செய்திகள்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு பிரதம அதிதியுரை

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 30 ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வு 18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர், ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முதலமைச்சர்  க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு  உரையாற்றுகையில்,

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களை நினைவுகூர்வதும் அவரின் குருபூசை நிகழ்வுகள்  பற்றிய மாநாடுகளை நடாத்துவதும் அன்னாரின் நினைவை எம்முடன் எக்காலமும் சுமந்து செல்ல உதவுகின்றன. எமது சமயத்திற்கு இருந்த மிக நெருக்கடியான காலகட்டத்தில் அனைத்து வகையான நெருக்கடிகளையும் தனிஒருவராக அல்லது இன்னும் குறிப்பிட்ட சிலருடன் இணைந்துகொண்டு அவர் முறியடித்தார். அத்துடன் சமய சடங்குகள் மற்றும் இன்னோரன்ன நிகழ்வுகள் பல தடங்கல் இன்றி நடைபெறுவதற்கும் அன்றே வழிவகுத்து வெற்றியுங் கண்டார் அவர்.

யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் சைவ சமயிகளாக வாழ்ந்த கந்தப்பிள்ளை –  சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்த நாவலர், ஆறுமுகம்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தார். அவரின் நாவன்மையையும் பேச்சாற்றலையுங் கண்ணுற்ற தமிழ் அறிஞர்களும் கற்றறிந்தவர்களும் அவரைப் பாராட்டி அவருக்கு நாவலர் அதாவது நாவன்மையில் வல்லவர் என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். ஆகவே ஆறுமுகம்பிள்ளை மறைந்து ஆறுமுக நாவலரே அவரின் நாமமாக இன்றும் நிலைத்துள்ளது.

சிறுவயதில் இருந்தே கற்றலில் கூடிய கவனம் செலுத்திய நாவலர் அவர்கள் தமது ஒன்பதாவது வயதில் தந்தையாரை இழந்த போதும் அவரின் மூத்த சகோதரர்களின் வழிகாட்டலில் சேனாதிராச முதலியாரிடம் உயர் கல்விகற்க அனுப்பப்பட்டார். அவர் தமது பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் மிகத் திறமை பெற்று அக்கால இலக்கியங்களையும் புராணங்களையும் படித்து அவை பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார்.

அவரின் தமிழ்ப்புலமையை கண்ணுற்ற அவரின் சகோதரர்கள் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் முன்னணி ஆங்கிலப் பாடசாலையாக விளங்கிய மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இப் பாடசாலை பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது) ஆங்கிலம் கற்க அனுப்பி வைத்தனர். இவரது ஆங்கிலப் புலமையை கண்ணுற்ற அக்கல்லூரியின் அதிபர் பேர்சிவல் பாதிரியார் அவர்கள் நாவலர் அவர்களை அவரின் பத்தொன்பதாவது வயதில் தமது கல்லூரியில் ஆங்கிலக் கல்வி கற்பிப்பதற்கும் பைபிள் நூலை தமிழ் மொழி பெயர்ப்பு செய்வதற்கும் மிகப் பொருத்தமானவர் என்ற எண்ணப்பாட்டில் அவரை ஆங்கில ஆசிரியராக பணிக்கமர்த்தியிருந்தார்.

