சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாகும் பிக்குமாரின் நடத்தைகள்
- வீ.தனபாலசிங்கம்
இரைச்சலினால் சுற்றாடல் மாசடைவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கொன்றின் விசாரணையில் ஆஜராகுமாறு இராஜகிரியவில் உள்ள பௌத்த விகாரையின் குருவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது. அவர் மன்றில் ஆஜராகத் தவறியதனால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பிரதம நீதியரசர் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வினால் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவையடுத்து தேரரைக் கைது செய்த இராஜகிரிய பொலிஸார் விளக்கமறியலில் வைத்தனர். அவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிறகு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிணைமனுவை பரிசீலனைக்கு எடுப்பதற்காக உயர்நீதிமன்றத்திற்குள் பிரதம நீதியரசரும் வேறு இரு நீதியரசர்களும் பிரவேசித்தபோது இராஜகிரிய தேரருக்கு தங்கள் ஒருமைப்பாட்டை வெளிக்காட்டுவதற்கு வந்திருந்த பெரும் எண்ணிக்கையான பிக்குமார் இருக்கைகளை விட்டு எழுந்து நீதித்துறைக்குரிய பாரம்பரிய மரியாதையைச் செலுத்த மறுத்துவிட்டனர்.
அதை அவதானித்த பிரதம நீதியரசர் தேரரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் நீதிமன்றச் சம்பிரதாய நடைமுறைகளை சகலரும் மதித்துப் பேண வேண்டும் என்று அறிவுறுத்தினார். தேரரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதியரசர்கள் உத்தரவிட்டதையடுத்து நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு வெளியே வந்த பிக்குமார் அந்த உத்தரவை கடுமையாகக் கண்டனம் செய்தனர்.
இச்சம்பவங்களையடுத்து பௌத்த மதகுருமாரை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு மகாசங்கத்தினரில் ஒரு பிரிவினராலும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சில அரசியல் கட்சிகளினாலும் முன்வைக்கப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்தே தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதால் நீதித்துறையின் தீர்மானங்களில் தன்னால் தலையிட முடியாது என்றும் நிறைவேற்று அதிகார பீடத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே முரண்பாடு ஏற்படக்கூடியதாக செயற்படுவதென்பது ஜனநாயகத்தை ஆபத்துக்குள்ளாக்கி விடும் என்றும் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டியிருந்தது. சட்டத்தையும் நீதிமன்றங்களையும் சகல பிரஜைகளும் மதித்து நடக்க வேண்டும் என்றும் பௌத்த பிக்குமாரும் நீதித்துறைக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டவர்கள் என்றும் மல்வத்தை பீடாதிபதியும் அஸ்கிரிய பீடாதிபதியும் அறிவுரை கூற வேண்டியிருந்தது.
உயர் நீதிமன்றத்துக்குள் நீதியரசர்கள் பிரவேசித்தபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி நீதிமன்றப் பாரம்பரியத்தை மதிக்கத் தவறிய பிக்குமாரின் செயல் பரந்தளவில் கன்டனத்துக்குள்ளாகியிருந்த போதிலும்இ அந்தப் பிக்குமாரை நியாயப்படுத்தி பல்வேறு பௌத்த அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தன.
இராஜகிரிய விகாரையின் தேரர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய திகதியை அறிந்திருக்கவில்லை என்று கூறி அவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையடுத்து உயர்நீதிமன்றம் பிறிதொரு தினத்தில் அவரை விடுதலை செய்தது. உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டிய மதமாற்றங்களைக் கண்காணிப்பதற்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளராக அன்று இருந்த கலகொட அத்தே ஞானசார தேரர் மகா சங்கத்தினரை அவமதித்ததாக பிரதம நீதியரசை கண்டனம் செய்ததுடன் அவரால் ஏற்கனவே வழங்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான தீர்ப்புகள் சட்ட விரோதமானவை என்றும் கூடக் கூறியிருந்தார்.
