செய்திகள்

அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதில்லை : ஊழல் எதிர்ப்பு குரல் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படாதிருப்பது ஏன் என்பது தொடர்பாக ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவு படுத்த வேண்டுமென ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று கொழும்பில் சீ.எஸ்.ஆர் மண்டபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்கவே இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
சீ.ஐ.டி , எப்.சீ.ஐ.டி மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்றதா என சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதபதி கருத்து வெளியிட்டுள்ளார். அப்படியென்றால் அந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ன இதனுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதனை அவரே கூற வேண்டும். மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அவர் இந்த தகவல்களை வெளியிட வேண்டும்.
2015 ஜனவரி 8ற்கு பின்னர் எப்.சீ.ஐ.டிக்கு 100ற்கும் மேல் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இதில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவை தொடர்பாக விசாரணைகள் நடப்பதில்லை. இதனால் ஏதோவொரு வகையில் அரசியல் தலையீட்டில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதனை புரிந்துக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. இதன்படி அரசாங்கத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க , லக்‌ஷ்மன் யாப்பா , ராஜித சேனராட்ன , துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகள் பல உள்ளன. அது மட்டுமன்றி பிரதமரின் நண்பரான முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு எதிராகவும் முறைப்பாடுகள் உள்ளன. ஆனால் இவை தொடர்பாக விசாரணைகள் நடப்பதில்லை. ஜனாதிபதி கூறுவதை போல் இதற்கு அரசியல்தான் காரணமா என்பதனை ஜனாதிபதியே தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்த விசாரணைகளை ஆரம்பிக்கவும் அவர் நடவடிக்கையெடுக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)