். கூட்டமைப்பு தொடர்பாக பல விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள். நாமும் பல விடயங்களை கூட்டமைப்பின் தலைவருக்கு முன் வைத்து வருகின்றோம். அரசாங்கத்துடன் ஒரு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு கூட 6 மாதமாக கேட்டு வருகின்றோம். ஆனால் இதுவரை அதை கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா அதை செய்து தரவில்லை. ஆகவே, மக்களாகிய உங்களால் முன்வைக்கப்படுகின்ற கூட்டமைப்பு தொடர்பிலான விமர்சனங்களுக்கு சம்மந்தன் ஐயாவே பதில் அளிக்க வேண்டும். இவ்வாண்டு தீர்வு இல்லையேல் கூட்டமைப்பினர் பதவி விலக வேண்டும் எனவும் கூறுகிறீர்கள். ஆனால் அதை சம்மந்தன் ஐயா தான் செய்ய வேண்டும். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மாதிரி அவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர் தான் 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வு என்றார். நாம் அதை சொல்லவில்லை. அதற்காக நாம் பல விடயங்களை வலியுறுத்தி வந்தோம். எமது கருத்துக்களை அவர் கண்டு கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

N5