ஜெயலலிதா குணமடைந்து வருகிறார்: ஆளுநர் வித்யாசாகர் ராவ் தகவல்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவனைக்கு சனிக்கிழமை மாலை 6.40 மணிக்கு ஆளுநர் வருகை தந்தார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ”முதல்வர் சிகிச்சை பெற்று வரும் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்றார். அங்கு முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டியிடம் கேட்டறிந்தார்.
முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு ஆளுநர் சென்றார். தம்மை அங்கு அழைத்துச் சென்றதற்காக மருத்துவர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் குழு ஆளுநரிடம் விளக்கமாக எடுத்துரைத்தது.
முதல்வர் குணமடைந்து வருகிறார் என்பதை ஆளுநர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அப்போது முதல்வருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை ஆளுநர் பாராட்டினார். முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த ஆளுநர், அவருக்கு பழங்களை வழங்கினார்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர்” என்று தெரிவிக்கப்பட்டது.
-06




