வடக்கு , கிழக்கில் பொருத்து வீட்டு திட்ட விவகாரம் : அரசாங்கம் , தமிழ் கூட்டமைப்பு வாக்குவாதம்
வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்படவுள்ள உலோக பொருத்து வீடுகள் திட்டம் வேண்டாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் இதனால் சபையில் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போதே இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளன.
இந்த உலோக பொருத்து வீடுகள் திட்டம் வேண்டாம் என்று கடும் எதிர்ப்பை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி., அந்த திட்டத்தை மீள் பரிசீலனை செய்யுமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் வலியுறுத்தினார்.
இதன்போது மக்களுக்கு என்ன வேண்டும் என்பது நிறைவேற்றப்படும் என்றும் அவசியம் என்றால் இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க தயாராக இருப்பதாகவும் இதன்போது தெரிவித்த பிரதமர் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்கில் நிர்ணமானிக்கப்படும் 80 சதவீதமான வீடுகள் உலோக பொருத்து வீடுகள் அல்லாதவையாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார். -(3)




