செய்திகள்

அழிக்கப்படும் அரசியல் அடித்தளத்தை காப்பாற்றுவதற்காக தமிழ் தேசியத்தை பயன்படுத்த தொடங்கியுள்ள தமிழர்கள்

ஜே.எஸ் திசநாயகம்  ‘Asian Correspondent’ இல் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் எழுச்சி பேரணியில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களில்- தமிழ்தேசம்-இறைமை- சுயநிர்ணய உரிமை போன்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன, இவை தமிழ்தேசியத்தின் அடிநாதமான விடயங்கள், மையப்பொருட்கள்.

தமிழ்மக்களின் அரசியல் அதிகார அடித்தளம் பலவீனப்படுத்தப்பட்டு வருவதை தடுக்கமுடியாத நிலையில் தற்போதைய அரசாங்கமும் அதற்கு ஆதரவளிக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் காணப்படுவதே இந்த பேரணிக்கான முக்கியகாரணம். அங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளிற்கான காரணமும் இதுவே.

தமிழ்மக்களின் அரசியல் அதிகார அடித்தளம் பலவீனப்படுத்தப்பட்டு வருவதை எதிர்கொள்வதற்கு தேசியவாதமே உதவியாக அமையும் என பேரணியின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்பிட்டபேரணிக்கு அரசியல்கட்சிகள்சிவில் அமைப்புகள் மத அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்மக்கள்பேரவை அழைப்பு விடுத்திருந்தது.தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தின் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவைக்கு இணைத்தலைவராகவுள்ளார்.

‘‘மக்கள் சக்தியின் ஆதரவு இல்லாத பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மாகாணசபை உறுப்பினர்களாலும் எதனையும் செய்துவிட முடியாது’’ என எழுக தமிழ்பேரணிக்கான காரணம் குறித்து விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

1970 களை நினைவுபடுத்தும் சூழல்

as2

எழுகதமிழ்பேரணி இடம்பெறுவதற்கான சூழ்நிலை 1970களில் இடம்பெற்ற நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

1972 இல் அரசமைப்பு சபையாக மாற்றப்பட்ட இலங்கை பாராளுமன்றம், புதிய அரசியல்அமைப்பு குறித்து விவாதித்துக்கொண்டிருந்தது, இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களாக காணப்பட்ட தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்காக சமஸ்டி அரசமைப்பிற்கான கோரிக்கையை முன்வைத்தனர். எனினும் சிங்களவர்கள் மத்திய பாராளுமன்றத்தில் அதிகாரங்களை குவிக்கும் ஓற்றையாட்சி முறையை விரும்பினர்.

சிங்கள மக்களை சமஸ்டிகோரிக்கைக்கு உடன்படச்செய்யவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து தமிழ் மக்கள் 1976 இல் அமைதியான சாத்வீக வழிகளில் பிரிவினைகோரிக்கைiயை முன்வைத்தனர்.இந்த கோரிக்கைகள் ஓடுக்கப்பட்டதன் பின்னரே ஆயுதப்போராட்டங்கள் வெடித்தன, இந்த ஆயுதப்போராட்டம் விடுதலைப்புலிகள் 2009 மே இல் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

2015 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தொடர்ந்து தேசிய ஐக்கிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதுடன் இது நல்லாட்சி அரசகொள்கைகளை பின்பற்றப்போவதாக உறுதியளித்திருந்தது.

தமிழ் மக்களின் முக்கிய பாராளுமன்ற கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக விளங்கிவருகின்ற அதேவேளை தேசிய நல்லிணக்கம் போன்ற விடயங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றது.

நம்பிக்கையளிக்காத செயற்பாடுகள்.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் இதுவரை தமிழ் மக்களிற்கு பெரிதாக எதனையும் செய்யவில்லை,அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இல்லை, பாதுகாப்பை உறுதிசெய்யவும் இல்லை.தமிழ் மக்களின் அதிகார வலுபலமிழந்து வருவதே இதற்கு காரணம் என தமி;ழ் மக்களின் ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.இதன் காரணமாக எழுக தமிழின் முக்கிய கோரிக்கையாக இதுவே காணப்படுகின்றது.

as4

குடிப்பரம்பலை குறைக்கும் நடவடிக்கைகள்

தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை குறைப்பதற்காக இலங்கையின் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஓன்று தமிழர்கள் அதிகமாக வாழும் வடபகுதியிலும்; தமிழ்மொழிபேசும் மக்கள் அதிகமாக வாழும் கிழக்கிலும் குடிப்பரம்பலை குறைப்பதாகும்.

குடிப்பரம்பலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் 1950 கள் முதல் இடம்பெற்றுவருகின்றன- அரச ஆதரவுடனான சிங்கள குடியேற்றங்களை முன்னெடுப்பதன் மூலமே இவை முன்னெடுக்கப்படுகின்றன,தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலேயே இவை இடம்பெறுகின்றன.