எனினும் நாவலர் அவர்கள் தான் பண்டிதர் ஆகிய போது பாதிரியாருக்கு சில நிபந்தனைகளை விதித்துக் கொண்டாராம். தாம் ஒரு காலத்திலும் தன் நெற்றியில் அணிந்த வீபூதியை அழிக்கமாட்டார் என்றும், தான் கிறிஸ்தவ மத கண்டனம் செய்வதைப் பற்றி அவர் குறை சொல்லக்கூடாதென்றும் வேறு சில நிபந்தனைகளின் அடிப்படையிலும் கடமையாற்ற முன்வந்தார். பாதிரியாரும் தமக்கு கீழுள்ள கிறிஸ்தவர்கள் சம்பளத்தை நோக்காக கொண்டவர்கள் என்றும் சைவராயினும் குறிப்பிட்ட பணிக்கு நாவலரே மிகப் பொருத்தமானவர் என்றும் அவர் போன்ற வேறு பண்டிதர்கள் கிடைக்கமாட்டார்கள் என்ற அடிப்படையிலும் அவருடைய நிபந்தனைகளுக்கு உடன்பட்டு அவரைப் பாடசாலையில் அவரின் இளம் வயதிலேயே இணைத்துக் கொண்டார்.
பேர்சிவல் பாதிரியாரோடு நாவலர் பெருமான் அவர்கள் வாழ்ந்த காலம் பாண்டிய மன்னனுடன் மாணிக்கவாசகர் சுவாமி அவர்கள் இணைந்து இருந்தது போலப் பொருத்தமாக அமைந்தது. பைபிளை அவர் மொழி பெயர்க்குங் காலத்தில் அதனையும் அதன் உரைகளையும் நன்றாக கற்றுக் கொண்டமையால் கிறிஸ்தவ விவிலிய நூல் சம்பந்தமாக அவருக்குண்டான அறிவு பாதிரிமார்களுக்குக் கூட இருக்கவில்லை. அவர் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் மேலும் இந்து சமயம் பற்றியும் நன்றாகக் கற்றிருந்தார். எனவே எல்லாத் துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் பிற சமயங்களைப் பற்றி நன்றாக அறிந்துமிருந்தார்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும் மொழிகளிலும் பேசவும், எழுதவும், புரிந்து கொள்ளவுஞ் சிறந்து விளங்கிய நாவலர் அவர்களின் அறிவு, அவரைப் பார்த்துப் பலர் அஞ்சி ஒதுங்க வழிவகுத்தது. எனவே அவரின் சிறப்பு மேலோங்கியது. சமயத்தின்பால் கொண்டுள்ள அதீத பற்றின் காரணமாக குடும்ப பந்தங்கள் தமது சமய வாழ்க்கைக்கு ஒவ்வாதவை எனக் கருதி திருமண பந்தத்தில் இருந்து தூர விலகியிருந்து தமது பணிகளை ஆற்றினார். அவரின் சகோதரர்களும் அவரின் குருமார்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் நாவலர் தமது பிடியில் நின்றும் சற்றும் தளராது பிரம்மச்சாரியாகவே காலத்தைப் போக்கினார். நாவலரின் ஆழமானதும் அகலமானதுமான அறிவு இன்று எம்மிடையே குறைந்தளவே காணப்படுகின்றது. பன்மொழிப் பாண்டித்தியமே பல்கலை விற்பன்னர்களாகவும் பலர் கருத்தறியும் பாங்கைப் பெற்றவர்களாகவும் எம்மை ஆக்க வல்லன என்பதை அவர் வாயிலாக அறிகின்றோம்.

அவரின் திறமைகள் இந்தியாவிலும் பேசப்பட்டது. அவர் தமது வாழ்நாட்களில் அரைவாசிப் பகுதியை இந்தியாவிலேயே கழிக்க வேண்டியிருந்தது. அவர் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆற்றிய பிரசங்கங்கள் அனைவராலும் பெருமையாகப் பேசப்பட்டன. பிரசங்க முறைமையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆறுமுக நாவலர் அவர்களே. இவர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை சிவன் கோவிலிலே ஆற்றினார் எனக் கூறப்படுகின்றது. இலகு மொழிநடையில் பிரசங்கம் பண்ணும் போதும் அர்த்தம் சொல்லும் போதும், பேசும் போதும் சொற்கள் மடைதிறந்த வெள்ளம் போல வந்துகொண்டே இருக்குமாம். சொற்பஞ்சம் என்பது இவருக்கு ஒரு காலத்திலும் இருந்ததில்லை. ஒரு சொல்லையாவது அல்லது விடயத்தையாவது திருப்பிச் சொல்லும் வழக்கம் அவருக்கு இருக்கவில்லை. அந்தளவுக்கு ஒத்த கருத்துள்ள பல சொற்களை அவர் அறிந்திருந்தார். அத்துடன் சிறு பிள்ளைகளோடு பேசும் பேச்சில்கூட இலக்கணப் பிசகின்றி ஆனால் அவர்களால் விளங்கிக் கொள்ளக்கூடிய இலகு மொழிநடையை பயன்படுத்துவது அவருக்கே உரிய தனிச்சிறப்பாக அமைந்திருந்தது.

