செய்திகள்

பொறுத்து வீடுகளை மக்கள் மீது திணிக்கும் ஏஜன்டாகவே சுவாமி நாதன் உள்ளார் : த.தே.கூ குற்றச்சாட்டு

வடக்கில் பொருத்துவீடுகளை மக்கள் மீது திணிப்பதற்கான ‘ஏஜன்ட்’ போல மீள்குடியேற்ற அமைச்சர் சுமாமிநாதன் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் 300ற்கும் அதிகமான லொறிகள் மீனையும் மரக்கறிகளையும் தென்னிலங்கைக்கு எடுத்துச் சென்று வந்தன. மக்களின் கணிசமான நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அண்மையில் ஜனாதிபதி ஒருதொகுதி நிலங்களை விடுவித்தார். ஆனால் இப்பகுதிகளில் படையினர் மீண்டும் வேலிகளை இட்டுள்ளனர்.
கோயில்கள், வீடுகள், பாடசாலைகள் என்பன அதிகரிக்கப்பட்ட போதும் அவற்றை கட்டியெழுப்ப போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. பெண்களை தலைமையாகக் கொண்ட 90 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. யுத்தத்தினால் சேதமடைந்த பகுதி மக்கள் தேசிய அரசாங்கத்தை நம்பியிருந்தனர். இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிடைக்கும் என காத்திருந்தார்கள்.
வீட்டுத்திட்டம் குழப்பமாகவே வரவு-செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கில் 130,000 வீடுகள் தேவைப்படுகின்றன. மீள்குடியேற்ற அமைச்சர் மீது நம்பிக்கையிழந்துள்ளோம். இந்த அமைச்சுக்கு ஒதுக்கிய நிதி போதாது. கடந்த வரவு-செலவுத்திட்டத்திலும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டது. உதவி வழங்கும் நாட்டு மாநாட்டின் ஊடாக கூடுதல் நிதி ஒதுக்குவதாகவே பிரதமர் உறுதியளித்தார். 30 வருடங்களாக வீடுகள் இழந்து, தொழில் இழந்து 3 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். நல்லிணக்கம் ஏற்படும் நம்பிக்கையுடன் உள்ளோம்.
65,000 இரும்பு வீடுகளை தலா 2.1 மில்லியன் செலவில் நிர்மாணிக்க மீள்குடியேற்ற அமைச்சர் முயன்று வருகிறார். த.தே.கூ மட்டுமன்றி பலரும் அந்த வீடுகள் பொருத்தற்றவை என்று கூறியிருந்தார்கள். ஒரு இலட்சத்து 2 ஆயிரம் வீடுகளை இந்தப் பணத்தில் நிர்மாணிக்க முடியும். நல்லிணக்க குழுவின் கூட்டத்திலும் இந்த விடயம் பேசப்பட்டது. அத்திவாரம் கொண்ட சீமெந்து வீடுகளை கட்டும் திட்டத்தை மீள்குடியேற்ற அமைச்சர் ஏன் தட்டிக்கழிக்க வேண்டும்.
எமது எம்பிக்கள் அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு பாராளுமன்றம் வரவில்லை. தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். தேசியப்பட்டியலில் வந்த அமைச்சர் சுவாமிநாதன் ‘ஏஜ்ன்ட்’ போன்று செயற்பட்டு வருகிறார். பொருத்துவீட்டுத் திட்டத்தை திணிக்க முயன்று வருகிறார். அவர் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டை ஆதரிப்பதா இல்லையா என ஆராய்ந்து வருகிறோம்.
இந்த வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது நியாயமா என மக்கள் கேட்கின்றனர். பிக்குமாரும், இராணுவத்தினரும் பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த சிலை வைக்கின்றனர். மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் கோவில்களுக்கு முன்னால் புத்தர் சிலை வைக்கப்படுகிறது. ஜனாதிபதி தலையிட்டு இதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். யாரும் விரும்பியவாறு பௌத்த மதத்துக்கு விரோதமாக இனமுரண்பாடு ஏற்படும் விதத்தில் புத்த சிலை வைப்பதை நிறுத்த வேண்டும்.
இனப்பிரச்சினையை தீர்க்க இந்த பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. உபகுழுக்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. சர்வதேச சமூகத்தின் மீது நாம் நம்பிக்கையிழக்கவில்லை. நாட்டை பிரிக்க கோரவில்லை. சமஷ்டி தீர்வை கோருகிறோம். அதிகாரத்தை முழுமையாக பகிர வேண்டும். கொடுத்த அதிகாரம் திருப்பி பெறப்பட்டது. ஒற்றையாட்சி தீர்வை நம்ப முடியாது. எஸ்.டபிள்யூ.ஆர்.டிபண்டார நாயக்க தான் முதலில் சமஷ்டி தீர்வு பற்றி பேசினார்.
முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் நாம் ஒன்றாக வாழ வேண்டும். இந்த நாட்டுக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது. வேறு நாடுகளில் உள்ள சமஷ்டி அதிகாரமுறைக்கு ஒத்த தீர்வு இங்கு வழங்கப்பட வேண்டும். எமது எம்பிக்களை வற்புத்தி வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க கூறியுள்ளோம். ஒன்றிணைந்த திட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். -(3)