நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பிலான தடுமாற்றங்கள்
வீரகத்தி தனபாலசிங்கம்
இலங்கையில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளின் பிரதான நோக்கங்களில் முதன்மையானது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்றே கூறப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரையில் அந்த ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திற்குள் தெளிவான நிலைப்பாடுகள் இல்லை என்பதே உண்மையாகும். தடுமாற்றமான கருத்துக்கள் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்ட வண்ணமேயிருக்கின்றன.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழு அதன் அறிக்கையைக் கையளித்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. 20 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவின் தலைவரான மூத்தசட்டவாதி லால் விஜேநாயக்க சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்திருந்த நேர்காணலில் ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைக்கு ஆதரவாகவும் மக்களிடமிருந்து கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த ஆட்சிமுறையை முற்றாகவே ஒழிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, சில தரப்பினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையில் அதிகாரங்களைக் குறைத்து சில தளர்வுகளைச் செய்துவிட்டு அந்தப் பதவியைத் தொடர்ந்து வைத்திருக்கலாம் என்ற அபிப்பிராயத்தையும் கொண்டிருக்கிறார்கள். சகல விடயங்கள் தொடர்பிலும் மக்கள் வெவ்வேறு வகையான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். நாம் அவற்றையெல்லாம் எந்தவிதமான மறைப்புமின்றி அரசியலமைப்பு சபையின் பரிசீலனைக்கு சமர்ப்பித்திருக்கின்றோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, கடந்தவாரம் நியூஸிலாந்துக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒக்லாண்ட் நகர கவுன்சிலில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது ‘அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா’ என்று நியூஸிலாந்தில் வாழும் இலங்கையர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதற்காகவே நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்’ என்று குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைக்குப் பதிலாக எத்தகைய ஆட்சிமுறையைக் கொண்டுவருவது என்பது குறித்து தாங்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் நிறைவேற்று அதிகாரங்கள் முழுமையாக பாராளுமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டுமா அல்லது தேசிய பாராளுமன்றம், செனட்சபை மற்றும் மாகாண சபைகளை உள்ளடக்கியதான ஒரு கூட்டு அமைப்பு முறைக்கு அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என்றும் பிரதமர் நியூஸிலாந்தின் தலைநகரில் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இருவாரங்களுக்கு முன்னர் யாழ் நகரில் தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான மகிந்த சமரசிங்க, ‘முதலமைச்சரின் அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளுக்குப் பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னரும் கூட, பிரிவினைவாத உணர்வுகளை உற்சாகப்படுத்துகின்றவர்களுக்கு ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பெரும்வசதியாக அமைந்துவிடும். அதனால், தீர்மானம் குறித்து மறுசிந்தனை தேவைப்படுகிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்றவர்களினால் தோற்றுவிக்கப்படுகின்ற அச்சுறுத்தலை விவேகமுடைய எந்தவொரு அரசியல் கட்சியும் அலட்சியம் செய்துவிடமுடியாது இனரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு எதிரான ஒரே பாதுகாப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையே இருக்கிறது என்றும் அமைச்சர் சமரசிங்க கூறியிருந்தார்.
இதைவிட, அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் ஜனாதிபதி ஆட்சிமுறையை முற்றாக ஒழிக்காமல் அதை கூடுதலான அளவுக்கு ஜனநாயகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக மொத்தத்தில், இவ்வருட இறுதிக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கக்கூடிய சாத்தியம் குறித்து அரசாங்கத் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நிலையிலும் ஜனாதிபதி ஆட்சிமுறையின் எதிர்காலம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் மத்தியில் தெளிவான கருத்து இன்னமும் வெளிப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கை அண்மைக்காலத்தில் தோன்றிய ஒன்றல்ல. ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1978 அரசியலமைப்பில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய நாளில் இருந்தே அதை ஒழிக்கவேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது.
பிரதானமாக முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இதை வலியுறுத்தி நின்றன. என்றபோதிலும், அவர்களால் எந்தவிதமான உருப்படியான போராட்டங்களையும் நடத்தக்கூடியதாக இருக்கவில்லை.
ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகப்படுத்தப் போவதாக 1977 ஜூலை பாராளுமன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டிருந்த போதிலும், அத்தகையதொரு ஆட்சிமுறையின் மீதான விருப்பத்தின் காரணமாகத்தான் அக்கட்சியை அத்தேர்தலில் நாட்டுமக்கள் அமோகமாக ஆதரித்து ஆட்சிக்குக் கொண்டுவந்தார்கள் என்று எவரும் கூறமுடியாது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.
திருமதி பண்டாரநாயக்கவைப் பொறுத்தவரை, ஆரம்பம் முதலிருந்தே ஜனாதிபதி ஆட்சி முறைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்த போதிலும் 1988 டிசம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக வருவதற்கு அவர் விரும்பினார். ஆனால், ஜனாதிபதி ஜயவர்தனவின் அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசவிடம் திருமதி பண்டாரநாயக்க தோற்றுப் போனார்.
ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களான லலித் அத்துலத் முதலியும் காமினி திசாநாயக்கவும் அவருடன் முரண்பட்டுக் கொண்டு கட்சியைவிட்டு வெளியேறி நிறைவேற்று அதிகார ஜனாபதிபதி ஆட்சிமுறைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். தங்களை அனுசரித்துப் போகக்கூடிய ஜயவர்தன அதேபதவியில் ஒரு தசாப்தகாலமாக இருந்தபோது அவர்கள் இருவருக்கும் அதே ஜனாதிபதி பதவிமீது எந்த வெறுப்பும் ஏற்படவில்லை. எதிர்காலத்தில் அப்பதவியை அடைவது குறித்த கனவும் அவர்களிடம் இருந்தது. தங்களது எதிர்கால அரசியல் மேம்பாட்டுக்கு எதிரானவராக பிரேமதாச இருந்த காரணத்தினாலேயே அவருக்கு எதிரான பிரசாரத்தின் ஒரு அங்கமாக அத்துலத் முதலியும், திசாநாயக்கவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை எதிர்க்கத் தீர்மானித்தார்கள். இதில் அவர்கள் திருமதி பண்டாரநாயக்கவுடனும் அணிசேர்ந்தார்கள்.
ஜனாதிபதி பிரேமதாச ஒருபோதுமே ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருக்கவில்லை. அந்தப் பதவிக்கு இருந்த மட்டுமீறிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பலம்பொருந்திய ஆட்சியாளராக அவர் விளங்கினார்.

epa04907823 Sri Lanka?s 8th Parliament in its maiden session at Sri Jayewardenepura Kotte in Colombo, Sri Lanka, 01 September 2015. The maiden session of Parliament began following the General Elections held on 17 August where the United National Party won a majority number of seats, though not an absolute majority. The party is to form a National Government with the main opposition Sri Lanka Freedom Party of which President Maithripala Sirisena is the chairman. EPA/M.A.PUSHPA KUMARA
தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே 1993 மே தினத்தன்று பிரேமதாச தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற (அன்றைய பிரதமர்) டி.பி.விஜேதுங்க ஒன்றரை வருடங்களே பதவியில் இருந்தார். ஜனதிபதி ஆட்சி முறைக்கு எதிராக அவர் ஒரு போதும் கருத்து வெளியிட்டதில்லை
17 வருடகால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்குப் பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதையே பிரதான வாக்குறுதியாக முன்னிலைப்படுத்திக் கொண்டு 1994 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்தவுடனே ஒரு வருட காலத்தில் அப்பதவியை ஒழிப்பதாகக் கூறினார். ஆனால், இறுதியில் 11 வருடங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியிலிருந்த அவர், மேலும் ஒரு வருடத்துக்கு அதிகாரத்தில் இருக்கமுடியவில்லையே என்ற கவலையுடன் தான் கதிரையிலிருந்து இறங்கினார்.
