2,623 கோடி ரூபா இராணுவ உதவியை சீனா வழங்குகிறது: உடன்படிக்கை கைச்சாத்து
இலங்கைக்கு சுமார் 2623 கோடி ரூபா (120 மில்லியன் யுவான்) பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கவும், ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்கவும் சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் நடந்த இரண்டாவது இலங்கை – சீன பாதுகாப்புக் கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டு அதிகாரிகள் திணைக்களத்தின் பிரதித் தலைவர் அட்மிரல் சன் ஜியாங்கூ தலைமையிலான சீன பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும் இந்த பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தன.
இந்தக் கலந்துரையாடலில், உயர்மட்ட பரிமாற்றங்கள், இராணுவ உதவிகள், பயிற்சி வாய்ப்புகள், பாதுகாப்புத்துறைசார் சிந்தனைக் குழாம்களின் ஒன்றுகூடல், புலனாய்வு ஒத்துழைப்பு, கூட்டு இராணுவப் பயிற்சிகள், பாதுகாப்புக் கருத்தரங்குகளில் பங்கேற்றல், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஒததுழைப்புத் தொடர்பாகவும் இருதரப்பும் மீளாய்வு செய்தன.
சீனா- இலங்கை இடையிலான ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூணாக இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கும் இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளன. இந்தப் பாதுகாப்புக் கலந்துரையாடலின் முடிவில், சிறிலங்காவுக்கு சுமார் 2623 கோடி ரூபா (120 மில்லியன் யுவான்) பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்குவதற்கும்,ஆழ்கடல் ரோந்துக் கப்பல் ஒன்றை வழங்குவதற்குமான இரண்டு புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.
இந்த தகவலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. எனினும், சீன இராணுவத் தலைமையகம் வெளியிட்டிருந்த தகவலில், இந்தப் பாதுகாப்புக் கலந்துரையாடலில் சிறிலங்காவுக்கு 2623 கோடி ரூபா இராணுவ உதவிகளை அளிப்பது மற்றும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டது பற்றிய எந்தக் குறிப்பும் இடம்பெற்றிருக்கவில்லை.:06




