பல்கலைக்கழக மாணவர் கொலையும் தமிழர் தலைமையின் பொறுப்பும்
யதீந்திரா
சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையே இன்றைய நிலையில் இலங்கை அரசியலின் பேசு பொருளாக இருக்கிறது. அப்படுகொலை இடம்பெறும் வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வே அரசியல் அரங்கின் பேசுபொருளாக இருந்தது. இப்போது சடுதியாக ஒரு பதட்டநிலை தோன்றியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் தெற்கிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இது ஒரு நல்ல விடயம் என்பதில் சந்தேகமில்லை இந்த கொலைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது போன்றே தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட படுகொலைகள் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும் தெற்கில் விழிப்புணர்வு ஏற்படுமாக இருந்தால் அது இன்னும் சிறப்பான ஒன்றாக இருக்க முடியும்.
மேற்படி இரு மாணவர்களது கொலை சிறிலங்கா பொலிசாரால்தான் மேற்கொள்ளப்பட்டது என்பது ஏற்கனவே பொலிஸ் தரப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம். இது எவ்வாறு நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு மிகவும் எளிமையான பதில் : கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு குழுக்களை கடுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் இரவு நேர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மாணவர்கள் அவ்வழியால் சென்றனர். பொலிசார் நிறுத்தி பரிசோதிக்க முயற்சித்தனர் ஆனால் மாணவர்களோ நிற்கவில்லை அதனால் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் அது மாணவர் ஒருவர் மீது பாய்ந்ததால் அவர்கள் சென்று கொண்டிருந்த உந்துருளி விபத்துக்குள்ளாகி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் அமைர்சர் சாலக ரத்னாயக்க குறிப்பிட்டிருக்கும் தகவல் மிகவும் ஆச்சரியமானது. பொலிசார் வான் நோக்கி சுட்டனர் அது தவறுதலாக மாணவர்கள் மீது பட்டுவிட்டதாம். மேல் நோக்கி சுடப்படும் துப்பாக்கிக் குண்டுகள் மீண்டும் கீழ் நோக்கி திரும்பி வந்து சரியாக மாணவர்கள் மீதே பாய்ந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாளருக்கான விருது கொடுப்பது என்று எவரேனும் தீர்மானித்தால் அவர்கள் இந்த அமைச்சரை தெரிவு செய்யலாம். இத்தனைக்கும் பொலிஸ் மா அதிபரே பொலிசார் தவறிழைத்திருப்பதாக தெரிவித்திருக்கின்ற நிலையிலேயே அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இந்த விடயத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு அமைச்சரின் கூற்றாகத் தெரியலாம் ஆனால் இதற்குள் மறைந்திருக்கும் அரசியல்தான் இங்கு கவனிக்க வேண்டியது. பாதுகாப்பு தரப்பினரை எந்த வகையிலும் குற்றம்சாட்டக் கூடாது என்னும் தெற்கின் மனோபாவத்திலிருந்தே அவ்வாறான இழக்காரமான கருத்துக்கள் வருகின்றன. ஏனெனில் கொல்லப்பட்டது தமிழர்கள்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் சட்டத்தின் ஆட்சி பலமாக இருப்பது போன்றதொரு தோற்றம் நீதித் துறையால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நீதித்துறையின் எல்லைக் கோட்டையும் தாண்டியும் சிலர் பேசினர். அது இலங்கையின் ஏனைய எந்தவொரு பகுதியிலும் இதுவரை நிகழாத ஒன்று. பொதுவாக நீதிபதிகள் பொதுமக்கள் முன்னால் தோன்றி, அறிவுரை சொல்வதில்லை ஆனால் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இந்த அதிசயத்தை யாழ் மத்தியதர வர்க்கம் மிகவும் ரசித்தது. சாதாரண மக்கள் மத்தியிலும் அது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இந்த பின்னணியில்தான் வாள் வெட்டுக் குழுவினரை கைதுசெய்வது என்னும் பெயரில் ஒரு விசேட பொலிஸ் பிரிவிற்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது.
