கூட்டு ஒப்பந்த காலத்தில் சிக்கல் : 2 வருடங்களுக்கா? சில மாதங்களுக்கா?
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 730 ரூபாவாக அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே இணக்கம் காணப்பட்டுள்ள போதும் கூட்டு ஒப்பந்தத்தை வழமைப்போல் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதா அல்லது அந்தக் காலப் பகுதியை குறைத்துக்கொள்வதா என இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்த காலம் ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே இந்த நிலைமையேற்பட்டுள்ளது.
இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நிலுவை சம்பளத்தை வழங்குவதா இல்லையா எனவும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையெனவும் அது தொடர்பாகவும் அதன்போதே தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிடப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பின் பிராகரம் ஒரு நாள் சம்பளமாக 670 ரூபாவும் வேலை நாட்களில் 75 வீத வரவுக்கு 60 ரூபாவும் என 730 ரூபா வழங்கப்படும். அதனுடன் இணைந்தததாக ஈ.பீ.எப் மற்றும் ஈ.டீ.எப் ஆகியவற்றுக்கு 75 ரூபாவும் வழங்கப்படும். இந்த அதிகரிப்பின் பிரகாரம் 805 ரூபா சம்பளம் தொழிலாளிக்கு கிடைக்கும். -(3)




