வற் வரியை அதிகரிக்கும் யோசனையை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் : மகிந்த கோரிக்கை
வற் வரியை அதிகரிப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த யோசனையானது சாதாரண மக்களை பாதிக்குமெனவும் இதனால் அரசாங்கம் இது தொடர்பாக கவனம் செலுத்தி நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் பொருட்களின் விலைகள் குறைவடைந்தாலும் இவ்வாறான வற் வரியால் இலங்கையில் மாத்திரம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும். எவ்வாறாயினும் கடந்த தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக மக்களுக்கு வழங்கிய பல்வேறு ஏமாற்று சலுகைகளுக்காக நிதியை தேடிக் கொள்ளும் நொக்கிலேயே இவ்வாறு அரசாங்கம் வற்வரியை அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளது.
இது மக்களை ஏமாற்றுவதற்காக மக்களிடமிருந்தே பணத்தை பெறும் வகையிலேயே அமைந்துள்ளது. வற் வரி வீதத்தை அதிகரிக்கவும் , நோயாளிகளிடமிருந்து வரி அறவிடுவதற்கும் , பொருட்களின் விலைகள் அதிகரிக்குமென தெரிந்தும் சாதாரண மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகளிடமிருந்து வற் வரியை அறிவிடுவதற்கும் நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை. இத்தகைய பாதிப்பான வற் வரி அதிகரிப்பு தொடர்பான யோசனையை மீண்டும் பரிசீலிப்பதற்கு போதுமான கால அவகாசம் அரசாங்கத்திற்கு இன்னும் உள்ளது. என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். -(3)