அக்காலப் புலவர்களும் பண்டிதர்களும் தாம் கற்ற ஏட்டுச் சுவடிகளையும் மற்றும் குறிப்புக்களையும் ஏனையவர்கள் கற்றுத் தேறுவதற்கு அல்லது அதன் பயனைப் பெறுவதற்கு அனுமதிக்காதிருந்தனர். தமது குறிப்புக்கள் அனைத்தையும் அவர்களின் இறுதி நெருங்குகின்ற போது தீயில் இட்டு சாம்பலாக்கி விட்டுத்தான் அவர்கள் இறைவனடி சேர்வார்களாம். நாவலர் அவர்கள் அதற்கு மாறாக அச்சியந்திரங்களை இந்தியாவில் இருந்து தருவித்து அவ்வாறான அரிய ஏட்டுக்குறிப்புக்களையும் மற்றும் வேத நூல்களையும் அச்சில் பதிப்பிட்டு நூல்களாக வடிவமைத்து எல்லோரும் வாசிக்க இடம் அளித்தமை மிகச்சிறப்பான ஒரு நிகழ்வாகும்.
சைவத்தையும் தமிழையும் வளர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் எமது மக்கள் கல்வி அறிவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏட்டுச்சுவடிகளையும் மற்றும் இன்னோரன்ன வேதக் குறிப்புக்களையும் தேடி எடுத்துவந்து அச்சேற்றி அவற்றை தமிழ் மற்றும் சமய கல்விகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நூல்களாக வழங்கியமை அவர் சமயத்தின்பால் வைத்த பக்தியை எடுத்துக்காட்டுகின்றது.

கல்வித்துறையில் தீர்க்க தரிசனம் கொண்டிருந்தவர் நாவலர். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது 1947ம் ஆண்டில். ஆனால் 1909ம் ஆண்டில் சுப்ரமணியப் பாரதியார்
‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே – ஆனந்தசுதந்திரம்
அடைந்து விட்டோம் என்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே …
என்று பாடியிருந்தார். அவர் இறந்தது 1921ம் ஆண்டில். அப்படி என்றால் வரப் போவதைத் தீர்க்க தரிசனமாகக் கண்டு பாரதியார் பாடிய படியால் அவரைத் தீர்க்க தரிசி என்று அழைக்கின்றோம்.

அதே போன்ற தீர்க்க தரிசனம் கொண்டிருந்தார் நாவலர். நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழப் போகின்றதை நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்திருந்தார் நாவலர். C.W.W. கன்னங்கரா என்ற அமைச்சர் இலவசக் கல்வியை ஆரம்பித்தது 1945ம் ஆண்டில். அப்போது அச்செயல் உலகிலேயே வேறெங்கும் நடைபெறாத மிகப் பெரிய சாதனையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1846ம் ஆண்டில் இலவசக் கல்வியை நாவலர் ஆரம்பித்திருந்தார். இது அவரின் தீர்க்க தரிசனத்திற்கு எடுத்துக்காட்டு. நான் வடமாகாண முதலமைச்சர் என்று அறிந்ததும் டெல்லியில் நடந்த உலக இந்துக்களின் பொருளாதார மகாநாட்டின் போது ஒரு விஷ;வ ஹிந்து தலைவர் கூறினார் ‘உங்கள் நாவலர் தான் எங்களுக்கெல்லாம் முன்னோடி. அவரே எங்கள் பாத்திரமாதிரி Role Model’ என்று.

