42வது தேசிய விளையாட்டு விழாவும் தீர்வு குறித்து எழுந்த சந்தேகமும்
-நரேன்-
2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்களின் உரிமைக்கான ஆயுத வழிப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமக்கு இனி யார் காவலர்கள் என்கின்ற ஒரு குழப்பமான சூழல் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் ஜனநாயக அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்ட அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே இருந்தது. இதனால் தமிழ் மக்கள் தமது தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேல் நம்பிக்கை வைத்து அதனை நம்பி செயற்படத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மனித குலமே வெட்கித் தலைகுனியும் அளவுக்கு மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்களுடன் கூடியதாக ஆயுதவழிப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்தா மீது வெறுப்பும் அதிருப்தியும் கொண்டிருந்த தமிழ் மக்கள் அவரை எப்படியாவது ஆட்சியில் இருந்து மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தனர். இறுதிப் போரின் போது இராணுவத்தின் கட்டளையிடும் அதிகாரியாக இருந்து போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு பங்காளியாகவிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மஹிந்தாவுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய போது மஹிந்தா மேல் கொண்டிருந்த அதிருப்தி காரணமாக வேறுவழியின்றி வெல்லக் கூடிய நிலையில் இருந்த பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். மீள்குடியேற்றம் இடம்பெறாது மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் இருந்த நிலையில் இந்த தேர்தல் நடைபெற்றிருந்தது.
நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால் தான் உஙகள் இடங்களுக்கு போக முடியும் என்ற கோசம் கூட மஹிந்தாவால் முன்வைக்கப்பட்டிருந்த நேரத்தில் எல்லாவிதமான நெருக்கடிகளையும் கடந்து பொன்சேகாவுக்கு அதிகபடியாக வாக்களித்தனர். இங்கு பொன்சேகா என்பது அல்ல மஹிந்தாவை மாற்ற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எண்ணமாக இருந்தது. தமிழ் மக்களின் எழுச்சி இருந்த போதும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியான வெளிப்பாடு தான் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல். மேற்குலகம், இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் ஆதரவுடன் போரை முடிவுக்கு கொண்டுவந்திருந்த மஹிந்தா, போர் முடிந்த பின்பு மேற்குலக நாடுகளுக்கு எதிராக ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் கொண்டிருந்த இடதுசாரி கொள்கையின் மூலம் புரட்சியை ஏற்படுத்திய நாடுகளுடன் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டிற்கு அமைவாக தனது தொடர்பை வலுப்படுத்தியதால் மேற்குலகத்தின் எதிர்ப்பைப் பெற்றுக் கொண்டார். இதனால் மேற்குலக நாடுகளால் ஐ.நாவில் கூட இலங்கைக்கு எதிராக தமிழர் நலனை முன்னிறுத்தி அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. ஆனால் மஹிந்தா அதனை ஏற்றுக் கொள்ளது ஐ.நா தீர்மானங்களையும் புறந்தள்ளியதால் மேற்குலகம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தது. வெற்றிவாதத்தில் மிதந்த மஹிந்தா அணியை பிளவுபடுத்தி மேற்குலகம் சார் நிலைப்பாடடில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தது. மஹிந்தாவை மாற்ற வேண்டும். அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்த தமிழ் பேசும் மக்கள் இதனை பயன்படுத்தி ஆட்சி மாற்றத்திற்காக முழுமையாக வாக்களித்தும் இருந்தனர். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட இந்த தேர்தல் நடைபெற்ற சூழல் வேறுபட்டிருந்தது. மீள்குடியேற்றம் முழுமைபெறாத போதும் மக்கள் தமது சொந்த சொந்த மாவட்டங்களுக்கு சென்றிருந்தனர். தமது தமது மாவட்டங்களில் பெருவாரியாக வாக்குகளை வழங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற புதிய ஆட்சியை ஏற்படுத்தினர். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்ட போதும் பாராளுமன்றத்தில் பச்சை, நீலம், வீடு என வேறுபாடு இல்லாமல் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்திருந்தது. எதிர்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி என தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தது. இதன் மூலமாவது தமக்கு நன்மை கிட்டிவிடும் என மக்கள் நம்பியிருந்த நிலையில் அந்த நம்பிக்கை கானல் நீராகுமா என்ற எண்ணமே தற்போது எழுந்துள்ளது.
