நல்லாட்சி அரசாங்கம் இந்து மதத்திற்கு எதிராக செயற்படுகின்றதா..? சிவசக்தி ஆனந்தன் எம்.பி கேள்வி
அநுராதபுரம் முத்துமாரி அம்மன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்ததோடு நல்லாட்சியில் இந்து மதத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அநுராதபுரத்தின் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான விஜயதசமி அன்று ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு வருகைதந்த அடியவர்கள் விரப்பட்டுள்ளதோடு சிலைகளும் சிதைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதோடு, சம உரிமையையும், இன நல்லிணக்கத்தையும் உருவாக்குவோம் என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களின் ஆணையின் உதவியோடு நல்லாட்சியை முன்னெடுப்பதாக கூறி தேசிய அரசாங்கமாக தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்கள்.
தற்போது இருபது மாதங்களாகின்ற நிலையில் சிறுபான்மை தேசிய இனங்களின் உடனடி பிரச்சினைகளுக்கு தீர்ப்பளிக்கும் எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப் படவில்லை. ஏற்கனவே இணக்கம் ஏற்பட்டிருந்ததன் அடிப்படையில் ஆங்காங்கே நில விடுவிப்புக்கள் இடம்பெற்று வருகின்றதே தவிர புதிதாக எதுவும் நடைபெறவில்லை.
அவ்வாறு இருக்கையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் பௌத்த மதத்தை திணிக்கும் வகையில் விகாரைகள் அமைக்கப்படுகின்றன. சிங்கள குடியேற்றங்கள் விஸ்தரிக்கப்படுகின்றன. இராணுவ முகாம்கங்கள் அவ்வாறே காணப்படுவதோடு நிரந்தரமாக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு கடந்த ஆட்சியில் இருந்த அதே நிலைமைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. மறுபுறத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அதிலும் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும். பௌத்த மதத்தை வலுவாக பாதுகாப்பதற்கு, தேவையானால் மகா சங்கத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தி சட்டங்களை உருவாக்குவோம் என வடக்கில் பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.
ஆகவே புதிய அரசியலமைப்பிலும் சிறுபான்மை இனங்களையும், அவர்கள் பின்பற்றும் மதங்களையும், நசுக்குகின்ற செயற்பாடுகளையும், புதிய வடிவத்தில் மேற்கொள்ள போகின்றார்கள் என்ற கருத்து வெகுவாக எழுந்துள்ளது. இந்தவிதமான நிலைமைகளுக்குள் தற்போது அநுராதபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சிலைகள் சிதைக்கப்பட்டு அங்கு வருகை தந்த அடியார்கள் மீதும் மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
தற்போதைய அரசியலமைப்பில் கூட அனைத்து மதங்களையும் பின்பற்றுவதற்கு அனைவருக்கும் சுதந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சாசனத்தில் இலங்கை கைச்சத்திட்டுள்ளதன் பிரகாரம் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் கடப்பாடும் அரசாங்கத்திற்கு உள்ளது.
அவ்வாறு இருக்கின்ற போதும் இவ்வாறு இந்து மத வழிபாட்டுத் தலம் மீதும் அதனை பின்பற்றும் மக்கள் மீதும் துணிச்சலாக தாக்குதல் நடத்தப்படுகின்றது. தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் தற்போது வரையில் எந்த ஒருவம் கைது செய்யப்படாது இருக்கின்றார்கள்.
நல்லாட்சியிலும் இவ்வாறான நிலைமை நீடிக்கின்றமை எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. நல்லாட்சி இந்து மதத்தை அச்சுறுத்தும் இலக்கை கொண்டிருக்கின்றதா என்ற கேள்வியையும் எழும்புகின்றது.
கடந்த கால ஆட்சியாளர்களை போன்று இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகள், மோசடிகளை ஒழித்து மறைத்து பாரபட்சமாக செயற்படாது பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டியது மிகமிக அவசியமாகின்றது.
இதனை தாமதமின்றி முன்னெடுத்து மிலேச்சத்தமான செயலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதோடு எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
N5




