செய்திகள்

தமிழர் கலை கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் மழுங்கடிக்கும் ஓர் ஆயுதமாக கல்விக்கான தேவைப் புறக்கணிப்பு

ஜதுர்சிகா பாஸ்கரன்

வன்னிப்பகுதி பாடசாலைகளில் நிலவும் துறைசார் பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படாமையினால் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்களின் கல்விநிலை பெரிதும் வீழ்ச்சியடையடைந்து செல்கின்றது.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்ட்டு ஏழு ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆனால் இதுவரைக்கும் மீள்குடியேறியுள்ள மக்களின் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன.

இலங்கையில் மிகவும் வறிய நிலையில் காணப்படுகின்றது என ஆய்வுகளின் மூலம் சொல்லப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி நிலையும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்;தே செல்கின்றது என்றே பலரும் தெரிவித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ள 126 பாடசாலைகளில் தற்போது இருபத்தி ஏழாயிரத்து 970 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் இப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது இன்றுவரை தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கீழ் உள்ள 65 பாடசாலைகளிலும் துணுக்காய் கல்வி வலயகத்தில் உள்ள 61 பாடசாலைகளிலும் எண்பது வீதமான பாடசாலைகள் பாடரீதியான ஆசிரியர் பற்hறக்குறைகளுடன் இயங்கிவருகின்றன.

இதனால் அந்த மாணவர்களின் கல்வி நிலை மிக மோசமான ஒரு நிலையை நோக்கியே செல்கின்றது.

ஆசிரியர் பற்றாக்குறைகள் தொடர்பில் 2009ம் ஆண்;டு மீள்குடியமர்வின் போது அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் பாடசாலைகளின் தேவைகள் பூர்த்தி செய்யவேண்டிய நிலை ஆசிரியர் விடுதிகள் இன்மை போக்குவரத்து வசதிகள் இன்மை என்று பல்வேறு காரணங்கள் அது சார்ந்த அதிகாரிகளினாலும் அரசியல் வாதிகளினாலும் சொல்லப்பட்டன.

மீள்குடியமர்வு இடம்பெற்று ஏழு ஆண்டுகள் கடந்த போதும் இன்றுவரையும் அதே காரணங்களை காட்டமுனைவதுடன் ஆசிரியர்களை   பின்தங்கிய பிரதேசங்களை நோக்கி நகர்த்துவதற்கு பின்னடித்து வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள துணுக்காய் ஒட்டுசுட்டான் மாந்தைகிழக்கு கல்விக்கோட்டங்களில் உள்ள 61 பாடசாலைகளில் கிட்டத்தட்ட 90 வீதமான பாடசாலைகள் பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறையையே எதிர்கொள்கின்றன.

தற்போது பாடசாலைகளில் ஓரளவு ஆசிரியர் விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ன. ஓரளவு போக்கவரத்து வசதிகளும் காணப்படுகின்றன.

பாடசாலைகளில் பல்வேறு பௌதீக வளத்தேவைகள் இருந்தபோதும் ஆசிரியர்களின் வசதி கருதி வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரிய விடுதிகள் பல மில்லியன்ரூபா செலவில் அமைக்கப்பட்டன.

ஆனால் இவ்வாறு அமைக்கப்பட்ட ஆசிரிய விடுதிகள் இன்னும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.

துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் ஓரளவு ஆசிரிய விடுதி வசதிகள் காணப்படுகின்றபோதும் அதில் ஆசிரியர்கள் தங்காத நிலையில் கால்நடைகளின் உறைவிடங்களாகவும் பறவைகளின் வாழ்விடமாகவும் காணப்படுகின்றன.

IMG_9557

பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப குறிப்பிடப்பட்ட சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் உள்ள போதும் அது பாடரீதியான ஆசிரியர்களாக இல்லாத நிலை காணப்படுகின்றது.அதாவது கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை அதிகளவில் காணப்படுகின்றன.

மாந்தை கிழக்கு கல்விக்கோட்டத்தின் சிறாட்டிகுளம் பனங்காமம் மூன்றுமுறிப்பு விநாயகபுரம் பொன்னகர் நட்டாங்கண்டல் பாண்டியன்குளம் சிவபுரம் போன்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் துணுக்காய் கல்விக்கோட்டத்தில் உள்ள தென்னியங்குளம் கோட்டைகட்டியகுளம் அம்பலப்பெருமான்குளம் ஆலங்குளம் துணுக்காய் கல்விளான் புத்துவெட்டுவான் ஐயன்கன்குளம் பழையமுறிகண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைகளுக்கு அமைவாக ஆசிரியர்கள் உள்ளபோதும் இன்று வரை முக்கிய பாடங்களுக்கான பாடரீதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் இந்தப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பல சாதனைகளை படைத்த பாடசாலைகளாக காணப்பட்டன.

ஆனால் இன்று சவால்களை எதிர்கொள்ளும் பாடசாலைகளாகக் காணப்படுகின்றன.

மாந்தைகிழக்குகல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாண்டியன்குளம் ஆரம்ப வித்தியாலத்தில் 210 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றபோதும் இங்கு பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படாத நிலையல் உள்ளது.

