அதிகாரத்தை பகிர்வதற்கான அடிப்படை விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை : பிரதமர்
நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக மாற்று விடயங்கள் மூன்று முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் பொருத்தமான முறையொன்றை தெரிவு செய்ய முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்கள் தயாரித்த அறிக்கைகளை நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்வதற்கான அடிப்படை கோட்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறை தொடர்பிலும், மாற்று யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பை வகுப்பதற்கான நடவடிக்கைகள் குழு இந்த உபகுழுக்களை நியமித்திருந்தது. அரசியல் யாப்பை வகுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு பேரவையின் முதலாவது கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
அடிப்படை உரிமை, நிதி தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொலிஸ் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், அரச சேவை மறுசீரமைப்பு, மத்திய சுற்றாடல் தொடர்பான உபகுழுக்களின் அறிக்கைகள் இதில் அடங்கியிருந்தன. ஜனநாயக அரசாங்கம் என்ற ரீதியில் இந்த அறிக்கையை சமர்ப்பித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில் அரசாங்கத்தின் தேவைக்கு அமைய அரசியல் யாப்பை நாட்டுக்கு வழங்க வேண்டும். இதனால் இந்த குழுக்கள் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. நடவடிக்கை குழவினால் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை 40. பல்வேறு துறைகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க. புதிய அரசியல் யாப்பில் மதம் தொடர்பில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமை சிறந்த நிலையாகும். இதனால் ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த உபகுழுக்களின் அறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைவரையும் தெளிவுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த அரசியல் யாப்பபை வகுப்பது தொடர்பில் நாட்டில் விரிவான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பாகும் இது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். -(3)




