சுலக்ஷனை பின் தொடர்ந்துள்ள மர்ம கும்பல் : மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
யாழில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரான சுலக்ஷன் மீது குழுவொன்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டிருந்த போதும் அது தொடர்பாக அந்த மாணவன் உயிரிழக்கும் வரை பொலிஸாரினால் விசாரணை நடத்தப்பட்டிருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பாக தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்களை திரட்டி வருவதாகவும் இதன்படி நேற்று அந்த மாணவனின் வீட்டுக்கு சென்று மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் தகவல்களை பதிவு செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ”லங்கா தீப” சிங்கள செய்தி இணையத்தளத்தில் செய்தியொன்று வெளியாகியுள்ளது.
அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நான்கு மாதங்களுக்கு முன்னர் சுலக்ஷன் மீது ”ஆவா” என அடையாளப்படுத்திக்கொண்ட குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிக்கா உடகமவின் ஆலோசனைக்கமைய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுலக்ஷன் என்ற மாணவனுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் “ஆவா” என்ற குழுவினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அவர் உயிரிழக்கும் வரையிலும் பொலிஸார் அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்ற தகவல் குறித்து விசாரணைகளின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
உடம்பில் துப்பாக்கி சூட்டு அடையாம் கண்டுபிடிக்கப்பட்ட மாணவர் சுலக்ஷன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பிரிவு மாணவராவார். யாழ்ப்பாணத்தில் விருது பெற்ற நடிகரான அவர் பிரதான கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் படத்தில் 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண திரைப்படத்தில் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
சுலக்ஷனின் சகோதரி ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், அவர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முதல் நாள், வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம் என பாதுகாப்பு பிரிவு என கூறிக் கொள்ளும் குழுவொன்றினால் சுலக்ஷனுக்கு தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஒரு முறை பாதுகாப்பு பிரிவு என கூறிக் கொள்ளும் குழுவினரால் 2009ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்படும் சுலக்ஷனின் சகோதரர் தொடர்பில் தகவல் கோரி அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல்களின் உண்மை மற்றும் பொய் தொடர்பிலும், தற்போது வரையில் கிடைத்துள்ள மேலும் பல விசேட தகவல்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழு சுலக்ஷனின் வீட்டிற்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. -(3)




