சர்வதேச விசாரணைக் கூண்டில் இலங்கையை நிறுத்த தமிழ்த் தலைவர்கள் முயற்சி: நிமால் குற்றச்சாட்டு
இலங்கையை சர்வதேச விசாரணைக்கூண்டில் நிறுத்த தமிழ் தலைமைகள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தும் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினை சர்வதேசத்தின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கவே முயற்சிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் தீர்மானம் இலங்கையை சர்வதேச விசாரணைக்கூண்டில் நிறுத்தும் முயற்சியே எனவும் தெரிவித்திருக்கின்றார்.
“விடுதலைப்புலிகளுடனான ஆயுதப் போராட்டத்தில் சிங்கள மக்கள் பல இழப்புக்களை சந்தித்தனர். நாடு மிகவும் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் எமது இராணுவத்தின் தியாகமும் அரசாங்கத்தின் முயற்சியுமே விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க துணை புரிந்தது. யுத்தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்கள் தமது சுதந்திரத்தினை வென்றெடுத்துள்ளனர்.
சுயாதீனமானதொரு தேர்தல் அங்கு நடத்தப்பட்டது. இராணுவத்தினரையும் குறைத்து மக்களை வாழக்கூடிய சூழ்நிலைக்கு கொண்டு சென்றோம். அதேபோல் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பொது அணிக்கு ஆதரவு வழங்கி தமது நிலைப்பாட்டினை தெரிவித்தனர். இதில் பொது எதிரணியுடனான உடன்படிக்கைகள் புரிந்துணர்வுகளுடனேயே கைகோர்த்தனர்.
அவ்வாறானதொரு நிலையில் மீண்டும் நாட்டை குழப்பகரமான சூழலுக்கு கொண்டு செல்லவே வடமாகாண சபை முயற்சிக்கின்றது. வடமாகாண சபையில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் நாட்டின் நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.