பிரதம நீதியரசரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார். நீதிமன்றச் சம்பிரதாயங்களை மதிக்கத் தவறிய பிக்குமாரின் நடத்தைகள் குறித்து சர்ச்சைகள் கிளம்பிய அந்த நேரத்தில் உயர் நீதிமன்றத்தை மேலும் அவமதிக்கும் வகையிலும் பிரதம நீதியரசரினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை சட்ட விரோதமானவை என்றும் வர்ணித்து இன்னொரு பிக்கு பேசுவதற்கு கிஞ்சித்தும் தயங்காமல் துணிச்சலை வரவழைத்துக் கொண்ட நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது.
இது நடந்தது இன்று நேற்றல்ல, 8 வருடங்களுக்கு முன்பு. தற்போது சில பௌத்த பிக்குமார் நாட்டின் சட்டங்களில் இருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டு அடாவடித்தனங்களில் ஈடுபடுவதுடன் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் மோதல்களைத் தூண்டிவிடக்கூடியதாக வெறுப்புணர்வுப் பேச்சுக்களை நிகழ்த்திக் கொண்டிருப்பது குறித்து கிளப்பப்பட்டிருக்கும் சர்ச்சைகளையடுத்து அந்த 8 வருடங்களுக்கு முன்னரான சம்பவமே உடனடியாக நினைவுக்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில் பிக்குமார் தங்களது துறவற அந்தஸ்த்துக்கு எதுவிதத்திலும் பொருத்தமில்லாத வகையில், நாகரிகமற்ற முறையில் வன்முறையாக நடந்துகொண்ட சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்றிருந்த போதிலும், சட்டத்தின் ஆட்சியையே அவர்கள் மதிக்காமல் நடந்து கொள்கின்ற போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. நீதிமன்றங்களின் முன்பாக அடாவடித்தனமாக அவர்கள் நடந்துகொண்ட சில சம்பவங்கள் மிக அண்மைக் காலத்தில் இடம்பெற்றிருக்கின்றன என்ற போதிலும், நாட்டின் நீதித்துறையின் உச்ச நிறுவனமான உயர்நீதிமன்றத்தில் அதுவும் பிரதம நீதியரசரையே அவமதிக்கும் வகையிலான அவர்களின் அந்த நடத்தை சட்டத்தை விடவும் தாங்கள் மேலானவர்கள் என்ற ஒருவித மமதையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தி நின்றது. நயநாகரிகமற்ற செயற்பாடுகளைப் பொறுத்தவரை பிக்குமாரில் சிலர் எந்தளவு தூரத்துக்கு செல்லத் தயாராகியிருக்கிறார்கள் என்பதை உணர்த்தவே அச்சம்பவத்தை இங்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நடுவீதியில் வைத்து பொதுமக்களினதும் பொலிஸாரினதும் முன்னிலையில் தமிழ்க் கிராம சேவையாளரை இனத்துவேசமாக தூஷித்து அச்சுறுத்தியதை காண்பிக்கும் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவியிருக்கின்றன.