அடுத்து தாய்மொழிமூலம் கல்வி இலங்கையில் படிப்படியாக ஏற்கப்பட்டு 1963ம் ஆண்டில் பி.ஏ. (BA) பரீட்சை முதன் முறையாக தாய்மொழியில் நடைபெற்றது. சட்டக் கல்லூரியில் தமிழ் மொழிமூலம் முதன் முதலில் விரிவுரைகளை நான் 1971ம் ஆண்டில் தொடங்கிய போது தென்னிந்தியாவிலே உள்ள உயர் கல்விக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், சட்டக் கல்லூரிகளிலும் கலையியற் பாடங்களைக் கூட ஆங்கிலத்திலேயே நடாத்தினர். சட்டத்தைத் தமிழில் படிப்பிக்க முடியும் என்று அவர்கள் உத்தியோகபூர்வமாக நினைக்கக்கூட இல்லை. இன்றும் அப்படித்தான். நாவலர் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த முக்கிய பாடசாலைகள் யாவும் இன்றும் ஆங்கிலத்தையே போதனா மொழியாகக் கொண்டிருக்கின்றன. நாவலர் கல்வி பயின்றது கூட அவ்வாறான ஒரு பாடசாலையிலேயே. அப்படி இருந்தும் ஆங்கிலேயர் எம்மை ஆண்டு கொண்டிருக்கும் காலத்தில் 1848ம் ஆண்டிலேயே தான் தாபித்த வித்தியாசாலையில் தமிழையே எல்லாப் பாடங்களுக்கும் போதனா மொழியாக ஆக்கினார். தாய்மொழி மூலம் கற்பிப்பதே சிறந்தது என்று அறிந்திருந்தவர் நாவலர். அந்த விதத்தில் அவரின் தீர்க்க தரிசனம் இதிலும் புலனாகின்றது.

அடுத்து 1848ல் நாவலர் சமயக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எமது அரசாங்கமோ 1965ம் ஆண்டிலேயே புஊநு பரீட்சைக்கு சமய பாடத்தைக் கட்;டாயமாக்கியது. இலங்கையின் கல்விப் போக்கு எங்கெல்லாமோ சுற்றிச் சுழன்று ஈற்றிலேதான் சமயக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் நாவலர் சுமார் 100 வருடங்களுக்கு முன்னரே சமயக் கல்வியை மையமாக வைத்து ஏனைய யாவற்றையும் அதற்குத் துணையாக்கித் தமது கல்வித் திட்டத்தை அமைத்திருந்தார். நல்லொழுக்கத்திற்கும் ஆன்ம ஈடேற்றத்திற்கும் வழி வகுப்பதே கல்வியின் முக்கிய நோக்கம் என்பதே ஆறுமுகநாவலரின் திட்டவட்டமான முடிவாக இருந்தது. இதைத்தான் இன்றைய இலங்கை அரசாங்கமும் பலதையும் படித்தறிந்தபின் வலியுறுத்துகின்றது. ஆகவே நாவலர் ஒரு தீர்க்கதரிசி என்பதில் மாற்றுக் கருத்தெதுவும் இருக்கத் தேவையில்லை.

