பலரின் தலைகள் துண்டிக்கப்பட்டதை பார்த்துவிட்டோம்-
கார்டியன்
ஈராக்கிய படையினரும் குர்திஸ்படையினரும் மௌசுல் நகரை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மௌசுலின் பொதுமக்கள் வீடுகளிற்குள் முடங்கியுள்ளதுடன் தங்கள் வீதிகளில் நடக்கப்போகும் உக்கிரமான சமரிற்கு தயாராகிவருகின்றனர்.
அனைவரும் வீடுகளிற்குள் முடங்கியுள்ளனர்,வேறு என்ன செய்வது என எங்களிற்கு தெரியவில்லை, ஐஎஸ் அமைப்பினர் மோட்டார் சைக்களில் நடமாடுகின்றனர் அவர்களிடம் சிறிய மற்றும் நவீன துப்பாக்கிகளை காணமுடிகின்றது, திங்கட்கிழமை முதல் விமானதாக்குதல்கள் இடம்பெறுகின்றன, விமானங்களை தொடர்ச்சியாக வானில் காண முடிகின்றது என அந்த பகுதியை சேர்ந்த 35 வயது அபுமுகமட் தெரிவித்துள்ளார்.
விமானகுண்டு வீச்சு ஐஎஸ் இலக்குகளை இலக்குவைத்து மிகவும் துல்லியமாக இடம்பெறுகின்றது,அதேவேளை ஐஎஸ் மக்கள் மத்தியில் பதுங்கதொடங்கியுள்ளனர்,எனது உறவினர் ஓருவரின் வீட்டிற்கு அருகில் அவர்கள் பாரிய வெடிமருந்து களஞ்சியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மௌசுல் மக்கள் கடந்த இரண்டு வருடங்களில் நிறைய அனுபவித்துவிட்டனர்,ஐஎஸ் கூடிய விரைவில் இங்கிருந்து அகற்றப்படுவதையும் ஈராக் இராணுவத்தின் வருகைகையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் பலரின் தலைகள் துண்டிக்கப்படுவதையும், பலர் உயரமான கட்டிடங்களில் இருந்து தள்ளிவிடப்படுவதையும் பார்த்துள்ளோம், ஆளுநர் அலுவலகத்தின் மாடியிலிருந்து ஓருவர் தள்ளிவிடப்படுவதை நானே பார்த்தேன், அதனை பார்த்த பின்னர் பல வாரங்களாக நான் உறங்கமுடியாமல் அவதியுற்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானங்கள் பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கோரும் துண்டுபிரசுரங்களை வீசியுள்ளன,மக்களை ஐஎஸ் பிடியிலிருந்து தப்பியோ முயலவேண்டாம் எனவும் துண்டுபிரசுங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தப்பியோடுவது சாத்தியமற்ற விடயம் என்கிறார் முகமட், நகரத்தை சுற்றி அகழிகள் வெட்டப்பட்டுள்ளன என அவர் தெரிவிக்கின்றார், மக்களை மௌசூலில் இருந்து வெளியே கொண்டு போய்ச்சேர்ப்பதற்கு என ஓரு கும்பல் இயங்குகின்றது அவர்கள் பெருமளவு பணத்தை கேட்கின்றனர், இதேவேளை தப்பியோட முனையும் தங்கள் உறுப்பினர்களை ஐஎஸ் சுட்டுக்கொல்வதாக நாங்கள் அறிகின்றோம் என குறிப்பிடுகின்றார் அவர்.




