செய்திகள்
வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட முகமாலை
இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு யுத்தமானது கண்ணி வெடிவெடிகளாலும் வெடிக்காத நிலையில் மிக ஆபத்தான நிலையில் கானப்பட்ட வெடி பொருட்களாலும் பாரிய அழிவுகளைக்கண்டுள்ளன.
குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன.
இலங்கையில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக முகமாலைப்பகுதி காணப்படுகின்றது.
கடந்த 1999ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலம் வரையும் அதன் பின்னர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி முதல் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் பரஸ்பரம் மோதிக்கொண்ட ஓர்பகுதியாகவும் தினமும் பல உயிர்களை காவுகொண்டும் பலரை அங்கவீனர்களாகிய ஓர் பகுதியாகவும் கிளாலி முதல் முகமாலை நாகர்கோவில் வரையான முன்னரங்க நிலை காணப்பட்டது.
இது அப்போது போரில் ஈடுபட்ட இரு தரப்புக்களினதும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் களமாகவும் கூட இருந்துள்ளது.
அங்குலம் அங்குலமாக வெடிபொருட்கள் விதைக்கப்பட்டும் எறிகணைகள் துப்பாக்கி ரவைகள் என்பவற்றால் சல்லடை போடப்பட்டு எண்ணற்ற உயிர்கள் பறிக்கப்பட்ட ஓர் இடமாகவும் அப்போது முகமாலையும் அதனை அண்டிய பகுதிகளும் இருந்துள்ளன.

இதிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் இருபது வருடங்களின் பின்னர் மீளவும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் வகையில் முகமாலை பகுதியில் 1859 ஏக்கர் காணிகளும் வேம்பொடுகேணி இந்திராபுரம் பகுதியில் 25 ஏக்கருமாக 1884ம்; ஏக்கர் காணி கடந்த வெள்ளிக்கிழமை (02-12) விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்கள் சென்று பார்ப்பதற்கு அங்கு மீள்குடியேறுவதற்குமான நடவடிக்கைகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எஞ்சிய பகுதிகளில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் கண்ணிவெடிகளை அகற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு பதிவுகளை மேற்கொண்ட 259 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேரில் 69 குடும்;பங்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
(மக்களின் கருத்துக்கள் )திருமதி ஜே.கொஸ்ரன் றோய்
எங்களது சொந்த வீடு இல்லாத துன்பத்தை கடந்த 20 வருடங்களாக அனுபவித்து விட்டோம். அதாவது 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் எங்களுடைய சொந்த ஊரில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று தற்போது யாழ்ப்பாணத்தில் வாடகை வீடொன்றில் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் வாடகை வீடென்றாலும் நின்மதியாக வாழவில்லை. அடிக்கடி பல வீடுகளுக்கு மாறிமாறி தான் இருந்தோம்.
தற்போது கூட ஒரு இலட்சம் ரூபா முற்பணமாகவும் கொடுத்து மாதாந்தம் நான்காயிரம் ரூபா வாடகை வீட்டுவாடகையாக கொடுக்கின்றோம்.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்று மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாகியும் எங்களுடைய காணியை பார்க்க வேண்டும் எங்களது வீட்டில் குடியிருக்க வேண்டும் என அவாவும் ஆசையும் எங்களுக்கு நிறையவே இருந்தது.
இன்று எங்களது காணிகளை விடுவித்துள்ளார்கள் அதனை சென்று பார்த்தபோது எங்களின் காணியில் இருந்த கிணறு தவிர எதனையும் அடையாளம் காணமுடியாதுள்ளது.
இவற்றுக்கெல்லாம் அரசாங்கம் நஸ்ரத்தை தரவேண்டும் எங்களுக்கு ஒரு வீட்டைக்கட்டித்தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொடி மாத்தையா மகேஸ்வரி வயது 62
நாங்கள் பரம்பரையாக இந்த முகமாலை மண்ணில் தான் பிறந்து வாழ்ந்து வந்தோம். அப்போது ஏற்பட்ட நாட்டுப்பிரச்சனை காரணமாக முகமாலையில் இருந்;து இடம்பெயர்ந்து சென்று தற்போது கிளிநொச்சியில் தங்கியிருக்கின்றோம்.
இன்று எமது காணிகள் விடுவிப்பதாக சொன்னபோது எங்கள் காணிகள் எவையும் விடுவிக்கப்படவில்லை. இங்கு ஒரு பகுதி காணிகளை விடுவித்துள்ளனர்.
எங்களுடைய காணிகளில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றப்படவில்லை.
தற்போது வெடிபொருட்கள் அகற்றப்படாத காணிகளையும் வெடிபொருட்;களை அகற்றி எங்களுடைய காணிகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நாங்கள் உறவினர்களின் காணியில் வசித்து வருகின்றோம்.
இந்த காலப்பகுதியில் பல துன்பங்களை அனுபவித்து விட்டோம். அதாவது வேலி பிய்ந்து விட்டது. வேலியை அடைத்து விடுங்கள் இரவானால் கிணற்றில் தண்ணீர் அள்ளாதீர்கள் என்பார்கள் எங்கள் ஆசைக்கு ஆடு மாடு எதனையும் வளர்க்க முடியாது.