ஆலய நித்திய நைமித்திய பூஜை பாராயணங்கள் முறையாக நடைபெறாவிட்டால் அல்லது கட்டடங்கள் வேத விதிமுறைகளுக்கு ஒப்பானவையாக அமையப்பெறாவிட்டால் அவை பற்றிக் கடுமையாக விமர்சிப்பதுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபடுவாராம் நாவலர்.  இதனால் கோவில் நிர்வாகஸ்தர்களும் வேறு பலரும் நாவலர் பற்றி வன்கருத்துக்களைப் பரப்ப முயற்சித்தனர். ஆனால் அவர் பற்றி அறிந்தவர்கள் அவரைப் போற்றினார்கள்.
அவர் ஒருமுறை சாட்சியம் அளிப்பதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றுக்கு சென்ற போது நீதிபதி தமிழ் மொழியில் ஒரு சொல்லைத்தானும் அறியாதவராய் இருந்தும் நாவலர் பேசிய வகையைப் பார்த்து, பாங்கைப் பார்த்து மிகவும் பாராட்டினாராம். அவரின் தோற்றப் பொலிவையும் வருகையையும் கண்ட அப்புக்காத்துமார்கள் ஆங்கிலேயர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த நீதிபதி அவர்களும் சற்றே எழுந்தவர் போல காட்டிக் கொண்டாராம். பிரம்மச்சாரியான அவரின் ஒளிவட்டத்தின் சக்தி என்று கூட இதற்கான காரணமாகக் கூறலாம்.

நாவலரிடத்தில் கொலை, களவு, வஞ்சனை, காமம் முதலிய குற்றங்கள் எள்ளளவேனும் இல்லாத போதும் கோபம் எனும் குணம் மாத்திரம் மிகையாக இருந்ததாக கூறப்படுகின்றது. அதனை சிலர் குற்றமாக எடுத்துக் கூறுகின்ற போதும் தமக்குத் தீங்கு செய்தவர்களை அவர் கோவித்ததை ஒரு காலத்திலும் எவரும் கண்டதில்லை. மாறாக அவர் கோவித்தது சிவநிந்தை, சிவசாஸ்திர நிந்தை முதலிய சிலவற்றில் ஈடுபட்டவர்களையே. அவரின் கோபத்திற்கு குருமார், பிராமணர்கள், சிநேகிதர்கள், பிரபுக்கள், சுற்றத்தார் ஆகியோரும் ஆளாகத் தவறவில்லை. அவரின் கோபம் நற்கோபமே என அறிந்துகொண்டதாலும் எந்த அளவிற்கு கோபம் உண்டோ அந்த அளவிற்குப் பதின் மடங்கு இரக்கமும் அவரிடம் இருந்தது என்ற காரணத்தினால் அவரின் கோபம் பலராலும் பொறுத்துக் கொள்ளப்பட்டது.

இத்தனை சிறப்புக்களையும் கொண்ட நாவலர் பெருமான் அவர்கள்  இன்று நினைவுகூரப்படுவது சாலச் சிறந்ததே. காலத்தின் கட்டாயமே. அவரின் தூர நோக்கு சிந்தனை, சைவத்திற்கும் தமிழிற்கும் அவர் ஆற்றிய உதவிகள், சமயநெறிகள் மாட்சிமை பெறுவதற்கு அவர் ஆற்றிய பணிகள் யாவும் மேலும் மேலும் எம்மால் சிந்தித்துப் பார்க்க வேண்டியவையே. ‘தமிழர் என்றோர் இனம் உண்டு. தனியே அவர்க்கோர் குணம் உண்டு’ என்று மற்றவர்கள் எம்மைப் பார்த்து விளிப்பதற்கு ஏற்ற விதத்தில் நாவலர் வாழ்ந்து காட்டினார். எளிய வாழ்க்கை முறைமைக்கு அவர் எடுத்துக் காட்டாக விளங்கினார்.

ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களின் பெருமைகளையும் சிறப்புக்களையும் பற்றி நான்கு நாட்கள் தொடர்ச்சியாகக் கலை நிகழ்வுகளுடன் கூடிய மாநாட்டில் ஆராய இருக்கின்றீர்கள். இந்த மகாநாட்டின் ஆரம்பதினமாகிய இன்று உரையாற்றக்கிடைத்தமைக்கும் குருபூஜை நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கிடைத்தமைக்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும், அமைச்சைச் சார்ந்த ஏனைய அதிகாரிகளுக்கும், அலுவலர்க்கும் இந் நிகழ்வை திறம்பட அமைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

N5

N5