அந்த விசேட பொலிஸ் பிரிவே தற்போது இரு மாணவர்களை கொலை செய்திருக்கிறது. பாதுகாப்பு படையினருக்கு எல்லை கடந்த அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டங்கள் ஆக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அது தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டிருப்பது வரலாறு. பயங்கர வாத தடைச்சட்டம், அவசகாலச் சட்டம் அனைத்தும் எந்தளவிற்கு தமிழர்களை கேள்வியின்றி கொல்லுவதற்கும் சித்திரவதை செய்வதற்கும் அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது என்பதை அனைத்து தமிழரும் அறிவர். இவ்வாறானதொரு வரலாற்று படிப்பினை இருக்கின்ற போது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் வேற்று இனத்தை சேர்ந்த படைத்தரப்பினரை (படைத்தரப்பு என்பதில் பொலிசாரும் அடக்கம்) கையாளுவது தொடர்பில் மிகுந்த அவதானம் இருந்திருக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களும் கூடுதல் கவனம் எடுத்திருக்க வேண்டும்.
நிலைமைகளை முன் கூட்டியே அவதானித்து விடயங்கள் தொடர்பில் அறிக்கையிடும் செயற்பாட்டை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் செய்வதில்லை. விசேட அதிரடிப்படையை பயன்படுத்தும் முடிவு தொடர்பில் ஒரு முறை டெலோ இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா எச்சரிக்கை செய்திருந்ததை இந்த இடத்தில் குறிப்பிடலாம். உண்மையில் யாழ்ப்பாணத்தில் சட்டத்தின் ஆட்சி வலுவாக இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பிலும் அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் அடங்கலாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இந்த விடயங்களில் கவனம் செலுத்தாது வெறுமனே சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் அறிக்கைவிடுவதும் கடைகளை பூட்டி எதிர்ப்புத் தெரிவிப்பது மட்டுமே அரசியல் செயற்பாடுகளாக இருக்க முடியாது.
ஏனெனில் இந்த விடயங்கள் இனியும் நடக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதம் இல்லை. இனியாவது அரசியல் தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் துல்லியமாக ஆராய்ந்து உடனுக்குடன் கூட்டு அறிக்கைகளை வெளியிடுவது அவசியம். அதனை வெறுமனே தமிழில் மட்டுமே வெளியிடாது சம நேரத்தில் ஆங்கிலத்திலும் வெளியிடுவது அவசியம். எவ்வாறு ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் (னுளைவசiஉவ ஊழழசனiயெவiபெ ஊழஅஅவைவநந) கூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படுகிறதோ அதே போன்றதொரு வடிவத்தில் அதற்கு மாற்றாக, தமிழ் அரசியல் வாதிகள் – புத்திஜீவிகள் அடங்கலான கூட்டு சந்திப்பொன்றை தமிழ் தலைமைகள் முன்னெடுக்க வேண்டும்.
இதனை குறித்த அரச கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டும். அதில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படுகிற அனைத்து திட்டங்களின் சாதக பாதங்களை ஆராய்ந்து, பாதகமான விடயங்களை வெளியில் அம்பலப்படுத்த வேண்டும். இப்பத்தியில் முன்னர் நிழல் அரசாங்கம் (ளூயனழற பழஎநசnஅநவெ) ஒன்று தொடர்பில் பேசப்பட்டிருந்ததையும் இந்த இடத்தில் சேர்த்து வாசிக்கலாம். ஆக்க பூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற- ஏற்படப் போகின்ற இன்னல்களை தடுத்துநிறுத்த முடியாது. அரசியல் தீர்வு தொடர்ப்பில் எந்தளவிற்கு தமிழர் தரப்பின் குரல் வலுவாக இருக்க வேண்டுமோ அந்தளவிற்கு எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு வராவிட்டால் என்ன செய்வது என்னும் கேள்விக்கான பதிலும் இருக்க வேண்டும். ஒரு புறம் அரசியல் யாப்பு