லண்டன் பொதுக்கூட்டத்தில் விக்னேஸ்வரன் புலிகளின் கொடியை ஏற்ற கேட்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் விஷமத்தனமான செய்தி
கிங்ஸ்ரன் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்கள் இடையே ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையை செய்வதற்காக லண்டன் சென்றிருந்த வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் நேற்று மாலை லண்டன் ஹரோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் கொடியை ஏற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் புலிக்கொடியை ஏற்றுமாறு விக்னேஸ்வரன் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் அவ்வாறு புலிக்கொடி ஏற்றினால் இந்த கூட்டத்தில் தான் உரையாற்ற முடியாது என்று விக்னேஸ்வரன் கூறியதாகவும் முன்பக்க தலைப்பு செய்தி வெளியிட்டுள்ள இந்த நாளிதழ் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்பு ஒன்றே இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் விழா ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும் இது ஒரு விஷமத்தனமான பிரசாரம் என்றும் தெரிவித்தவுடன் எந்த ஒரு அமைப்பும் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்யவில்லை என்றும் பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கூட்டத்துக்கு பிரித்தானியாவில் உள்ள எல்லா அமைப்புகளும் ஆதரவு வழங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் கொடி தொடர்பாக எந்த சந்தர்ப்பதிலும் முதலமைச்சருடன் பேசப்படவில்லை என்றும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் கூட விடுதலைப்புலிகளின் கொடியுடன் வரவில்லை என்றும் கூறியதுடன் இந்த கூட்டம் வட மாகாண முதலமைச்சரை கௌரவிக்கும் நோக்குடனும் கிங்ஸ்ரன் கவுன்சிலுடன் வட மாகாண சபை செய்துகொண்ட ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை தொடர்பில் பொதுமக்களுடன் கருத்து பகிர்ந்துகொள்ளும் நோக்குடன் ஒழுங்குசெய்யப்பட்ட ஒன்றே என்றும் குறிப்பிட்டனர்.
நேற்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையின் தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளையின் தலைவர் சட்டத்தரணி ஆர்.டி. இரத்தினசிங்கம் உட்பட பல அமைப்புக்களையும் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு முதலமைச்சரை கெளரவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




