செய்திகள்

பேரவையின் தென்னிலங்கை விஜயம் புரிதலைக் கொண்டுவருமா…?

-நரேன்-

இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பிலிருந்தே சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான குரோத உணர்வுகள் விதைக்கப்பட்டு விட்டது. நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் இந்த குரோத உணர்வு திட்டமிட்ட வகையில் சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்ற செய்யப்பட்டது. 1983 வரையான காலப்பகுதி இனவரக்கலவரம் என்ற பெயரால் இரண்டு மக்கள் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற கலவரமாக சித்தரிக்கப்பட்டது. கலவரத்தை அடக்குவதற்கு பொறுப்பாக இருந்த அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது அல்லது அதற்கு உரமூட்டியது. மனிதாபிமானத்துடன் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த சிங்கள மற்றும் இஸ்லாமியர்கள் துரோகிகளாக பார்க்கப்பட்டனர். அந்த நேரங்களில் அவற்றை கலவரம் என்று சொல்வதை விட ஆட்சியாளர்களின் இருப்புக்காக சிங்கள இனவாத வன்முறைக் கும்பல் தமிழர்களின் மீது திட்டமிட்டு தாக்குதலை மேற்கொள்வதற்கு அரச தரப்பினராலும் சிங்கள பௌத்தமேலாதிக்கவாதிகளாலும் தூண்டிவிடப்பட்டது என்பதே உண்மை.

கலவரம் என்பது இரண்டு தரப்புக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்க வேணடும். ஆனால் தமிழ் தரப்பு தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அனைத்து உடமைகளையும் கைவிட்டு ஓடி ஒழிந்தது. இதனை தமது பதவிக்காலம் முடிந்த பின்னர் அனைத்து அசியல்வாதிகளும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர். இதனைப் போன்றே இந்த நாட்டின் நீதிபதிகளும் தாங்கள் ஓய்வு பெற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக தாங்கள் வழங்கிய தீர்ப்பு குறித்தும் கவலை தெரிவித்திருத்கின்றனர். ஒட்டுமொத்த சிங்கள மக்களும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் போலவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் போலவும் சிங்கள பௌத்த இனவாத கடும்போக்காளர்களினால் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது.

1990 களின் ஆரம்பத்தில் (1980 – 1990வரை) குனிய குனிய குட்டுபவனும், குட்ட குட்ட குனிபவனும் முட்டாள்கள் என்ற சித்தாந்தத்திற்கு ஏற்ப சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளுக்கு அவர்களுக்கு புரியக் கூடிய மொழி நடையில் சொல்வதன் மூலமே தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று அன்றைய இளைஞர்கள் முடிவெடுத்தனர். அதன் விளைவே தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம். இந்த ஆயுதப் போராட்டத்தில் தமிழ் தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்த சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் சில இயக்கங்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததுடன், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும் செயற்பட்டிருந்தனர். ஆகவே, மொழி என்பதும் இனம் என்பதும் ஒரு தடையாக இருந்ததில்லை. கொள்கையும், அரசின் திட்டமும் அதன் நடைமுறைகளுமே பிரச்சனையாகவிருந்தது.

இளைஞர்களின் ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்திருந்த நிலையில் கடந்த காலத்தில் எதிரும் புதிருமாக பிரிந்து நின்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டவர்கள் 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கைகோர்த்து கொண்டனர். குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டை காப்பாற்றவும், மேற்கத்தேய நாடுகளின் கோபத்தில் இருந்தும், அதிருப்தியில் இருந்தும், ஐ.நாவினது அழுத்தங்களில் இருந்தும் விடுபடுவதற்காகவே அவர்கள் ஒன்றிணைந்தார்கள். இந்த ஒன்றிணைவை தமிழ் தேசிய இனமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அரசியல் தீர்வுக்காக தன்னையே நம்பியிருந்த தமிழ் தலைமையிடம் மேற்குலகம் நிர்பந்தித்திருந்தது. இதன்விளைவாகவே தமிழ் தலைமையும் நிபந்தனையற்ற ஆதரவை அந்த இரண்டு கட்சியின் கூட்டுக்கு வழங்கியிருந்தது. ‘கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட. அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட’ என்ற பாடல் வரிக்கு அமைய இப்பொழுது அந்த இரண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வைத்து விளையாடத் தொடங்கியிருக்கின்றன.

ஆட்சி மாறிய பின்னர் அனைத்து பிரச்சனைகளும் சுமுகமாக தீர்க்கப்பட்டு விடும் என்று நம்பிய தமிழ் தலைமைகளுக்கு குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அது அவ்வளவு எளிதான கரியமல்ல என்பது இப்பொழுது புரிந்திருக்கின்றது. ஆகவே தான் அதிருப்திகள் இருக்கிறது. சந்தேகங்கள் இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்றோம். இந்த சூழலை குழப்பி விடக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைமை கூறி வருகின்றது. இந்தப் பின்னனியில் தான் சர்வதேத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் தலைமைக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதை மீண்டும் எடுத்துச் சொல்வதற்கான தேவை எழுந்தது. இதற்காகத் தான் தமிழ் மக்கள் பேரவையினால் எழுக தமிழ் என்னும் தொனியில் மக்கள் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களும் அதனுடன் இணைந்ததாக தமிழ் மக்கள் பேரவையின் புதிய அரசியல் யாப்புக்கான யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கும் அமைவாகவே அங்கு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. யாரையும் வாழ்த்தியோ அல்லது ஒழிக கோசமிட்டோ ஊர்வலத்தினர் செல்லவில்லை. உரையாடியவர்களும் அத்தகைய எந்தவொரு சொற்பிரயோகத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தென்னிலங்கையில் இது ஒரு இனவாதமாக பார்க்கப்பட்டது. இதற்கு தென்னிலங்கை சிங்கள சகோதர ஊடகங்களும் துணைபோயிருந்தன.

