‘எழுக தமிழ்’ பேரணிக்கு அணிதிரளுங்கள்! அரசியல் மற்றும் மனித உரிமைகளுக்கான தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைப்பு
அரசியல் மற்றும் மனித உரிமைகளுக்கான தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைப்பு வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராகவும் மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலும் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகிறது. இந்த அமைப்பானது, வடக்கு, கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இலங்கை அரசின் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறைகளை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவரும் பொருட்டு, தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
எழுக தமிழ் தொடர்பில் அரசியல் மற்றும் மனித உரிமைகளுக்கான தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பினால் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இறுதிப் போரின் போது நடைபெற்ற மனிதப்பேரவலம் அல்லது இனவழிப்புக்கு வகை சொல்லக் கூடிய வகையிலேயே அதற்குரிய சர்வதேச விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதோடு அந்த விசாரணை ஆகக்குறைந்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவாறு சர்வதேச மற்றும் பொதுநலவவாய நீதிபதிகளை கொண்டதாகவும் சர்வதேச வழக்கு தொடுனர்களை உள்ளடக்கியதாக சர்வதேச நியமங்களை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதையும் எமது அமைப்பு வலியுறுத்துகிறது.
கடந்த 70 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனவழிப்பு செயற்பாடுகள் பற்றி சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே தமிழர்கள் தமக்கான இறுதித் தீர்வை எட்டமுடியும் என நாம் நம்புகின்றோம். உலகில் மிகவும் கொடூரமான மனிதப் பேரவலங்கள் நடந்தேறிய நாடுகளிலே அவற்றுக்கெதிராக விடுதலை வேண்டிப் போராடிய அரசியல் தலைமைகள் குறித்த மனிதப் பேரவலங்கள் தொடர்பில் கடுமையாக வலியுறுத்தியே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இந்த அடிப்படையில் மனிதப் பேரவலங்கள் நிகழ்ந்த நாடுகளில் பாதிக்கப்பட்ட இனங்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச உடன்படிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் முழுமையான பங்களிப்போடு மட்டுமே சாத்தியமாயின.
இதனடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணிக்கு வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து தமிழ்ச் சட்டத்தரணிகளையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும், பொது அமைப்புக்களையும் திரண்டு வந்து தமது ஒருமித்த குரலை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுகின்றோம்.
N5




