அபயங்களை இழந்த முன்னாள் போராளிகள் பொதுமக்களுக்கும் சமநீதி வழங்க ஜனாதிபதி முன்வரவேண்டும்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி
போரால் பாதிக்கப்பட்டு அபயங்களை இழந்து உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் சம நீதி வழங்க ஜனாதிபதி முன்வர வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த நாட்டில் முப்பது வருட காலமாக ஒரு யுத்தம் நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரால் அது மௌனிக்கப்பட்டு தற்போது ஏழரை ஆண்டுகள் ஆகின்றன. இந்த யுத்தத்தில் தமிழ் மக்கள் இழந்த இழப்புக்கள் ஏராளம். அவற்றுக்கு ஈடு இணையாக எந்த விதமான நிவாரணத்தையும் எப்போதுமே வழங்க முடியாது என்பது நிதர்சனமான விடயம்.
அவ்வாறிருக்கையில் இந்த கொடிய யுத்தத்தினால் அவயவங்களை இழந்தும், சுயாதீனமாக தனது அடிப்படை வேலைகளைக்கூட செய்ய முடியாத (முள்ளந்தண்டு தடம் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட) நூற்றுக்கணக்கானவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்றார்கள். குறிப்பாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
இவர்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் உதவிகள் வழங்கப்படுவதற்காகவும், தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவிகளைச் செய்வதற்காகவும் கிராம அலுவலர்கள் ஊடாக திரட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு இன்னொருநபரின் துணையுடன் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தங்கிவாழும் தேவையுடைய இவர்களுக்காக வெறுமனே மூவாயிரம் ரூபா கொடுப்பனவு மட்டுமே அரசாங்கத்தால் தற்போது வரையில் வழங்கப்பட்டு வருகின்றது. இது கூட பாதிக்கப்பட்டிருக்கும் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை. தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்கியிருந்தாலும் அது தொடர்ச்சியானதாக இல்லை.
தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நல்லாட்சியை நிலைநிறுவத்துவற்காக தங்கள் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக நாம் உணர்கின்றோம். அண்மைய தினங்களில் கூட யுத்தத்தில் ஈடுபட்டு மாற்றுத்திரனாளிகளாக உள்ள இலங்கை இராணுவத்தினர் 25 கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அப்போராட்டத்தின் ஈற்றில் அவர்களுக்கான ஓய்வூதியத்தொகை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். யுத்தத்தில் அழிவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நவீனரக ஆயதங்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட அரச தரப்பிற்கே இவ்வளவு பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றதென்றால் அதைவிடவும் குறைவான பலத்துடன் போராடிய தமிழ்த் தரப்பிற்கு எந்தளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள். இதைவிடவும் எதுவித ஆபத்தையும் எதிர்பாராது உயிரைப் பாதுகாப்பதற்காக அங்கும் இங்கும் ஓடிய அப்பாவி பொதுமக்களும் இதில் அகப்பட்டு பாரிய விளைவுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள் என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
மேலும் இராணுவ வீரர்கள் போன்று தமிழர் தரப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வீதிக்கு வந்து தமது வாழ்வாதாரத்திற்காக போராடக்கூடிய ஏதுவான நிலைமையில் கூட இல்லை. அதற்கு கூட பிறிதொரு நபரின் உதவியையே அவர்கள் நாடி நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் தான் உள்ளார்கள்.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்திய அனைத்து ஆயுதங்கள், தளபாடங்கள், படைவீரர்கள் போன்ற அனைத்திற்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் இன்னமும் கடன்காரர்களாக உள்ளனர். இவற்றிற்காக வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்துவதில் தமிழ் மக்களும் விரும்பியோ விரும்பாமலோ பங்காளிகளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் போர் புரிந்த இராணுவ வீரர்களுக்கு ஒரு நீதியும் பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பிற்கும் தமிழ் பொது மக்களுக்கும் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளதை தமிழ் மகன் என்ற தோரணையில் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
எனவே மனிதாபிமானத்தை கருத்திற்கொண்டு இத்தகையைவர்களை மருத்துவ சிகிச்சைகளை கிரமமாக வழங்கி பாராமரிப்பதற்கு பொதுவான பராமரிப்பு நிலையமொன்றை வன்னி பிரதேசத்தில் அமைப்பதற்குரிய நடவடிக்கையை தாங்கள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் தற்போது பெற்றோர் உட்பட உறவினர்களின் துணையுடன் வாழ்ந்து வரும் இவர்களுக்கு இலங்கை இராணுவத்திலிருந்து ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற சகல உரிமைகளையும் தமிழ் தரப்பினர்களுக்கும் (ஊனமுற்றவர்களுக்கும்) வழங்கி நீதியை நிலை நாட்டுவீர்கள் என தமிழர்களின் சார்பில் எதிர்பார்கின்றேன். நிரந்தரமான மாதாந்த கொடுப்பனவொன்றை வாழ்வாதர செலவீனங்களுடன் ஒப்பிட்டு நியாமானதாக வழங்குவதற்குரிய நடவடிக்கையையும் துரிதமாக எடுக்கவேண்டியது நீதியான செயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.
N5