 அதாவது கடந்த 2011ம் ஆண்டு பாண்டியன்குளம் மகா வித்தியாயலயம் ஆயிரம் பாடசாலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு ஆரம்ப வித்தியாலயம் தனியான பாடசாலையாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

ஆனால் இன்றுவரைக்கும் ஆரம்ப வித்தியாலயத்திற்கு ஆங்கிலம் கணிதம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இது தொடர்பாக இந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பல தடவை வலயக்கல்விப்பணிமனை கோட்டக்கல்வி அலுவலகம் வரை சென்று தமது கோரிக்ககைகளை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை அரசியல் வாதிகளிடமும் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கின்றனர். ஆனால் யாரும் செவி சாய்ப்பதாக இல்லை. பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக புதிய ஆசிரிய நியமனங்கள் வருகின்றபோது இது போன்ற பாடசாலைகளுக்குரிய ஆசிரிய நியமனங்களை வழங்கும் போது மறு நாளே குறித்த ஆசிரியர் மாகாண சபை அல்லது அரசியல் வாதிகள் காலைப்பிடித்து மறுநாளே இடமாற்றம் பெற்று வேறு இடங்களுக்குச் சென்று விடுவார்கள்.

IMG_9561

கடந்த வாரம் குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் வலயக்கல்விப் பணிமனைக்கு சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்தபோதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாகவும் அதற்கான சாட்டுப்போக்குகளை சொல்லி அந்த பெற்றோர்களுக்கு பதிலளித்துள்ளனர்.

2011ம் ஆண்டு தரம் 1 இல் இணைக்கப்பட்ட மாணவன் தற்போது தரம் 5 இல் கல்வி கற்றுவரும் போது அந்த மாணவன் அடிப்படை ஆங்கில அறிவைக்கூடப்பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை இல்லை. இவ்வாறு பின் தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் எல்லோருமே கல்வியறிவு கொண்டவர்களாக இல்லை.

ஓரளவு வசதிபடைத்தவர்கள் தங்களுடைய எதிர்காலம் குறித்தும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் வசதி வாய்ப்புக்களைத் தேடி வவுனியா யாழ்ப்பாணம் என குடிபெயர்ந்துள்ளனர்.

ஆனால் அடிப்படை பொருளாதாரக்கட்டமைப்புக்கள் கூட இல்லாத மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களே இவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் இவ்வாறான பாடசாலைகளின் ஆசிரிய ஆளணிகள் நிவர்த்தி செய்யப்படாத நிலையில் இந்த மாணவர்கள் மேலதிக கல்வியை பெறுவதற்குரிய தனியார் கல்வி வசதிகள் இல்லை. அவ்வாறு வசதிகளைப் பெறுவதாக இருந்தால் இருபது கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் அதற்குரிய போக்கவரத்து வசதி இல்லை. அல்லது பிள்ளைகளின் பாதுகாப்பு பொருளாதார நெருக்கடி என பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன.

வடக்கு மாகாண கல்வியமைக்சு தற்போது பாடசாலைகளின் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதில்லை. நகர் புறப்பாடசாலைகளிலே தங்களுடைய பார்வையையும் கவனத்தையும் செலுத்துகின்றன.

இதற்கு அண்மையில் வெளியிடப்பபட்ட தரம் 05 புலமைப்பரிசில் பரிட்சைப்பெறு பேற்றில் துணுக்காய் வலயத்தின் வீழ்ச்சி தெரியவருகின்றது

பின் தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு அல்லது வேறு பாடசாலைகளுடன் இணைப்பு பாடசாலைகளாக இயங்கவைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. வட மாகாணத்தில் தற்போது 98 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் கீழ் உள்ள இரண்டாம் செங்கல் படை கிராமத்தில் இயங்கிய செங்கல்படை அ.த.க பாடசாலை கடந்த ஆண்டு ஆசியர்கள் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டு கோயில்குளம் பாடசாலையுடன் இணைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து வசதிகள் இன்மையால் குறித்த பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் பலர் கல்வியை விட்டு இடை விலகியுள்ளனர்.

இது போன்ற மூடபபட்ட பாடசாலைகளில் கல்வி கற்ற கூடுதலான மாணவர்கள் பாடசாலைக்கல்வியை விட்டு இடைவிலகியுள்ளனர்.

ஓவ்வொரு பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கொண்டிருக்கின்ற கனவுகள் நிறைவேற்றுவதற்கு கல்வி மிக முக்கியமானது. கல்வியினூடாகவே கலை பண்பாடு பாரம்பரியம் என்பன கட்டியெழுப்பப்படுகின்றன.

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வழங்கப்படும் இலவசக்கல்வியை பூரணப்படுத்;துவதற்கு போதியளவு சட்டங்கள் உள்ளபோதும் அதற்கான வசதி வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.

வன்னிப்பாடசாலைகளில் நிலவும் ஆளணி மற்றும் பெதீக தேவைகளில் ஆளணித்தேவை என்பதைப் பூர்த்தி செயவதற்கு மத்திய அரசோ அல்லது மாகாண அரசோ அக்கறை காட்டுவதில்லை என்றும் தமிழர் கலை கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் மழுங்கடிக்கும் ஓர் ஆயுதமாக கல்விக்கான தேவைப்புறக்கணிப்பு அமைந்துள்ளது என்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே பின் தங்கிய பிரதேச மாணவர்களின் அடிப்படைக்கல்விக்கு அது சார்ந்த அதிகாரிகள் அரசியல் வாதிகள் அக்கறை செலுத்தி அவர்களின் எதிர்காலக்கனவுகளை நிறைவு செய்ய வேண்டிய தேவையுள்ளவர்களாக செயற்படவேண்டும்.