கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த மாவட்டங்களாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள்
பா.ஜதுர்சிகா
கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத்தொழில்களைக் கொண்ட மாவட்டங்களாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் காணப்படுகின்றபோதும் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது காலபோக பயிர் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அவற்றைக்கட்டாhக்காலி கால் நடைகளிடமிருந்து பாதுகாத்தல் என்பது விவசாயிகளுக்கு பாரிய பிரச்சனையாகவுள்ளது.
அதேபோன்று கால்நடைப்பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கை காலங்களில் வீதிகளிலும் பிறஇடங்களிலும் வைத்துப் பராமரிப்பதில் பாரியநெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது. தற்போது நவீன முறையிலான உள்ளக முறைகளில் கால்நடைகளை வளர்ப்பதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் அதற்கு பண்ணையாளர்களை உடனடியாக கொண்டு செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. திறந்த வெளி வளர்ப்பு முறையையே பண்ணையாளர்கள் விரும்புகின்றனர். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. ஆனால் அதற்கான மேச்சல் தரவைகள் என்பது இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனை அமைப்பதற்கு அதிகாரிகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றபோதும் அது கை கூடுவதாகவில்லை.எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக செய்கையின்போது சுமார் ஐம்பத்தி ஒன்பதாயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பில் காலநெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் சுமார் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் இவற்றைவிட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் உள்ளன. இவ்வாறு பயிர் செய்கை காலங்களில் இவற்றை வைத்து பராமரிக்கக்கூடிய மேச்சல் தரவைகள் எவையும் கிளிநொச்சி மாவட்டத்தில இல்லை. இவற்றுக்கான மேச்சல்தரவைகளை அமைப்பதிலும் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் கால்நடைகளின் மேச்சல் தரவைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் பல குடியிருப்பு நிலங்களாகவும் பயிர் செய்கை நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
இதனால் கால்நடை பண்ணையாளர்கள் பயிர்செய்கை காலங்கள் தவிர்ந்த ஏனைய காலங்களிலும் சிறுபோக செய்கை காலங்களிலும் பயிர்செய்கை மேற்கொள்ளப்படாத வயல் நிலங்களில் வைத்து தமது கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். ஆனால் காலபோக செய்கை காலங்களில் அவ்வாறு பராமரிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான காலப்பகுதிகளில் கால்நடைகளை பெரும் சிரமங்களின் மத்தியில் இடத்திற்கு இடம் மாற்றிமாற்றி பராமரித்து வருகின்றனர்.இதனால் பல சட்டரீதியான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. மீள்குடியேற்றத்தின் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக கால்நடைப்பண்ணையாளர்கள் தங்களுக்கான மேச்சல் தரவைகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் அமைப்பதற்கான இடங்கள் பிரதேச செயலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை அளவீடு செய்து வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 32 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பிடப்பட்டிருந்தபோதும் அதற்கான நிதியை பெறுவது தொடர்பில் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் இவ்வாறு பெரிய தொகை நிதியினை பெறுவது பெரும் பிரச்சனையாகவுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் மேச்சல் தரவைகளை அமைப்பது தொடர்பிலான விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதன் பின்னர் கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் முதற்கட்டமாக கல்மடுநகர் பகுதியில் மேச்சல் தரவை ஒன்றினை அமைப்பதற்கான இடம் அடையாளப்படுத்தப்பட்டு அதனை அளவீடு செய்வதற்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதி மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த ஒக்டோபர் மாதம் அதனை அளவீடு செய்வதற்காக சென்றபோது திடீரென குறித்த காணியானது வனவள திணைக்களத்திற்குச்சொந்தமான காணயென அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை அளவீடு செய்யமுடியவில்லை என கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கடந்த 4ம்திகதி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் மீளாய்வு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறு கால்நடைகளுக்கான மேச்சல் தரவை அமைப்பதில் இழுபறிநிலை காணப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் தொடர்புகொண்டபோது மேச்சல் தரவைகளுக்கு அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் திணைக்களங்கள் மற்றும் பிறருக்குச் சொந்தமான காணிகளாக காணப்படுவதனால் அவற்றை விடுவிப்பதில் காலதாமதங்கள் காணப்படுகின்றன. ஆகவே இவற்றை விடுவித்து மேச்சல் தரவைகளை அமைப்பதில் காலதாமதங்கள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் இவ்விடயம் பற்றிக்கேட்டபோது மேச்சல் தரவைகள் என்பது பாரிய பிரச்சனையாகவுள்ளது. இதற்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் வனவள திணைக்கத்திற்குச் சொந்தமான காணிகளாக காணப்படுகின்றன. இவற்றை மேற்படி திணைக்களத்திடம் இருந்து விடுவித்து மேச்சல் தரவைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் உரிய திணைக்களங்களினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான பண்ணையாளர்கள் திறந்த வெளி வளர்ப்பு முறைகளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.
இவற்றுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பயிர்செய்கை காலங்களில் குளங்களின் அலைகரைப்பகுதிகளில் வைத்து பராமரித்து வருகின்றபோது குளங்களின் நீர் மட்டம் அதிகரிக்கும் போது அவற்றை அங்கிருந்து வெளியேற்றி காடுகளிலும் ஏனைய இடங்களிலும் வைத்து பராமரித்து வருகின்றனர்.
இவ்வாறு கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் திறந்தவெளி வளர்ப்பு முறைகளில் கால்நடைகளை வைத்து பராமரித்து வரும் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டில் இவ்வாறு கால்நடைப்பண்ணையாளர் ஒருவர் தனது கால்நடைகளை பயிர் செய்கையின்போது இரணைமடுக்குளத்தின் அலைகரைப்பகுதியில் வைத்து பராமரித்த சமயம் குளத்தன் நீர்மட்டம் அதிகரித்தமையால் அங்கிருந்து கால்நடைகளை வெளியேற்றும் பொருட்டு சென;ற சமயம் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனைவிட குளங்களின் அலைகரைப்பகுதிகளிலும் காடுகளிலும் கால்நடைகளை வைத்து பராமரிக்கும் போது காட்டுவிங்குகளால் கால்நடைகள் அழிக்கப்படுகின்றன.
இவ்வாறு மேச்சல்தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பு என்பது மாவட்டத்தின் உற்பத்தி மக்களின் போசாக்கு அதனை மேற்கொள்ளும் குடும்பங்களின் வாழ்வாதாரம் என பல்வேறு விடயங்களில் முக்கிய பங்கினை வகிப்பதால் இதனை மேம்படுத்த வேண்டிய தேவையே உள்ளது. இன்று நவீன முறைகளில் உள்ளகவளர்ப்பு முறைகள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளபோதும் அதற்குள் திடீரென செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் பண்ணையாளர்கள் உள்ளகவளர்ப்பு முறைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்கள் உரியமுறைகளில் முன்னெடுக்கப்படவேண்டும். பாரம்பரிய முறையாகவும் பரம்பரை பரம்பரையாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் திறந்த வெளி வளர்ப்பு முறைகளையே மேற்படி பண்ணையாளர்கள் பின்பற்றி வருகின்றனர். எனவே மேற்படி மாவட்டங்களில் மேச்சல் தரவைகள் மிகமிக முக்கியமன ஒன்றாக காணப்படுகின்றது.
எனவே மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் போசாக்கு என்பவற்றைக்கருத்திற்கொண்டு கால்நடைகளுக்கான மேச்சல்தரவைகளை அமைப்பதற்குரிய காணிகளை உரிய திணைக்களங்கள் விடுவித்து தமக்கான மேச்சல்தரவைகளை அமைத்துத்தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