இப்படி எத்தனையோ கஸ்ரங்களை அனுபவித்து விட்டோம். எனவே எங்களது காணிகளில் வெடிபொருட்களை அகற்றி எங்கள் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என எல்லோரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் எனத்தெரிவித்துள்ளார்.
கணபதிப்பிள்ளை இரத்தினம் (வயது 74 )
தும்புமில்லடி முகமாலை நாங்கள் எங்களது ஊரில் எந்த வித குறைகளும் இன்றி வாழ்ந்து வந்தபோது கடந்த 1996ம் ஆண்டு முகமாலையிலிருந்து யுத்தம் காரணமாக எந்த பொருட்களையும் எடுக்காது இரவோடு இரவாக வெளியேறிச்சென்றோம். அப்போது ஒரேவெடிச்சத்தம் பிரச்சனை ஒரிருநாட்களில் தீர்ந்து விடும் பாதுகாப்பாக போய் வேறு இடத்தில் இருந்து வருவோம் என்று தான் சென்றோம்.
ஆனால் இன்று இருபது வருடங்களின் பின்னர் தான் எங்களுடைய காணிகளுக்கு வந்திருக்கின்றோம். எங்களது காணிகளை எங்களால் கூட அடையாளம் காணமுடியாதுள்ளது.
எங்களது வீடுகள் கிணறு எதுவும் இல்லை நாங்கள் இங்கு இருக்கும் போது எனது காணியில் சுமார் எண்ணூறு வரையான தென்னை மரங்கள் இருந்தன.
அதன் வருமானமே எனக்கு போதும் இப்போது எனது காணியில் ஒரு தென்னைமரம் கூட இல்லை. அதனை விட மா பலா தேசி எதுவும் இல்லை. எனது சொந்தக்காணி வீடு இல்லாத துன்பத்தையும் நின்மதியில்லாத வாழ்வையும் கடந்த இருபது வருடங்களாக அனுபவித்து விட்டேன்.
எங்களுடைய காணியில் நாங்கள் மீள் குடியேறி சந்தோசமாக வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தித்தரப்பட வேண்டும் இதுவே எங்களது ஆசை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிவகுரு யோகராசா வயது 78
என்னுடைய நான் வாழ்ந்த காணியை என்னால் அடையாளம் காணமுடியாதவாறு அலங்கோலமாக இருக்கின்றது. எனது மனைவியின் காணி எனக்கு 1966ம் ஆண்டு திருமணத்தின் போது சீதனமாக இந்த காணியும் வீடும் தரப்பட்டது.
அன்று தொடக்கம் இங்கு வாழ்ந்து வந்தேன் அப்போது இதில் இருந்;த தென்னைகளால் மாதாந்தம் அப்போது நான்காயிரத்து ஐயாயிரம் ரூபா வருமானம் இடைக்கும் ஒரு சந்தோசமான நின்மதியான வாழ்க்கையாக இருந்தது.
1996ம்ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட யுத்தம் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்;;;து சென்று இருபது வருடங்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கின்றோம்.
எங்களுடைய காணிகள் கண்ணிவெடிகள் அகற்ப்படாமையினால் இதுவரையும் விடவில்லை. இன்று கண்ணிவெடிகளை அகற்றி விடுவித்துள்ளனர்.
இருபது வருடத்திற்குப்பின்னர் எனது வீட்டிற்கு வந்திருக்கின்றேன். ஆனால் எதனையும் அடையாளம் காணமுடியவில்லை. எல்லாம் சின்னாபின்னமாகிபோயுள்ளது.
எங்களது காணியில் மீள்குடியேறி வாழ்வதற்கு அரசாங்கம் சகல இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டுக்கு முன்னர் தினமும் வெடியோசை கேட்ட ஓர் இடமாகவும் இன்னும் உயர் பறிக்கும் வெடிபொருள் ஆபத்தை கொண்ட பகுதியாகவும் காணப்பட்ட முகமாலை பகுதியின் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட ஆயிரத்து 859 ஏக்கர் காணியும் வேம்பொடுகேணி இந்திராபுரம் பகுதியில் 25 ஏக்கர் காணியுமாக மொத்தமாக 1884 ஏககர் காணி வெடிபொருட்கள் அகற்றப்பட்;டு அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதற்காக கையளிக்கப்பட்டு அடையாளம் காணும் நடவடிக்கைகள் கடந்த வெள்ளக்கிழமை நடைபெற்றுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக தங்களை மீள்குடியேற்றி வீட்டுத்திட்டங்களை வழங்கி கிணறுகள் வீதிகள் ஆலயங்கள் என்பவற்றை புனரமைத்து தருமாறும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
முகமாலை போன்று கடந்த யுத்த காலத்தில் வடக்கின் 640 கிராமங்களில் சுமார் 105 மில்லியன் வரையான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக கடந்த 2010ம் ஆண்டு யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் முகமாலைப்பகுதியே மிக ஆபத்தான பகுதியாக இன்றும் உள்ளது. எனவே இவற்றை அகற்றி இந்த மக்களை விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
n10




