அமெரிக்கா, பிரித்தானியா வாக்களித்தபடி ஐ.நா. அறிக்கை வெளிவரும் என நம்புகின்றோம்: சம்பந்தன்
அமெரிக்காவும் பிரித்தானியாவும் வாக்குறுதியளித்தபடி ஐ.நா.விசாரணை அறிக்கை நிச்சயம் வெளி வரும், அந்த அறிக்கையானது உண்மைகளை வெளிக் கொண்டுவரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
ஐ.நா.விசாரணை அறிக்கை குறித்தும் கருத்துக்கேட்ட போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் வேறு யாருமில்லை. அந்த மாகாணத்தை சேர்ந்தவர்களே. அவர்களுக்குத் தெரியும் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது என்ன நடந்தது என்று. இழப்புக்கள் பற்றியும் அழிவுகள் சம்பந்தமாகவும் போதிய ஆதரமின்றியோ தரவுகள் இல்லாமலோ அந்த பிரேரணையைக் கொண்டு வந்திருக்க முடியாது.
இதேவேளை இலங்கைக்கெதிரான மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை வெளிவராது காலதாமதமாகலாம் என்ற விவகாரம் என்ன முடிவைப் பெறுகிறதோ பொறுத்திருக்க வேண்டும். அமெரிக்காவும் ஐக்கிய ராட்சியமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதியின் படி விசாரணை அறிக்கை நிச்சயமாக வெளிவரும். அந்த அறிக்கை நடந்த விடயங்களையும் உண்மையையும் வெளிகொண்டு வருமென்று நம்பலாம்.
வடமாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றார்கள். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ் மக்கள் அனைவரும் மதிக்க வேண்டியது எமது கடமை. தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற நீண்ட கஷ்டங்களை துன்பங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டியது அவசியம். அந்த தீர்மானத்தின் அடிப்படையில் நாட்டில் வாழுகின்ற சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் உண்மை சொல்லப்பட வேண்டும். நடந்தது என்ன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும்.
போர்க்குற்றங்கள் சம்பந்தமாக உண்மை அறியப்பட்டு ஐ.நா. சபையின் தீர்மானத்தின் அடிப்படையிலும் மனித உரிமைப் பேரவையின் கோரிக்கைக்கு அமைவாகவும் சர்வதேச விசாரணை நடைபெற்றிருக்கிறது. எனவே விசாரணையின் அடிப்படையில் உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். நடந்தது என்ன என்பதை நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் அறிய வேண்டும். அறிவது அவசியம். நாட்டில் வாழுகின்ற இனங்களுக்கிடையில் உண்மையான புரிந்துணர்வையும் சமத்துவமான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்பட வைப்பதாக இருந்தால் ஒழிவு மறைவின் மூலமாகவோ மூடி மறைப்பதன் மூலமாகவோ அதைக் கொண்டு வர முடியாது.




