பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் தீர்வு: தமிழ்க் கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனை
பிரிபடாத மற்றும் பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற யோசனையை புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசி யலமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழிநடத்தல் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் அரசிலயமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழிநடத்தல் குழுவானது எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடும் என்று அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கும் இந்த பிரதான வழிநடத்தல் குழுவில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். அந்த வகையில் இந்த குழுவானது புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பில் மூன்று பிரதான விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
அதாவது தேர்தல் முறை மாற்றம், இனப்பிரச்சினை தீர்வுத் திட்டம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றம் ஆகிய முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் இந்த பிரதான வழிநடத்தல் குழு ஆராய்ந்து வருகின்றது. அதன்படி ஏற்கனவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ள பிரதான வழிநடத்தல் குழுவானது தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
கடந்த 07 ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிரதான வழிநடத்தல் குழுவானது ஆராய்ந்திருந்தது. அதன்படி அண்மையில் இரண்டாவது தடவையாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய இந்த பிரதான வழிநடத்தும் குழுவானது தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றது.
இதன்போதே பிரிபடாத மற்றும் பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான வழிநடத்தல் குழுவுக்கு முன்வைத்திருக்கிறது. இது தொடர்பில் எதிர்வரும் கலந்துரையாடல்களின் போது ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
:06




