பிணை முறி விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது : ஜனாதிபதி
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்கக் கூடாது. அத்துடன் குறித்த விசாரணைகள் பக்கசார்பற்றதாகவும் சுயாதீனமாகவும் நீதி நடைமுறைக்கு உட்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று (03) முற்பகல் மஹரகமையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறி அனைவரினதும் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டு புதிய அரசாங்கத்தை அமைத்திருப்பது தவறிழைத்த ஒரு பிரிவினருக்கு தண்டனை வழங்கவும் மற்றுமொரு பிரிவினருக்கு தவறிழைப்பதற்கு இடமளிப்பதற்காகவும் அல்ல என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற சட்ட திட்டங்களை மதித்து அரசியலமைப்பின்படி கோப் குழு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. அது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளபோதும் முறையான நீதிமன்ற நடைமுறைகளினூடாக சரியானதொரு தீர்ப்பை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். -(3)




