அதிகாரப்பகிர்விலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு : யாழ்ப்பாணத்தில் அமைச்சர் மனோ
இனப்பிரச்சினை தீர்வு என்பது அதிகாரப் பகிர்வில் தான் உள்ளது. நாட்டில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இன்னும் அச்ச உணர்வுகள் உள்ளன. சிங்கள மக்களின் அச்சம் என்னவெனில் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தனிநாடு என்ற போராட்டத்திற்குள் சென்று விடுவார்களா என்பதாகும். எனவே அனை வரும் இலங்கையர் என்ற ஒரே சிந்தனையில் பயணிக்க வேண்டும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் டில்கோ விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்துந் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் புதிய யுகத்தை அறிந்து கொள்ள வேண்டும். சகவாழ்வு யுகத்தின் ஆரம்ப வருடத்தை கடந்து வருகின்றோம். வாழ்வாதாரம் அரசியல் சுகவாழ்வு மத நல்லிணக்கம் இன நல்லிணக்கம் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பில் ஊர்வலங்கள் கலந்துரையாடல்களை நடாத்திவருகிறோம்.
கடந்த ஆட்சியின் இறுதியில் ஜனநாயக செயற்பாட்டை வெ ளிப்படுத்த முடியவில்லை தெற்கில் நான் நடத்திய போராட்டத்தில் சில நபர்கள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். பல ஆர்ப்பாட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
பல சேனாக்கள் அரச ஆதரவுடன் இயங்கி குறிப்பாக பொதுபலசேனா, இராவணாபலய போன்றவை அரச ஆசீர்வாதத்துடன் இயங்கிவந்தன. கடந்த காலத்தில் சிங்கள மக்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளாது இருந்துள்ளார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.
எமது அமைச்சினால் பல கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வருகின்றோம். மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் மாகாண சபைகளில் பணியாற்றுபவர்களுடன் அரசாங்கம் மற்றும் அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிவருகின்றோம். இதேபோன்று பௌத்த துறவிகளுக்கான அமைப்பையும் அதேபோன்று சிங்கள கலைஞர்களுக்கான அமைப்பையும் உருவாக்கி வருகின்றோம்.
அது மட்டுமன்றி அடுத்த வரவு செலவுத்திட் டத்தின் பின்னர் இன்னும் ஆழமாக கலந்துரையா டல்களை மேற்கொள்ளவுள்ளோம். தற்போது துப்பாக்கி வன்முறை எறிகணைக ளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றே சொல்ல வேண்டும். இனங்கள் மொழிகள் மதங்கள் மற்றும் குழுக்கள் மத்தியில் காட்டப்படும் உண்மையான சமதானத்தை ஏற்படுத்துவதற்கு முதலில் ஐக்கியம் தேவையாகும்.
ஐக்கியம் என்பதற்கு பிரதான நிபந்தனை சமத்துவம் ஆகும். சிங்களவர்களே எழுந்து நில்லுங்கள் என்று சிங்கள பௌத்தர்களின் தலைவர் அநாகரிக தர்மபால கூறியுள்ளார். இதற்கு காரணம் சிங்கள மக்கள் குறிப்பாக சிங்கள பிரபுக்கள் சிங்கள மொழி மதங்களை விட்டு ஆங்கிலம் மற்றும் வேறு மதங்களுக்கு சென்றார்கள். இதனை தடுக்க சிங்களவர்ளே எழுந்து நில்லுங்கள் என அவர் கூறினார்.
அதேபோன்று நாங்கள் தற்போதைய காலகட்டத்தில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மேலும் பௌத்தம், இந்து கத்தோலிக்கம் என்று தனித்தனியே கூறாது ஒட்டு மொத்தத்தில் இலங்கையர்கள் என்று கூறவேண்டும். இந்த நாட்டில் பிரதானமாக மூன்று இனங்கள் உள்ளன. இவர்கள் மத்தியில் ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என உள்ளனர். அவ்வாறு முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியிலும் உள்ளது. இவ்வாறு தனித்தனியே இல்லாமல் இலங்கையர்களாக செயற்பட வேண்டும்.”
-06




