வடக்கு அமைச்சர்களின் ஊழல் பற்றி பேசும் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலத்தில் கொலை கொள்ளை செய்தவர்! ப.சத்தியலிங்கம் ஆவேசம்
அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாக சுட்டிகாட்டிக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட அனைத்தையும் செய்தவர். அத்துடன் எமது முதலமைச்சர் ஊழல் தொடர்பான விசாரணை என வடக்கு மாகாணசபையில் தீர்மானத்தை கொண்டு வந்தது தான் எமக்கு கவலையைத் தருகிறது என வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா, பெரியதம்பனையில் இன்று கிராமிய சுகாதார நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மிகவும் பாரதூரமான வகையில் அமைச்சர்களை மனம் நோகடிக்கக் கூடிய வகையில் சொல்லப்படுகின்ற பல கருத்துக்களை நான் முற்று முழுதாக மறுகிறேன். குறிப்பாக என்னுடைய அமைச்சைப் பொறுத்தவரையில் நான் இதனை முழுமையாக மறுக்கின்றேன். பாராளுமன்றத்தின் வரவு செலவுத்திட்டத்தில் ஊழல்கள் தொடர்பாக வடக்கு மாகாண அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தினை டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் கடந்த காலங்களில் என்ன செய்தார் என எங்கள் எல்லோருக்கும் தெரியும். என்னென்ன ஊழல் செய்தார். எவ்வளவு நிதியம் வைத்திருந்தார். எத்தனை பேரை போட்டுத்தள்ளினார். எத்தனை பேரை இல்லாமல் பண்ணினார் எல்லாம் படிப்படியாக வந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவுப்பகுதிக்குச் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த வேளையில் தாக்குதல் இடம்பெற்றது. இதில் பலரை பாரதூரமான காயங்களுக்கு உள்ளாக்கி இரண்டு பேரை அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் கொலை செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருக்கு யாழ். மேல் நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. இரட்டை மரண தண்டனையும், இருபது வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியான அவர் சொல்லுகிறார் வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என. அப்படியான அவருக்கு என்ன செய்ய வேண்டும் என நாங்கள் பார்க்க வேண்டும்.
இப்படியானவர்கள் தான் அரசியல் நோக்கங்களுக்காக தேவையில்லாத பிரச்சனைகளை கொண்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் என எங்களுடைய வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் அவர்கள் மாகாணசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது தான் எங்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றது. ஏன் என்று சொன்னால் எங்களுடைய சொந்த முதலமைச்சர் இப்படியான ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு வெளியில் இருந்து பலர் அவரை தூண்டி விட்டுள்ளார்கள். ஆனால் அவர் நாங்கள் ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்காகத் தான் இந்த விசாரணை குழுவை நியமித்துள்ளதாக கூறுகின்றார்.
அத்துடன் மாகாணசபை பெறுப்பெற்று மூன்று வருடங்களாகி விட்ட நிலையில் மாகாணசபை என்ன செய்தது என்று அரசியல்வாதிகளும் சில இணையங்களும் கேட்கின்றன. அவ்வாறானவர்களுக்கு நாம் செய்துள்ளோம் என்றே தெரிவிக்க விரும்புகின்றேன். ஆனாலும் மாகாணசைப செய்யவில்லை என்பவர்கள் மாகாணசபையை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மையான் விடயம்.
நாம் முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் யுத்தத்திற்கு உட்பட்ட பிரதேசமாக வட மாகாணம் காணப்படுகின்றது. ஆகவே நாம் அபிவிருததி திட்டங்கள் தொடர்பாக சிந்திக்கும்போது இரண்டு விடயங்களை பார்க்கவேண்டும்.அவற்றில் யுத்ததின் போது அழிக்கப்பட்ட சொத்துக்களையும் அதற்கும் அப்பால் கலை கலாசார பாரம்பரியங்கள் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும்.
அத்துடன் 30 வருடம் யுத்தம் நடக்கும்போது ஏனைய மாகாணங்களில் நடந்த எமது மாகாணத்தில் நடக்காத விடயங்களையும் கொண்டு வரவேண்டிய தேவையுள்ளது எனவும் தெரிவித்தார்.
N5




