செய்திகள்

இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக உரிமையை கோராமல் இருக்க முடியாது: சித்தார்த்தன்

“எழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும் கவனயீர்ப்பு போராட்டமே. தீர்வொன்றை வழங்கக் கூடாது என கண்டியிலிருந்து பேரணி நடத்த முடியுமாயின் தீர்வொன்றை வழங்குங்கள் எனக் கூறி பேரணி நடத்துவதற்கு எமக்கு உரிமை இல்லையா?” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வியெழுப்பினார்.

வடக்கில் சிங்களவர்களை குடியேறவேண்டாம் என நாம் கூறவில்லை. நாம் எந்தவொரு மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. எனினும், எமது மக்களின் தனியார் காணிகளில் மேற்கொள்ளப்படும் பலவந்தமான பௌத்தவிகாரை அமைக்கும் செயற்பாடுகளையே எதிர்க்கின்றோம். தென்பகுதியில் உள்ள இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக எமக்கான உரிமையைக் கோராமல் இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

எழுக தமிழ் பேரணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஊடகம் ஒன்றுக்குக் கொடுத்துள்ள பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருக்கின்றார். இந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பாவது:

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் எழுக தமிழ் பேரணியை வெற்றியாகவே பார்க்கின்றனர். எழுக தமிழ் ஆரம்பிப்பதற்கு முன்னரே இது வெற்றியளிக்கும் என்பது தெளிவானது. கிளிநொச்சி உட்பட வடக்கின் சகல பகுதிகளிலும் மக்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்து முழு ஒத்துழைப்பு வழங்கியதுடன், அவர்களாகவே பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். நீண்ட காலத்துக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையான மக்கள் ஒன்றுகூடிய பேரணியென்றால் இதுவாகத் தான் இருக்கும்.

ஆரம்பம் முதலே நாம் தெளிவாகக் கூறியிருந்தோம், அதாவது அரசாங்கத்துக்கோ அல்லது வேறு எவருக்குமோ எதிரான போராட்டம் இது அல்ல எனச் சொல்லியிருந்தோம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கவனயீர்ப்பு போராட்டமேயிது. சாதாரண மக்கள் மத்தியிலும் இது திருப்திதருவதாகவே காணப்படுகிறது. கடந்த தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்களும் அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்கள். அரசின்மீது எதிர்பார்ப்பு இருந்தபோதும், இலகுவில் செய்யக்கூடிய விடயங்கள் பலவற்றை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டபோதும் அவற்றை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை.

எமக்கு தென்பகுதியில் உள்ள அரசியல் நிலைமைகள் புரியாமல் இல்லை. இருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக இவ்வாறான கவனயீர்ப்பொன்றுக்குச் செல்ல முடிவெடுத்தோம். அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்வதில் கவனம் எடுக்க வேண்டும். அரசியலமைப்புத் தயாரிக்கும் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச தரப்பில் உள்ள அமைச்சர்கள் முன்னபின் முறனான கருத்துக்களைக் கூறிவருவதால் இதில் கூட திருப்தியற்ற தன்மை காணப்படுகிறது. சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்று கொடுக்கப்பட வேண்டும் என்பதே பல தசாப்தங்களாக தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகும்.

இரண்டு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை நடத்துவதால் தற்பொழுது கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்ற அபிப்பிராயம் பலரிடம் உள்ளது. இந்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டால் இதற்குபிறகு நீண்டகாலத்துக்கு அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் பேரணியை நடத்தியிருந்தோம்.

அரசாங்கம் சாதகமான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கும் நிலையில் இதனைக் குழப்பும் வகையில் எழுக தமிழ் பேரணி அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு தென்பகுதியில் இருக்கிறது. அப்படியாயின் தெற்கில் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, அரசாங்கம் ஜனநாயக சூழலை ஏற்படுத்தியிருப்பதால் அதனை முன்னெடுப்பதற்கான உரிமை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறாயின் எமக்கு அந்த உரிமை இல்லையா?

இரண்டாவது விடயம், நாம் அதில் எடுத்தக் கொண்ட விடயங்களைப் பார்த்தால், பௌத்த விகாரைகள் அமைப்பது. நாம் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் பலாத்காரமாக தனிப்பட்ட மக்களின் காணிகளைப் பிடித்து அவற்றில் பலாத்காரமாக, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி பௌத்த விகாரைகள் அமைக்கப்படக்கூடாது என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம். இது ஒரு பாரதூரமான விடயம். பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் முயற்சிகளே இவை. கும்பிடுவதற்கும் ஆளில்லை, பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் கனகாம்பிகை குளம் அம்மன்கோவிலின் காணியை எடுத்து அதில் பௌத்த கோவில் அமைப்பது நியாயமற்றது. இதனை நாம் அமைதியாக எடுத்துச் சொல்கிறோம்.

இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. தென்பகுதியில் உள்ள சிங்கள இனவாதிகள் குழப்புவார்கள் என்பதற்காக நாம் எமது உரிமைகளைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்டே அவர்கள் செய்யாத நிலையில் கேட்காமல் இருக்கவும் இயலாது. நாங்கள் 60 வருடங்களுக்கு மேலாகக் கேட்டே வருகின்றோம்.:06