தமிழ் மக்கள் பேரவையினுடைய பேரணி முடிவடைந்து சுமார் இரண்டு மாதம் முடிந்த நிலையில் சிங்கள சகோதரர்களுக்கு தமிழ் மக்களின் உணர்வுகளையும், எழுக தமிழ் பேரணி தொடர்பான விளக்கத்தையும் எடுத்துச் சொல்வதற்காக பேரவைவியின் இணைத்தலைவர்களால் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நடத்தப்பட்டது. இதில் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார். அதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மூன்று மொழிகளிலும் பதிலளித்திருந்தார். இதன்போது மாவீரர் தினம் அனுஸ்டிப்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்ததுடன், சமஸ்டி என்பது நாட்டை பிளவு படுத்துவது அல்ல என்பதையும் எடுத்துரைத்திருந்தார். இணைத்தலைவர்களான இதய வைத்திய சிகிச்சை நிபுணர் லக்ஸ்மன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தராஜா ஆகியோரும் சமூகமளித்து தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தனர். பேரவையினரின் இந்த முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிட்டியிருக்கின்றது என்றே சொல்ல வேண்டியுள்ளது. இந்த வெற்றி எவ்வளவு தூரம் தொடரும் என்பதும் கேள்விக்குறியே..?

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்கள் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் மனிதவுரிமைகள் தொடர்பாகவும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் காத்திரமாக பங்களிப்பை செய்திருந்ததுடன் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தெளிவுபடுத்தி, அவர்களிடம் நற்பெயரையும் சம்பாதித்திருந்தார். இதனை விரும்பாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் தங்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக ரவிராஜை கொலை செய்தனர். ரவிராஜ் எந்தளவிற்கு சிங்கள மக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்திருந்தார் என்பதற்கு இன்றைய சுகாதார அமைச்சரும், அமைச்சரவையின் இணை பேச்சாளருமான ராஜித சேனாரத்தின அண்மையில் தெரிவித்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது.

சகோதார மொழி பேசுகின்ற சிங்கள உறவுகளுக்கு அவர்களது மொழியில் பேசுவதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது. மாறி மாறி இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் அவர்களது மனங்களில் விதைத்துள்ள விசங்களை நீக்குவதற்கு முன்வர வேண்டும். ஆயுதப் போராட்ட காலத்தில் பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளித்த சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் அதே உணர்வுடன் நாட்டின் ஐக்கியத்திற்காக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு செல்வதற்கு சிங்கள மக்களுக்கும் புரியக் கூடிய வகையில் தெளிவுபடுத்த வேண்டும். சகோதர மொழி ஊடகங்களும் இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கையில் இருந்து விடுபட்டு நாட்டின் ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். இந்த நல்லாட்சியிலும் கூட ஆட்சியாளர்கள் வடக்குக்கு ஒரு அணுகுமுறையையும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு மற்றொரு அணுமுறையையும் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. உதாரணமாக ஆவா குழு என்று சொல்லப்படுகின்ற குழுவைச் சேர்ந்தவர்கள் என்னும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களையும், வடக்கில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளவர்களையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளனர். அதேசமயம் பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடத்தியமை மற்றும் பாதாள உலகக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களையும் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழும் தடுத்து வைத்துள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அந்த அந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தின் கீழ் வருகின்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பிற்கு கொண்டு சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, அரசியல் யாப்பிற்கு முரணாணது என்றும் சர்வதேச மன்னிதவுரிமை சட்டங்களை மீறிய செயல் என்றும் தெரிவித்துள்ளார். ஆக, இலங்கையின் ஆளும் வர்க்கத்தினரிடையில் மனமாற்றம் ஏற்படாமல் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுவது என்பது சாத்தியமற்றது. ஆட்சியாளர்களின் மனதிலும், அவர்களது சட்டங்களை அமுலாக்குகின்ற அரச எந்திரங்களினது மனோநிலையிலும், மக்களின் மனோ நிலையிலும் ஒரே நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இந்த நாடு ஐக்கியமாகவும், தன்னிறைவுடனும் ஏற்றுமதியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடனனேயே தமிழ் மக்கள் என்றும் இருந்து வந்துள்ளனர். அந்த உணர்வுகளுக்கு உரமூட்ட வேண்டியது இன்றைய ஆட்சியாளர்களின் கடமை. அந்த உணர்வை காத்திரமாகவும் வினைத்திறன் மிக்க வகையிலும் அரசுக்கு புரிய வைக்க வேண்டியது தமிழ் தலைமைகளின் கடமை.

N5