செய்திகள்
மக்களுக்கான அபிவிருத்திகளை தமிழ்க் கூட்டமைப்பு நிறுத்தியுள்ளது
தமிழ் மக்களின் காயங்களை ஆற வைக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை.
மாறாக அதனை தொடர்ந்து சொறியவே அவர்களுக்கு ஆசை என கூறியிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் பொருத்து வீடுகளை, உப்பளத்தை, இரணைமடு குடிநீர் திட்டத்தை, பொருளாதார மத்திய நிலையத்தை என வட மாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட பல திட்டங்களை கூட்டமைப்பு நிறுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
யாழ்.நல்லூர் பகுதியில் சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடக்கில் 1 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் தேவையாக உள்ள து.
நாங்கள் 2.1 மில்லியன் ரூபா செலவில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தோம். அதனை எதிர்த்தார்கள். 2.1 மில்லியன் ரூபா பணத்தில் 3 வீடுகளை அமைக்கலாம் என்றார்கள். பின்னர் நாங்கள் 6 லட்சம் ரூபாய் குறைத்து தளபாடங்கள் இல்லாமல் 65 ஆயிரம் வீடுகளை அல்ல. 22 ஆயிரம் வீ டுகளை அமைக்க நடவடிக்கை எடுத்தோம்.
அதனையும் எதிர்த்தார்கள். 97 ஆயிரம் வீடுகள் தேவை என மக்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். எனவே நான் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளையா? மக்களின் கோரிக்கையையா? பார்ப்பது என குழம்பியுள்ளேன்.
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தைப் பாருங்கள். அங்கே மக்கள் மழை வெள்ளத்திற்குள் இருக்கின்றார்கள்.
இது சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமை. அதனை எதற்காக தடுக்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை. இப்போது தமிழ் கட்சிகள் இணைந்து வீடுகளைக் கட்டவுள்ளதாக அறிகிறேன். கட்டலாம் மக்களுக்கு கிடைத்தால் சரி. ஆனால், எப்போது கட்டுவார்கள் என்பதுதான் கேள்வி.
2018 ஆம் ஆண்டு கட்டுவார்கள். பின்னர் சொல்வார்கள் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒன்றையுமே செய்யவில்லை என. இதேபோல் உப்பளம் அமைப்பதை தடுத்தார்கள். இரணைமடு குடிநீர் திட்டத்தை தடுத்தார்கள், பொருளாதார மத்திய நிலையத்தை தடுத்தார்கள்.
இப்படியே எல்லாவற்றையும் தடுத்துக் கொண்டேபோனால் அரசாங்கம் இங்கே எதனை செய்வது? இவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது எமக்கு தெரியவில்லை எம்மைப் பொறுத்தமட்டில் தமிழரசுக் கட்சி செய்தால் என்ன, அரசாங்கம் செய்தால் என்ன மக்களுக்கு பலன் கிடைத்தால் சரி. சிலர் பாராளுமன்றத்தில் சுவாமிநாதன் மீது நம்பிக்கை இல்லை என்கின்றனர்.
நான் தமிழ் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தேனா? தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் அது துரோகமா? இவர்களுக்கு தமிழ் மக்க ளின் காயங்களை ஆற வைக்கும் எண்ணமே இல்லை. அதனை சொறிந்து கொண்டிருப்பதையே விரும்புகின்றார்கள் என்றார்.
n10