இவ்வாறு சிங்கள குடியேற்றங்களை ஸ்தாபித்தால், சிங்கள வாக்காளர்கள் அந்த பகுதியிலிருந்து குறைந்தளவு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படும் நிலையை உருவாக்குவார்கள், இதன் மூலம் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைத்துவிடலாம் என சிங்கள ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் இதன் காரணமாக உள்ளுராட்சி சபைகள் சிங்கள மக்களின் கரங்களிற்கு செல்லும் நிலை உருவாகும்,பெருமளவு சிங்களவர்களின் பிரசன்னம் காரணமாக, அவர்களால் தமிழ்மக்களிற்கு கலவரங்கள் போன்றவற்றின் மூலம் அச்சத்தை ஏற்படுத்த முடியும் என்பதும் இந்த குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கான நோக்கங்களாகும்.

இந்த தந்திரோபாயங்கள் இன்று வரை தொடர்கின்றன.
குடியேற்றங்கள் முலம் குடிப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகள் வேறு இரு திட்டங்கள் மூலம் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் ஓன்று முற்றுமுழுதாக சிங்களவர்கள் இடம்பெற்றுள்ள இராணுவத்தை பயன்படுத்தி தமிழ்பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை குழப்புவது –தமிழ் மக்களிற்கு சொந்தமான பாரிய நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் இராணுவம் இதனை முன்னெடுக்கின்றது, இதில் சில நிலங்களை மீண்டும் இராணுவம் தமிழ் மக்களிடம் கையளித்துள்ள போதிலும் இவ்வாறு நிலங்களை கையளிக்கும்வேகம் மந்த கதியிலேயே காணப்படுகின்றது.

இராணுவம் தனது சொந்த வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது இரண்டாவது தந்திரோபாயம் ,யாழ்ப்பாணத்தில் இராணுவம் வீதியோரக்கடைகளையும், ஹோட்டல்களையும் நடத்துகின்றது,இதன் காரணமாக தங்கள் தொழில்வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக தமிழ் வர்த்தகர்கள் முறையிட்டுள்ளனர்.மேலும் இராணுவமயப்படுத்தல் காரணமாக தமிழ் மக்கள் தங்கள்நாளாந்த வாழ்க்கையை தாங்களே முன்னெடுக்கும் நிலையும் பாதிகப்பட்டுள்ளது.

இராணுவமயப்படுத்தப்பட்ட சூழலில் பெருமளவு நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பதாலும், சொந்த வர்த்தகங்களை முன்னெடுப்பதாலும் ஸ்திரதன்மையற்ற சமூகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக பெருமளவு இடம்பெயர்ந்த மக்கள் உருவாகியுள்ளதுடன், வடபகுதியில் முதலீடு செய்யவிரும்பும் வர்த்தக முயற்சியாளர்களிற்கான நிச்சயமற்ற நிலையும் காணப்படுகின்றது.

இந்த நிலைமை மக்களை அரசியல்ரீதியாக கரிசனைநிலையில் வைத்திருப்பதுடன் புலம்பெயர்வையும் தூண்டுகின்றது. இது தமிழ் அரசியல்அதிகாரத்தின் அடித்தளம் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இதன் காரணமாகவே தமிழர்கள் தங்கள் அரசியல் தங்கள் கரங்களில் இல்லை என உணரத்தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அவர்கள் எழுகதமிழில் தங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

பௌத்த விகாரைகளை ஏற்படுத்துதல்

as6
குடிபரம்பல் மாற்றம் தமிழர்களின் அதிகாரம் குறைவடைதல் ஆகியவை குறித்த அச்சத்துடன் தொடர்புபட்ட இன்னொரு விடயமும் உள்ளது- அதுவடக்குகிழக்கில் பௌத்த விகாரைகள் உருவாக்கப்படுவதன் மூலம் தமிழ்மக்களின் இனத்துவஅடையாளங்களிற்கு சவால் விடுக்கப்படுகின்றது என்ற கரிசனையாகும்.இலங்கையின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பௌத்தர்கள் அவர்கள் அனேகமாக சிங்களவர்கள்- மேலும் இராணுவத்திலும் சிங்கள பௌத்தர்களே பெரும்பான்மையாக காணப்படுகின்றனர்.வடக்குகிழக்கில் பௌத்த கோயில்களை அமைப்பது என்பது அந்த பகுதிகள் சிங்கள பௌத்தர்களின் பிடியில் உள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு வழியாகும்.

தமிழ் தேசம் என்பதை வலியுறுத்தியுள்ளதன் மூலம் எழுகதமிழ் பௌத்தமயப்படுத்தலை எதிர்த்து சவால்விடுத்துள்ளது. தேசியவாதம் என்பது நிச்சயமாக சர்ச்சைக்குரியது, ஆனால்; வட இலங்கையில் வாழும் மக்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் பொதுவான வரலாறுகளால் பிணைக்கப்பட்டுள்ளனர்.எனினும் இதன் காரணமாக அவர்கள் மத்தியில் சாதியில் உயர்நிலை, மதபிரிவினைகள்,போன்றவற்றினால் பிரிவினைகள் உள்ளதை மறுக்கமுடியாது. அதேவேளை தாங்கள் ஏற்றுக்கொள்ளாத கலாச்சாரசின்னங்களின் அறிமுகம் குறித்த அச்சம் காரணமாக தமிழ் மக்கள் தேசியவாதத்தை நோக்கி திரும்பியுள்ளனர்.

