அரசுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் உயர் இராணுவ புலனாய்வு அதிகாரி! மைத்திரி என்ன செய்வார்?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உருவாகியிருக்கும் முறுகல் நிலைக்குக் காரணமாக இருப்பவர் உயர் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரே எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவரை உடனடியாக பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியை வலியுறுத்தியிருக்கின்றன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவுள்ள பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலே என்பவருடைய கட்டுப்பாட்டிலேயே ஜனாதிபதி தற்போது செயற்படுவதாக 2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியான பேராசிரியர் சரத் விஜயசூரிய பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
சரேஷ் சாலே அந்தப் பதவியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். அதேபோல பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியும் தற்போதைய விசாரணைகளுக்குத் தடையாக இருப்பதனால் அவரும் பதவி நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இராணுவப் புலனாய்வு அதிகாரியான சுரேஷ் சாலேயின் பணயக் கைதியாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் பேராசிரியர் சரத் விஜயசூரிய, தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்துக்ள் தற்போது உருவாகியிருக்கும் பதற்ற நிலைமைக்கு குறிப்பிட்ட அதிகாரியே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் குற்றச் செயற்பாடுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி விரும்பினால், உடனடியாக சுரேஷ் சாலேயைக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கும் பேராசிரியர், பாதுகாப்புப் படைகள் அனைத்தும் ஜனாதிபதிக்கு எதிராகச் செயற்படுவதாக ஜனாதிபதியை சாலே நம்பவைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும், போர் முடிவடைந்த பின்னரும் விடுதலைப் புலிகளுடனான விவகாங்களைக் கையாள்வதில் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் முக்கிய பங்களிப்பை சுரேஷ் சாலே வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.:06