அவர் அந்தக் கிராம சேவையாளரை புலி என்றும் நாய் என்றும் அவதூறு செய்ததுடன் சிங்களவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்தாவிட்டால் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ‘கொட்டத்தை’ ஒடுக்கப் போவதாகவும் எச்சரிக்கை செய்தார். ஒரு அரசாங்க ஊழியரை கடமையைச் செய்யவிடாமல் இடையூறு செய்து வன்முறையாக நடந்துகொண்ட அந்தப் பிக்குவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பொலிஸ் அதிகாரிகள் அவரை சாந்தப்படுத்தி அழைத்துச் செல்வதையும் வீடியோவில் காணக்கூடியதாக இருந்தது. மட்டக்களப்பில் பிக்குவின் அடாவடித்தனத்தைக் கண்டித்து பிரதேச செயலக அலுவலர்களும் கிராம சேவையாளர்களும் மறியல் போராட்டத்தை நடத்தியதுடன் சம்பந்தப்பட்ட கிராம சேவையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் செய்திருந்தார். அதுமாத்திரமல்ல, 350 க்கும் அதிகமான கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் (இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) பிக்குவின் நடத்தைகள் குறித்து சான்றுகளுடன் பொலிஸ் மாஅதிபருக்கு விரிவான முறையீட்டு கடிதம் ஒன்றினையும் அனுப்பிவைத்திருந்தார்கள். (இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணம்வரை பொலிஸ் மா அதிபர் பிக்குவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவையும் பிறப்பித்ததாக செய்திகள் வரவில்லை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிரேஷ்ட அமைச்சர்களும் இனங்களுக்கிடையில் பதற்ற நிலையைத் தோற்றுவிக்கக்கூடியதாக செயற்படுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்படையாக அறிவுறுத்தல்களை விடுத்திருக்கிறார்களே தவிர, மட்டக்களப்புச் சம்பவம் தொடர்பில் எந்தவிதமான பிரத்தியேக நடவடிக்கைக்கும் உத்தரவிட்டதாக இல்லை. இந்தப் பிக்கு கடந்த காலத்திலும் அடாவடித்தனமான செயற்பாடுகளில் இறங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுபோகஇ சட்ட விரோதமாக காணிகளில் குடியேறியவர்களுக்கு எதிராகவே அந்த கிராம சேவையாளர் வழக்குகளைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளைஇ கடந்த சில வருடங்களாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக் குரோதப் பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் ஏற்கெனவே நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கு விசாரணையொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும்இ எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவர் மீண்டும் இனங்களுக்கிடையில் பதற்ற நிலையைத் தோற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமேயிருக்கிறார்.
தான் விதித்த காலக்கெடுவுக்குள் முஸ்லிம் அமைப்பொன்றின் முக்கியஸ்தரை பொலிஸார் கைது செய்யாவிட்டால் கொழும்பின் ஒரு குறித்த பகுதியில் இரத்தக்களரி ஏற்படும் என்றும் தங்களைச் சார்ந்த நூறு இளைஞர்கள் உயிரைத் தியாகம் செய்வதற்குத் தயாராயிருக்கிறார்கள் என்றும் அவர் சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அவர் குறிப்பிட்ட அந்த முஸ்லிம் அமைப்பின் முக்கியஸ்தர் தேரரின் 24 மணிநேரக் காலக்கெடுவுக்கு முன்னதாக கைது செய்யப்பட்டதை நாடு கண்டது. அந்தச் சர்ச்சைக்குப் பின்னணியில் உள்ள காரணிகள் ஒருபுறமிருக்கட்டும்இ தலை நகரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பெருமளவில் வாழும் பகுதியில் இரத்தக்களரி ஏற்படுமென்றும் பலர் சாவார்கள் என்றும் பகிரங்கமாகக் கூறுகின்ற ஒரு மதகுரு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அவரையும் அவரது இயக்கத்தைப் போன்ற வேறு சில இயக்கங்களின் பிரதிநிதிகளையும் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதிக்கு அழைத்து நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்ததாக செய்திகளில் அறியக்கூடியதாக இருந்தது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பேச்சுவார்த்தையே உகந்த வழி என்று ராஜபக் ஷவும் அவருடனான பேச்சுவார்த்தை திருப்தியானதாக இருந்ததாக ஞானசார தேரரும் கூறியிருந்தார்கள்.
இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் வெறுப்புணர்வையும் சந்தேகத்தையும் தூண்டி விடுகின்ற நச்சுத்தனமான சூழ்நிலையை நாட்டில் உருவாக்குவதில் முழு மூச்சாக ஈடுபடுகின்ற இத்தகைய பிக்குமார் முன்னிலையில் ஏது செய்வதென்று அறியாதவர்களாக பொலிஸார் நிற்கிறார்கள். அவர்கள் முன்னால் பொலிஸார். மிகவும் அடக்க ஒடுக்கமாகவே பேசுகிறார்கள். அந்த பிக்குமாரை இயன்ற வரையில் சாந்தப்படுத்துகின்ற அணுகுமுறைகளையே கையாளக்கூடிய கையறு நிலையில் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள். தாங்கள் எதற்கும் எவருக்கும் கட்டுப்பட வேண்டியவர்கள் இல்லை என்று மகா சங்கத்தினரில் ஒரு கணிசமான பிரிவினர் நினைக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையின் அரசியலமைப்பு பௌத்த மதத்துக்கு முதன்மையான இடத்தைக் கொடுத்திருப்பதுடன் புத்த சாசனத்தை பேணிப் பாதுகாத்து வளர்க்க வேண்டியது அரசின் கடமையென்றும் கூறுகிறது. அரசியலமைப்பில் உள்ள இந்த ஏற்பாட்டை இந்தப் பிக்குமார் நாட்டின் ஏனைய பிரஜைகளை விடவும் தங்களுக்கு சட்ட ரீதியாக விசேட அந்தஸ்த்தை வழங்குகின்ற ஒன்றாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள் போலும்.சட்டத்துக்கு மேலானவர்களாக பிக்குமார் இருக்க முடியுமென்று புத்த பெருமான் ஒருபோதுமே போதிக்கவில்லை. தலையை மொட்டை அடிப்பதன் மூலம் மாத்திரம் ஒருவர் பிக்குவாக மாறுவதில்லை என்று புத்த பெருமானே கூறியிருக்கிறார். அதேபோன்று காவியுடையை அணிவதன் மூலம் மாத்திரம் ஒருவர் பிக்குவாகிவிட முடியாது. மக்களும் பொலிஸாரும் இதைப்புரிந்து கொள்வது அவசியம். பிக்கு ஒருவரின் தகுதிக்கு பொருத்தமில்லாத எந்த நடத்தையுமே பௌத்த மதத்திலோ அல்லது நாகரிக சமுதாயத்திலோ சகித்துக் கொள்ளப்படலாகாது. இரு மாதங்களுக்கு முன்னர் நியூயோக்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையை தேரவாத பௌத்தத்தைக் கடைப்பிடித்து புத்தரின் போதனைகளை அவற்றின் தொன்மை நலம் கெடாமல் பாதுகாக்கின்ற ஒரு நாடு என்று கூறிப் பெருமைப்பட்டார். ஆனால்இ உண்மையிலேயே இலங்கையில் பௌத்தமதம் ஒரு அரசியல் மதமாக்கப்பட்டுவிட்ட துரதிர்ஷ்டவசமான நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டின் சுயாதிபத்தியம்இ இறைமை என்பவற்றை ஆட்சி நிறுவன கட்டமைப்பு மீதான சிங்களஇபௌத்த மேலாதிக்கம் என்பதைத் தவிர வேறு எதுவுமாக பெரும்பான்மையான பிக்குமார் விளங்கிக் கொண்டிருப்பதாக தெரியவில்லை.
சிங்கள அரசியல் சமுதாயம் அதன் தவறான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்துவதற்கு மகா சங்கத்தினரைக் காலங் காலமாகப் பயன்படுத்தி வந்திருப்பதன் தவிர்க்க முடியாத ஒரு விளைவாகவே சட்டத்தின் ஆட்சிக்குத் சவால் விடுக்கின்ற வகையில் அமைந்திருக்கும் பிக்குமாரின் அடாவடித்தனமான செயற்பாடுகளை நோக்க வேண்டியிருக்கிறது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிராகரித்து அவர்களின் உரிமைகளை மறுக்கின்ற இலங்கையின் இனக்குழுமப் பெரும்பான்மைவாத (நுவாniஉ ஆயதழசவையசயைnளைஅ) அரசியலின் ஒரு ‘முன்னரங்கக் காவலர்களாக’ மகாசங்கத்தினர் விளங்குகிறார்கள். சிறுபான்மை இனங்களுக்கு எதிரான தங்களது செயற்பாடுகளை சிங்கள பௌத்த சமுதாயத்தை பாதுகாப்பதற்கான ஒரு ‘புனிதக் கடமை’யாக அவர்கள் கருதுகிறார்கள் போலும். சிறிய எண்ணிக்கையிலான பிக்குமார் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்ற போதிலும்இ அவர்களினால் தங்கள் சமுதாயத்தில் எந்தவிதமான ஆரோக்கியமான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததில்லை.
