செய்திகள்

தென்னிலங்கையில் தமது பிரதிநிதிகளை அதிகரிக்க எமது எல்லைக் கிராமங்கள் பறிக்கப்படுகின்றன! செல்வம் எம்.பி

இன்று எமது எல்லைக்கிராமங்கள் பறிக்கப்பட்டு தென்னிலங்கையில் தமது பிரதிநிதிகளை அதிகரிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா, பட்டிக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் மூங்கில் செய்கையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இன்று எவ்வாறு பழைய கிராம மக்கள் எதையும் விடக்கூடாது என்று நினைக்கின்றார்களோ அதேபோல் எல்லைக்கிராமங்களை பறிபோகவிடக்கூடாது என்பதில் எங்களுக்கும் உரித்துள்ளது. இதற்கு காரணம் திட்டமிட்ட குடியேற்றங்களும் தென்னிலங்கையில் தங்களுடைய பிரதிநிதிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகவும் கருதுவதேயாகும். எங்கும் ஒரு இனம் தனித்து வாழ்ந்தது என்பதனை இல்லாது பல்லினம் சேர்ந்து வாழ்ந்தது என்ற கருத்தை கொண்டு வருவதற்கான பல்வேறு திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது.

ஆகவே எல்லைக்கிராமங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற திடமான நோக்கத்திலும் எமது விவசாய மக்கள் வாழ்வாதார ரீதியாக பின்தங்கியுள்ள நிலையில் வெளிநாட்டு முதலீடுகளினூடாக வாழ்வாதார பெருக்கம் ஏற்படும் என்பதனாலும் இவ்வாறான திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இன்று எமது பிரதேசத்தில் மூங்கில் செய்கையினூடாக மின்சாரம் பெறும் செயற்பாடு இடம்பெறவுள்ளது. இதனூடாக பலர் வேலைவாய்ப்பை பெறக்கூடியதாக இருக்கும். அத்துடன் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் மூங்கிலை நாட்டி வருவாயை பெறும் வாய்ப்பு உள்ளது.
எனவே இன்று பல பிரதேசங்களிலும் எமது நிலங்கள் பறிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. அதிலும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமான வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற இடங்களில் காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வேகமாக இடம்பெற்று வருகின்றது. எனவே எங்களுடைய பிரதேசங்களில் இடம்பெறும் அரசாங்கத்தின் இத்திட்டங்களை தவிடுபொடியாக்க வேண்டுமாக இருந்தால் நாம் எல்லையோர கிராமங்களை பாதுகாப்பதில் உன்னிப்பாக கவனத்துடன் இருக்கவேண்டும்.

ஆகவே வருவாயை மேம்படுத்துவதற்கும் எல்லையை பாதுகாப்பதற்கும் இ;வவாறான மூங்கில் செய்கையுடன் முதலீட்டாளர்களின் வருகையை நாம் சிறப்பாக பார்க்கின்றோம். அத்துடன் நாம் இந்த நிறுவனங்கள் தொடர்பாக கண்காணிப்போடு இருப்போம். அதனுடைய செயற்பாடுகளை பார்ப்போம். இவ்வாறான நிலையில் இச் செய்கையினூடாக ஏதாவது பாதிப்புகள் ஏற்படும் என வெளிப்படையாக யாராவது சொல்வார்களேயானால் நாம் அவர்களோடு விவாதம் செய்ய தயாராக இருக்கின்றோம்.

ஆகவே எங்களுடைய நிலைப்பாடு ஒரே திசையில் இரு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதேயாகும். அதாவது அரசியல் தீர்வு மற்றையது மக்களின் வாழ்வாதார பிரச்சனை. ஆகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் வரவேற்போம் என தெரிவித்தார்.

N5