தொடர்பில் தமிழர் தரப்பின் கவனத்தை திருப்பிவிட்டு இன்னொரு புறத்தால் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கும் தந்திரத்தில் கொழும்பு கைதேர்ந்தது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் கோரிக்கைகளில் ஒன்று, வடகிழக்கின் பொலிஸ் அதிகாரம் தமிழ் மக்களது நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டுமென்பது. இதனை இந்த சந்தாப்பத்தில் குறிப்பிடுவதால் சில அதிமேதாவிகள், தமிழ் பொலிஸ் இருந்தால் இவ்வாறு நடக்காதா என்று கேட்கலாம். இங்கு சம்பவங்கள் நடைபெறுமா அல்லது இல்லலையா என்பதல்ல விடயம் அவற்றை கட்டுப்படுத்தும் அல்லது தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் எவரிடம் இருக்கிறது என்பதே முக்கியம். வடகிழக்கை பொறுத்தவரையில் நிலைகொண்டுள்ள படைத்தரப்புக்கள் பொலிஸ் உட்பட அனைவருமே சிங்களவர்கள். அவர்களை பொறுத்தவரையில் தாங்கள் தமிழர்களோடு மோதி வெற்றிபெற்றவர்கள் என்னும் மனோபாவத்தில் இருப்பவர்கள். அந்த மனோபாவம் வெற்றிபெற்றவர்களிடம் இருப்பது இயல்பானதும் கூட. மிக உயர்மட்டத்தில் இருக்கும் படித்தவர்கள் என்னும் சிங்களத் தரப்பிடமே அவ்வாறானதொரு மனோபாவம் இருக்கின்றபோது, அது சாதாரண சிப்பாய்களிடம் எவ்வாறில்லாமல் போகும். எனவே அவ்வாறான படைத்தரப்பினர் (அவர்களது பார்வையில்) தோற்றவர்கள் மத்தியிலிருந்து காண்பிக்கப்படும் சிறு எதிர்ப்பைக் கூட சகித்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருப்பர்.
இந்த மாணவர் விடயத்தில் நடந்ததும் அதுவே. நாங்கள் நிறுத்தி நிற்காமல் போனால் என்னவாகும் என்பதை காண்பிக்க வேண்டும் என்னும் வெற்றி மனோபாவமே அவர்களை நிதானமிழக்கச் செய்திருக்கிறது. நல்லிணக்கம் பற்றி பேசுகின்ற எந்தவொரு தரப்பினரும் இந்த விடயத்தை உற்று நோக்குவதில்லை. தமிழ் மக்கள் மத்தியிலான சிவில் நிர்வாகத்தில் சிங்கள பொலிசார் இருக்கும் வரையில் இவ்வாறான சம்பவங்களும் அவ்வப்போது நிகழவே செய்யும். மேலும் சிறிலங்காவின் படைத்தரப்புகளில் இருப்பவர்கள் நீண்டகாலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின், அவசரகாலச் சட்டத்தின் மூலம் கிடைத்த எல்லைகடந்த அதிகாரங்களை ருசித்தவர்கள். அவ்வாறானவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் நிலைகொண்டிருப்பது நிச்சயமாக தமிழ் மக்களின் நிம்மதியான இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்.
எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தமிழர் தலைமை தாங்கள் நம்புகிற நல்லாட்சி அரசாங்கத்தையும் சர்வதேச சமூகத்தையும் அழுத்த வேண்டும். பொலிஸ் அதிகாரத்தை தமிழ் மக்கள் கோருவதில் உள்ள தவிர்க்கவியலாத பொறுப்பை வலியுறுத்த வேண்டும். இந்த விடயத்தை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஒரு முக்கிய பிரச்சாரமாக முன்னெடுக்க முடியும். ராஜதந்திரிகளை யாழ்பாணத்துக்கு அழைத்து விளக்கமளிக்க முடியும். இதன் மூலம் தமிழரின் பாதுகாப்பு விடயங்கள் தமிழர்களால் தீர்மானிக்கப்பட வேண்டியதன் தார்ப்பரியத்தை ஒரு பேசுபொருளாக்கலாம். அதே போன்று இப்பத்தி மேலே குறிப்பிட்டவாறான பொறிமுறைகளை உருவாக்கி தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படுகின்ற அரச நிகழ்சிரலை மேற்பார்வை செய்வதுடன் அது தொடர்பில் அறிக்கையிடுவதும் அவசியம். இவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்காது வெறுமனே சுலோகங்களில் சுகம் கண்டு கொண்டிருந்தால், இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறும் அதன் பின்னர் மீளவும் ஒரு கண்டனம், ஒரு அறிக்கை என்பதாகவே காலம் கழியும்.