தேர்தல் காலத்தின் போது மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக நீடித்து இருக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்ற பொருள்பட வாக்குறுதிகளை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அதை அதையொட்டிய கருத்துக்களை தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் வெளிப்படுத்தியிருந்தனர். எதிர்கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருந்த போது வலிவடக்கில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று தமிழ் மக்கள் பிரச்சனைகளில் அக்கறையுள்ளவராகவும் தன்னைக் காட்டியிருந்தார்.
தேர்தல் முடிந்த பிற்பாடு இந்த நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது வெளிப்படுத்தி வரும் கருத்துக்கள் முன்னர் அவர்கள் கூறிய கருத்துக்கள் தேர்தல் கோசங்களா என்று எண்ணத் தோன்றியுள்ளது. ஐ.நாவால் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிப்பொறிமுறை தொடர்பான தீர்மானத்தின் நான்கு தூண்களாகிய உண்மையை கண்டறிதல், பொறுபடபுக் கூறல், நிவாரணம் வழங்கல், இவைகள் மீண்டும் எற்படாமல் இருக்க கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தல் என்பவற்றில் தற்போது உண்மையை கண்டறிதல், பொறுப்பு கூறல், நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்தல் என்பவற்றுக்காக வெறும் பதிவுகளை மட்டும் மேற்கொள்ளக் கூடிய வரம்பெல்லைக்குள் எந்தவித அதிகாரமும் அற்ற காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர், மரணமடைந்தோருக்கான சான்றிதழ்கள், இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இந்நிலையிலேயே 42வது தேசிய விளையாட்டு விழா அண்மையில் யாழ் துரையப்பா விளையாட்டு மைதனத்தில் இடம்பெற்றது. இலங்கையில் முதன்முதலாக வடக்கில் இடம்பெற்ற ஒரு தேசிய விளையாட்டு விழாவாக இது அமைந்திருந்தது. இன, மத, பேதங்களை கடந்து அனைத்து விளையாட்டு வீரர்களும் சிறப்பாக தமது ஆளுமைகளையும், திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிகழ்வின் இறுதித் தினத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூடம்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன், எழுக தமிழ் மூலம் மக்களை திரட்டி தமிழ் மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். இதன்போது முதலமைச்சர் தனது எழுக தமிழ் உரை தொடர்பில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அதிர்வலைகளை போக்கும் வகையில் உரை நிகழ்த்தியிருந்ததுடன் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் முன்வைத்திருந்தார். அதன் பின்னர் உரை நிகழ்திய எதிர்கட்சித் தலைவர் ‘நாடானது பிரிக்கப்படாமலும் பிளவுபடாமலும் நாட்டிற்கு எவ்விதமான குந்தகமும் ஏற்படாமலும் ஒரே நாட்டுக்குள் ஒருமித்து ஒற்றுமையாக, சமத்துவமாக, சமாதானமாக, சமரசமாக வாழக்கூடிய ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களும் ஆதரவு வழங்கவேண்டும். அத்துடன் நாட்டில் வாழ்கின்ற மக்களிடையே ஒரு கருத்து நிலவுகின்றது. அதாவது இந் நாடு சுதந்திரமடைந்த போதும் இந்நாட்டில் வாழ்கின்ற பெரும்பாண்மை இன மக்களே சுதந்திரமடைந்தார்களே தவிர ஏனைய சிறுபாண்மை இனங்களைச் சேர்ந்த மக்கள் சுதந்திரமடையவில்லை என்பதாகும். இதற்கு காரணம் இதுவரை நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனங்கள் அனைத்து மக்களுடைய ஆதரவைப்பெறாமல் நிறைவேற்றப்பட்டமையேயாகும். எனவே, அனைத்து இனங்களினதும் இறைமை அரசியலமைப்பில் இடம்பெறவேண்டும்’ எனவும் கூறினார்.