1970 களைபோன்று குடிப்பரம்பல்,சமூக ஓருங்கிணைப்பு,மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றை எதிர்கொள்வதற்கும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கும் சமஸ்டிஅரசமைப்பே ஓரே வழி என தமிழ் மக்கள் நம்புகின்றனர்.சமஸ்டி அரசமைப்பின் மூலம் வடக்கில் தமிழர்கள் ஓரளவுகட்டுப்பாட்டை வைத்திருக்கமுடியும்,கிழக்கில் முஸ்லீம்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதன் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு

தமிழ்தேசியகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இணைந்தவடக்கு கிழக்கில் சமஸ்டி அரசமைப்பிற்கு அழைப்புவிடுத்துள்ளபோதிலும் புதிய அரசமைப்பின் கீழ் மாகாணங்களுடன் அதிகாரங்கள் வலுவான முறையில் பகிரப்படப்போவதில்லை என சந்தேகம் காணப்படுகின்றது.இதற்கு சிங்களவர்கள் சமஸ்டிமுறைக்கு வெளியிட்டுவரும் கடும் எதிர்ப்பும் ஓரு காரணம்,இலங்கையின் ஓற்றையாட்சி முறையை மாற்றுவதற்கான தேவைஎதுவுமில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு அப்பாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைமை அரசாங்கத்திற்கு எதிரான பொதுஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் பணியாற்றுவதே தமிழ் மக்களிற்கு உகந்த அரசமைப்பை உருவாக்குவதற்கான வழி என கருதுகின்றது.

எழுகதமிழ் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்,‘‘உத்தேச புதிய அரசமைப்பு குறித்து கட்சி ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொண்டுள்ள தருணத்தில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விக்னேஸ்வரன் உட்பட தமிழ்தேசிய கூட்டமைப்பின் குறிப்பிடத்தக்க அளவு மூத்த உறுப்பினர்கள் சுமந்திரனின் இந்த நிலைப்பாட்டை நிராகரித்துள்ளனர், பின்பற்ற மறுத்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சமஸ்டி குறித்த பேச்சுக்களில் வெற்றிபெறாது என அவர்கள் கருதுவதே இதற்கு முக்கிய காரணம். அவர்களின் இந்த அவநம்பிக்கை முக்கியமான பல கேள்விகளுடன் தொடர்புபட்டது.

மூன்று முக்கிய கேள்விகள்
அரசாங்கத்துடனான பேச்சுக்கள் குறித்து ஏன் இரகசியம் கடைப்பிடிக்கப்படுகின்றது?சமஸ்டிக்கு ஆதரவளிக்காத பெரும்பான்மை சிங்களபாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள அரசமைப்பு நிர்ணயசபையில் எவ்வாறு சமஸ்டியை ஏற்றுக்கொள்ளும் அரசமைப்பு நிறைவேற்றப்படும்?கருத்து வெளியிடுபவர்களில் 70 வீதமானவர்கள் சிங்களவர்களாக உள்ள நிலையில் எவ்வாறு இது தொடர்பான சர்வஜனவாக்கெடுப்பு வெற்றியளிக்கும்.

சிங்கள ஆதிக்கத்தை நிரந்தரமாக்குவதற்காக தங்கள் அரசியல் அதிகாரம் விட்டுக்கொடுக்கப்படுவதை பார்த்து ஏமாற்றமடைந்துள்ள தமிழர்களின் உணர்வுகளின் வெளிப்பாடே எழுக தமிழ். அரசமைப்பு நிர்ணயசபையில் உள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அர்த்தபூர்வமான சமஸ்டி அரசமைப்பைபிற்கான அழுத்தங்களை கொடுக்கவில்லை என தமிழ்மக்கள் கருதுகின்றனர்.

இதன்காரணமாக தமிழ்தேசியஉணர்வுகளை அடிப்படையாகவைத்து மக்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதே அரசியல்அதிகாரத்தை தக்கவைப்பதற்கான வழியென எழுகதமிழ் அமைப்பின் ஏற்பாட்டாளர்களும் அதன் ஆதரவாளர்களும் கருதுகின்றனர்.

அரசாங்கமும் தமிழ்தேசியகூட்டமைப்பும் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை கைவிடும் பட்சத்தில், தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பாரிய மக்கள்போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான தொலைநோக்கும் உறுதிப்பாடும்,வலுவும் எழுகதமிழ் ஏற்பாட்டாளர்களிற்கு உள்ளதா என்பதே முக்கிய கேள்வி?