செய்திகள்

கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை

சர்ச்சைக்குறிய அன்ட்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தை உருவாக்க அனுமதித்ததால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெறுந்தொகை நிதியை கிடைக்காது தடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட 7 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகிய நிலையிலேயே நீதவான் லங்கா ஜயரத்ன அவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டிருக்கின்றார்.

 

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட எட்டு பேருக்கு எதிராக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

சட்டவிரோதமாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியமொன்றை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கியமை மற்றும் அதன் ஊடாக அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனம் 11 தசம் 4 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொண்டமை ஆகியவற்றுக்காகவே இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து கோட்டாபய ராஜபக்ச, அவன்ட்கார்ட் பாதுகாப்பு நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட எட்டு பேரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

கோட்டாபய ராஜபக்சவுடன், முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, அட்மிரல் ஜயந்த பெரேரா மற்றும், அவன்ட்கார்ட் கடற்பாதுகப்பு சேவை நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி, உள்ளிட்ட 7 பேர் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

 

இதற்கமைய இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் கோட்டாபய உட்பட ஏழுஐ பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்ட நீதவான், எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதிக்கு வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்தார்.

 

கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் கடற்படைத்தளபதிகள் மூவர் உட்பட ஏழு பேருக்கும் தலா இரண்டு லட்சம் ரொக்கம் மற்றும் பத்து லட்சம் ரூபா பெறுமதியான  இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறும் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

N5