அவர் பேசி அமர்ந்த நிலையில் அங்கு உரை நிகழ்திய ஜனாதிபதி ‘எமது நாடு 9 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. அந்த 9 மாகாணங்களையும் எமது நாட்டை இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்களோ அல்லது தற்போது ஆட்சி செய்பவர்களோ மேற்கொள்ளவில்லை. இது எமது நாட்டை செய்த செய்த பிரித்தானியர் ஏற்படுத்திய பிளவாகும். அதனால் பிரித்தானிய ஜோர்ஜ் மன்னரால் உருவாக்கப்பட்ட பிளவுகளை முன்னிலைப்படுத்திக் கொண்டு முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. இந்த பிளவு நாட்டின் உள்ளக அபிவிருத்தியை வலுப்படுத்ததும் பொருட்டும் அரச நிர்வாக செயற்பாடுகளை இலகு படுத்திக்கொள்ளும் நோக்கிலுமே ஏற்படுத்தப்பட்டது. முதலில் கோல்புரூக் கெமரன் யாப்பின் ஊடாக 1833 ஆம் ஆண்டில் இலங்கை 5 மாகாணங்களாக மாத்திரம் பிரிக்கப்பட்டு பின்னர் 1839 ஆம் ஆண்டளவில் 9 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. அதனால் அந்த பிளவுகளை கருத்திற்கொண்டு செயற்படுவதை விடுத்து நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் முன்னகர்ந்துச் செல்ல வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டில் ஒரு தேசிய இனம் என்னும் அடிப்படையில் சகல அதிகாரங்களினுடன் கூடிய வடக்கு, கிழக்கு இணைந்த சமஸ்டித் தீர்வை கோரி நிற்கும் நிலையில் ஜனாதிபதி தெரிவித்திருக்கும் இந்த கருத்துக்கள் தமிழ் மக்களின் தீர்வு குறித்து சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அமர்ந்திருந்த மேடையில் வைத்து பலநூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மத்தியில் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. அனைத்து இனங்களினதும் இறைமை பாதுகாக்கப்படும் வகையில் தீர்வு அமைய வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தியதுடன் அதனை தமது பிரதேசங்களுக்கு சென்று கூற வேண்டும் என கருத்து தெரிவிக்க, ஜனாதிபதி அதேமேடையில் வைத்து மாகாணப் பிளவுகள் வேண்டாம். இலங்கையராக இருப்போம் எனக் கூறியுள்ளார்.
அந்த வீரர்கள் எதைப் போய் தமது பகுதிகளில் கூறுவது? இந்த இருவரினதும் கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கின்றன. இருவரும் தீர்வு தொடர்பில் தெளிவுபடுத்தவில்லை. ஆகவே, நிரந்தர தீர்வு குறித்து அரசாங்கமும், கூட்டமைப்பும் தெளிவாக இதுவரை பேசாத நிலையே உள்ளது என்பதனை இதன் மூலம் அவதானிக்க முடிகிறது. புதிய அரசியலமைப்பு வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைவதாக கூறப்படுகிறது. ஆனால் பிரச்சனைக்குரிய இரு இனங்களினதும் தலைவர்களாக உள்ள இருவரும் தீர்வு தொடர்பில் மாறுபட்ட கருத்து உள்ளநிலையில் வரவிருக்கும் புதிய அரசியலமைப்பு ‘ஐ.நாவின் நிலைமாறுகால நீதிபொறிமுறைக்கு அமைவாக இனமுரண்பாடுகள் மீண்டும் எற்படாமல் இருக்க கட்டமைப்பில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது’ என்பது கேள்விக்குறியே..?
N5