பௌத்தமதம் உலகிற்கான அதன் செய்தியாக அகிம்சையையும் சமாதானத்தையுமே போதிக்கிறது. எந்தவிதமான வன்முறையையும் உயிர்ச்சேதத்தையும் பௌத்தமதம் ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால்இ இலங்கையில் சுமார் மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட போரில் அரசாங்க ஆயுதப்படைகளை மகாசங்கத்தினர் ஆதரித்து ஆசீர்வாதம் வழங்கினார்கள். படைக்கலன்களுக்கு நூல் கட்டிவிட்டார்கள்
அதுமாத்திரமல்லஇ தமிழ்ப்பகுதிகளில் போர் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூடஇ இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதை ஆதரிப்பவர்களாகவும் மகா சங்கத்தினர் இருக்கிறார்கள். இது இவர்களின் செயற்பாடுகளில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற ஒழுக்க நியாயப் பாரம்பரியக் குறைபாடாகும்.
இது இவ்வாறிருக்கஇ இனங்களுக்கிடையில் குரோதத்தை வளர்க்கக்கூடிய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்ற தீவிரவாத பிக்குமாருடன் அரசாங்க அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருப்பது அவர்கள் தெரிவித்து வந்திருக்கின்ற கருத்துக்களுக்கும் முன்னெடுத்து வந்திருக்கின்ற செயற்பாடுகளுக்கும் ஒருவித ‘அரசியல் நியாயப்பாட்டை’ வழங்குவதாக அமைகிறது. பொதுபல சேனா போன்ற அமைப்புகள் அரசியல் அகராதியில் ‘விளிம்பு நிலை இயக்கங்கள்’ (குசiபெந புசழரி) என்ற வகையைச் சார்ந்தவையாகவே ஆரம்பத்தில் இருந்தன.
அவை பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்டவையாகவோ அல்லது பெரும்பான்மையான மக்களினால் வரவேற்கப்படக்கூடிய கொள்கைகளைக் கொண்டவையாகவோ இருந்ததில்லை. ஆனால்இ அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் இத்தகைய இயக்கங்களுக்கு அனுசரணை வழங்கும் வகையில் நடந்துகொண்டு வந்த காரணத்தால் அவை வலுவான இயக்கங்கள் என்ற வகையிலான தோற்றப்பாடு ஏற்படவாய்ப்பாகிப் போனது. இந்த இயக்கங்களின் தலைவர்கள் என்று கூறப்படுகின்ற தான் தோன்றித்தனமான பேர் வழிகளின் கருத்துக்களை பிரதான அரசியல் நீரோட்டத்தில் உள்ள கட்சிகளினாலும் தலைவர்களினாலும் கூட நிராகரித்து விட முடியாத ஒரு துரதிர்ஷ்டவசமான போக்கு வளர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. பொதுபல சேனா போன்ற இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக் கைகளை எடுக்காமல் மௌனம் சாதித்ததுமாத்திரமல்ல அவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் நடந்துகொண்டதால் ராஜபக் ஷ ஆட்சி அதற்கான விலையை கடந்த வருட ஜனாதிபதி தேர்தலில் செலுத்த வேண்டியிருந்தது. அந்த அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் ஆட்சி சீர் குலைந்து போயிருந்தது என்று நாட்டு மக்களுக்கு கூறி வாக்குக் கேட்டு அதிகாரத்துக்கு வந்த இன்றைய அரசாங்கமும் இனங்களுக்கிடையில் குரோதங்களைத் தூண்டிவிடும் வகையில் செயற்படுகின்ற தென்னிலங்கை இயக்கங்கள் தொடர்பில் மௌனம் சாதித்தால் அதே விலையைச் செலுத்த வேண்டிவரும் என்பதை மனதிற்கொள்வது அவசியம்.