அதற்குப் பிறகு 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக் ஷ, தனது முதலாவது பதவிக்காலத்தின் முடிவில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனால், 2010 ஜனவரியில் இரண்டாவது பதவிக்காலத்துக்காக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஜனாதிபதியாக ஒருவர் இரு பதவிக்காலங்களுக்கு மாத்திரமே பதவிவகிக்க முடியும் என்ற அரசியலமைப்பு ஏற்பாட்டை ரத்துச் செய்வதற்கு திருத்தமொன்றைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேறச் செய்தார்.
தொடர்ந்தும் எத்தனை பதவிக்காலத்துக்கென்றாலும் அதிகாரத்தில் இருப்பதே அவரின் நோக்கமாக இருந்தது..
ஆனால், அவரின் சுமார் பத்து வருடகால ஆட்சியில் அதிகரித்திருந்த முன்னென்றுமில்லாத வகையிலான எதேச்சாதிகாரம், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு, ஊழல், முறைகேடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கப் படைகள் பெற்ற வெற்றிகாரணமாக தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக் ஷ பெரும் செல்வாக்குக் கொண்டவராக இருந்தபோதிலும், 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் அவர் தனது அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடமே தோல்வியடைய வேண்டியேற்பட்டது. இது அண்மைக்கால சரித்திரம்.
ராஜபக் ஷவின் ஆட்சியில் எதேச்சாதிகாரம் முன்னென்றுமில்லாத வகையில் அதிகரித்து குடும்ப ஆட்சியும் வலுப்பெற்றிருந்த காரணத்தால், மீண்டும் 2015 ஜனவரி 8 தேர்தலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்ற கோஷம் முக்கியத்துவம் பெற்றது.
அத் தேர்தலில் வெற்றிபெற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்ற புதிய ஜனாதிபதி சிறிசேன, அங்கிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இனிமேல் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார்..
இப்போது அவரின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையின் எதிர்காலம் குறித்து தடுமாற்றமான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த 38 வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு நாட்டின் ஆட்சி நிறுவனக் கட்டமைப்பில் எதேச்சாதிகாரப் போக்கை படிப்படியாக வளர்த்துவந்திருக்கிறது. ராஜபக் ஷ ஆட்சியில் அது ஒரு உச்ச நிலைக்கு வந்தது. இந்த அரசியலமைப்பை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை அடிக்கடி எழுந்தபோதிலும் அடிப்படையில் அந்தக் கோரிக்கை குறிப்பாக, ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகாரத்திலிருந்த ஜனாதிபதிகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட கட்சி அரசியல் நோக்கங்களின் விளைவானதே என்பதை நாமெல்லோரும் அனுபவத்தின் வாயிலாக கண்டிருக்கிறோம். அரசியல் சந்தர்ப்பவாத அடிப்படையிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்த கோரிக்கை எழுப்பப்பட்டு வந்ததன் விளைவாக அந்தக் கோரிக்கை ஒருபோதுமே பரந்து பட்ட முறையில் ஒரு வெகுசனக் கோரிக்கையாக மேலெழும்ப முடியவில்லை என்பதே உண்மையாகும். ஜனாதிபதி ஆட்சிமுறையை முற்றாக ஒழிக்காத வகையில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால், நாட்டுமக்கள் கொதித்தெழுவார்கள் என்று எவராலும் கூறமுடியுமா?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக் கோரிக்கைக்கு ஒருபோதுமே மானசீகமான ஆதரவை வழங்கியது கிடையாது. தனது நெருங்கிய உறவுக்காரரான ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசியல் கொள்கைகள், செயற்பாடுகளைப் பற்றி எப்போதுமே பெருமையாகப் பேசிக்கொள்ளும் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல்களில் தன்னால் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்ற சூழ்நிலைகளின் கீழ் எதிரணியின் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட வேளைகளில்தான் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு கோரிக்கைக்கு ஆதரவானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றமுடியாமல் போகுமேயானால் விக்கிரமசிங்க ஒன்றும் கவலைப்படப் போவதில்லை.
ஆரம்பத்திலிருந்தே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சுதந்திரக் கட்சிக்குள்தான் அந்த ஆட்சி முறை தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற பல அரசியல்வாதிகள் இன்று இருக்கின்றார்கள் என்பது இன்னொரு அரசியல் விசித்திரம்.





