ஓமானில் இலங்கைப் பெண்கள் விற்கப்படும் விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்
இலங்கைப் பெண்களை ஓமானில் ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் தகவல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரித்துள்ளார்.
ரைம்ஸ் ஒவ் ஓமான் மேற்கொண்ட புலனாய்வில் இலங்கைப் பெண்கள் ஓமானில் ஏலமிடப்படுவதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த விசாரணை தொடர்பில் ஓமானில் உள்ள இலங்கை அதிகாரி ஒருவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளார். இவருக்கும் இந்த மோசடிகளை மேற்கொள்ளும் கும்பலுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றதா? என விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரைம்ஸ் ஒவ் ஓமான்க்கு தெரிவித்தார்.
21வயதான இலங்கைப் பெண்ணெருவர் ஓமானில் மீட்கப்பட்டுள்ளார். இவர் நேபாள தொழில் முகவர் மூலமாக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ளமை தெரியவருகின்றது. இலங்கை சட்டவிதிகளுக்கு அமைவாக 30 வயதிற்கு குறைந்த பெண்கள் வெளிநாட்டு பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது.
இலங்கை பணிப்பெண்கள் எவ்வாறு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுலா பயணிகள் வீசா மூலம் சென்று ஓமானிற்கான சட்டவிரோத பணி விசாவினை பெற்றுக்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர் என்று குறித்தும் எமது அதிகாரிகள் விசாரணை நடாத்தி வருவதாகவும் அவர் ரைம்ஸ் ஒவ் ஓமானுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் சுமார் 70 பணிப்பெண்கள் ஓமானுக்கு சட்டவிரோதமான முறையில் முகவர்களினால் அனுப்பபபட்டுள்ளமை தெரியவருகின்றது. தற்பொழுது இந்த நடடிவடிக்கைகள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)




