மக்களை எழும்ப விடாமல் தடுக்கும் பெறுமதி சேர் வரி
நரேன்
2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தின் போது வழங்கிய வாக்குறுதிக்கமைவாக மூன்று கட்டங்களில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலைக் தொடர்ந்து அமைக்கப்பட்ட தற்காலிக நூறுநாள் நல்லாட்சி அரசாங்கத்திலேயே நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்திருந்தமை அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரச ஊழியர்களுக்கான அதிகரித்த அந்தக் கொடுப்பனவின் மூலம் எதிர்காலத்தில் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த வகையிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாவது வாசிப்பு முடியும் தருவாய் வரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலையீட்டில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டது.
கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி பொருட்கள் சேவைகளின் விலைக்குறைப்பு என்ற கோசத்துடன் ஆட்சிப் பீடம் ஏறிய இந்த அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகிறது. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வை வழங்கிய அரசாங்கம் அதற்குரிய பணத்தைக் கூட பெற முடியாத நிலையிலேயே இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு சீனாவில் தங்கியிருப்பதை இந்த ஆட்சியைக் கொண்டு வந்த மேற்கத்தேய நாடுகள் விரும்பவில்லை. ஆகையினால் தாங்கள் நேரடியாகவே இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மூலம் உதவிகளை வழங்க முன்வந்தது. சர்வதேச நாணய நிதியம் தனது நிபந்தனைகளை முன்வைத்தே கடன்களை வழங்குவது வழக்கம். அவ்வாறு விதிக்கப்பட்ட நிபந்தனை தான் நாட்டில் நடைபெறுகின்ற சகல வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பெறுமதி சேர்வரி விதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க முடியும் என்றும், கடனை மீளச் செலுத்த பெருமளவு உதவி செய்யும் என்றும் பரிந்துரை செய்திருந்தது. இதனால் ஏற்கனவே நலிவடைந்து போயிருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு வரிகளை உயர்த்துவது என்பது இந்த அரசாங்கத்திற்கு தவிர்க்க முடியாததாக இருந்தது. வரியை உயர்த்துவதால் ஏற்படக் கூடிய எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்காகவே அரசாங்கம் தனது ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை முன்கூட்டியே வழங்கியிருந்தது. இதன்காரணமாகவே இப்பொழுது வரிகள் உயர்த்தப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் வீதிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முதலாவதாக கொண்டுவரப்பட்ட பெறுமதி சேர் வரிக்கு எதிராக மஹிந்தா தரப்பினர் நீதிமன்றத்தின் மூலம் வரி அமுலாக்கத்தை தடுத்திருந்தனர். தற்போது அந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் திருத்தங்கள் செய்யப்பட்டு பாராளுமன்றத்தின் மூலம் சட்டமாக்கப்பட்டு அமுலுக்கு வந்துள்ளது. இதில் 82 பொருட்களுக்கு விலக்களிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட போதும் ஏனைய பொருட்களுக்கான கூடுதல் வரிவிதிப்பானது விலக்களிக்கப்பட்ட பொருட்களின் மீதும் தாக்கத்தை செலுத்தும் என்பதும், ஒட்டுமொத்த அளவில் வாழ்க்கைச் சுமையை கூட்டும் என்பதும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதே.
இலங்கை முழுவதையும் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக கேந்திர மையமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக கூறுகின்ற இந்த அரசாங்கமும் அதன் பிரதமரும் உட்கட்டமைப்பு வசதிகளில் அத்தியாவசியமாக கருதப்படுகின்ற இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் வரப்பிரசாதமான தொடர்பாடல் துறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விதிக்கப்பட்டுள்ள வரியின் மூலம் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையை கேள்க்குட்படுத்தியுள்ளனர். இன்றைய நவீன உலகில் எந்தவொரு மூலையிலும் இருப்பவர் நினைத்தமாத்திரத்தில் தொடர்புகளை மேற்கொள்ளக் கூடிய சூழல் நிலவுகையில், உள்நாட்டிற்குள் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அவர் ஏற்கனவே செலுத்தியதைவிட 33 வீதம் அதிகமாக வரி செலுத்த வேண்டியுள்ளது.
காற்றில் மிதக்கும் மின்காந்த அலைகளை எந்திரங்களின் மூலமும் ஒரு முறை மட்டுமே செலவுசெய்யக் கூடிய மூலதனங்களின் மூலமும் மீண்டும் ஒலியாக மாற்றி எமது மூளைகளுக்குள் செய்தியைச் சேர்க்கின்ற தொழில்நுட்பத்திற்கு இவ்வளவு வரி தேவையா என்பதை அரசாங்கம் சிந்தித்து பார்க்க வேண்டும். பயனாளிகளைக் கூட்டியும் அதன் பாவனையைக் கூட்டியும் அதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதை விடுத்து பாவனையாளர்களின் மீதான இத்தகைய வரித்திணிப்பு என்பது பிரதமரின் கூற்றுக்கு முற்றிலும் மாறாகவுள்ளது. இதனைப் போன்றே ஒவ்வொன்றையும் விளங்கப்படுத்த முடியும். உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏனைய வழிகள் குறித்து அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆடம்பர பொருட்களின் விலைகளின் மீது அல்லது அத்தியாவசிய தேவைகள் இல்லாத பொருட்களின் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற கூடுதல் வரி விதிப்பை யாரும் எதிர்க்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கமாக கருதப்படுகின்ற அரச ஊழியர்கள் ஓரளவுக்காவது இந்த நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களும், அன்றாடம் உழைத்து உண்பவர்களும் இதனால் பாரிய சுமைகளை சுமக்க நேரிடும். இந்த நாட்டின் சனத்தொகையில் இவர்களே அதிகம் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றிணைந்து வீதிக்கு வரமுடியாத காரணத்தினால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பொருளல்ல.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராடி வருகின்ற நிலையில் தேயிலைப்பெயிர்செய்கையில் இருந்து மாறுபட்ட ஒரு தொழிலுக்கு மாறவேண்டும் என்ற கருத்தையும் இந்த நாட்டின் பிரதமர் தெரிவித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் பன்னெடுங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் புகைகயிலைச் செய்கையையும் கைவிடுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் இவ் இரண்டு முடிவுகளையும் பார்க்கின்ற பொழுது ஏற்றுமதி சார்ந்த விவசாய உற்பத்தியை முடக்கிவிட்டு அதில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களை வேறு தொழில்களை நாடிச் செல்வதற்கு இந்த அரசாங்கம் ஊக்கப்படுத்துகின்றது என எண்ணத் தோன்றுகின்றது. இது ஏற்கனவே உதிரிப்பாட்டாளிகளாக இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், வடமாகாணத்தைச் சேர்ந்த கூலி விவசாயிகளையும் பல்தேசிய நிறுவனங்களின் அன்றாட கூலி வேலைக்கு சேவைக் செய்வதற்கான தயார்படுத்தலாகவே பார்க்க முடிகிறது.
அரச ஊழியர்கள் தாங்கள் வசதியாக இருக்கின்றோம் என்பதனால் மட்டும் திருப்தி அடைந்து விடமாமல் நாட்டில் அனைத்து உழைப்பாளிகளும் தத்தமது குடும்பச் சுமையை சுமப்பதற்கு ஏற்ற பொருளாதார அபிவிருத்தியை அடைய வேண்டும் என்று முடிவெடுத்து வீதிகளில் இறங்கி அவர்களுக்காக போராட வேண்டும். இதன் மூலமே எதிர்காலத்தில் வளமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.
N5




