மகிந்தவின் சதி தொடர்கிறது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் எனினும் அதனை முறியடித்து சுதந்திரக் கட்சி முன்னேறி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் வரலாற்றினைப் பார்க்கும்போது சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன. மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிளவுபடுத்தும் நோக்கில் தற்போதும் மகிந்த செயற்பட்டு வருகிறார்.
எனது அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இருந்துகொண்டு எனக்கு எதிராக மகிந்த செயற்பட்டுள்ளார். எனது சுயசரிதையை தற்போது நான் எழுதி வருகிறேன். இந்த சுயசரிதையில் மகிந்த இந்தக் கட்சியை பிளவுபடுத்துவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் தொடர்பில் விபரமாக எழுதியுள்ளேன்.
பொதுத் தேர்தலையடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கட்சியை பகுதியளவில் பிளவுபடுத்தி சுதந்திரக் கட்சியினர் சிலரை தனக்கு பின்னால் வைத்துள்ளார். கட்சியிலிருந்து யார் மகிந்த பக்கத்துக்குச் சென்றாலும் எமக்கு கவலையில்லை. குறிப்பாக கட்சியிலுள்ள கொள்ளையர்களும் கொலைகாரர்களும் அவரது பக்கத்துக்குச் சென்றால் இந்த சுதந்திரக் கட்சியினை சுத்தப்படுத்துவது எளிதான காரியமாகிவிடும்.
ராஜபக்ஷவின் பின்னால் சென்றுள்ள சுதந்திரக் கட்சியை எண்ணி நாம் கவலையடையப் போவதில்லை. அத்தோடுஇ அவர்கள் கட்சியை விட்டுச் சென்றால் சுதந்திரக்கட்சி அழிந்துபோய்விடாது.
எமது கட்சிக்கு மீண்டும் வர விரும்புபவர்களை நாம் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வோம். மீண்டும் எமது கட்சிக்குள் வர விரும்பாதவர்களை எண்ணி நாம் கவலையடைய வேண்டிய அவசியம் எமக்கில்லை.
எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளதென்பதை கட்சியின் மூத்த தலைவர் என்ற வகையில் நான் கூறுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாம் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்பதற்காக எமக்கு இலாபம் ஏற்படுமே தவிர எவ்விதத்திலும் நட்டம் ஏற்பட வாய்ப்பில்லை.
தற்போது எமக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திஇ நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆட்சியமைக்காவிட்டால்இ எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகியிருக்கும். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் காரணத்தினாலேயே எமது கட்சியினருக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைத்தன. இவ்வாறு கிடைத்த பதவியினூடாக எமக்கும்இ மக்களுக்கும் சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.
n10




