செய்திகள்

வவுனியாவில் அமைதி ஊர்வலம் நடத்திய இளைஞர்கள் புலனாய்வாளர்கள் முறுகல்

வவுனியாவில் அமைதி ஊர்வலம் நடத்திய இளைஞர், யுவதிகளுக்கும் புலனாய்வாளர்களுக்கும் இடையில் சனிக்கிழமை 1 மணியளவில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டது. பொலிசார் தலையீட்டு குறித்த முறுகலை தீர்த்து வைத்தனர்.
அன்புக்கும் நட்புக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகளை புலனாய்வுத்துறையினர் புகைப்படம் எடுத்தனர். இதனையடுத்து ஏன் எம்மை புகைப்படம் எடுக்கிறீர்கள் என அவர்களுடன் இளைஞர்கள் சிலர் முரண்பட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் அவ்வமைப்பின் இயக்குனர் ரவீந்திர டி சில்வா புகைப்படம் எடுத்த ஒருவரை அழைத்து ஏன் புகைப்படம் எடுக்கிறீர்கள் என கேட்டபோது அவரும் அவருடன் தர்க்கித்துக் கொண்டார். இதனையடுத்து அங்கு கடமையில் இருந்த பொலிசாரிடம் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிசார் அப்பிரச்சனையை சமரசம் செய்து வைத்ததுடன் இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்யுமாறும் கூறியிருந்தனர். பொலிசார் முன்னிலையில் புகைப்படம் எடுத்த நபர் தன்னை புலனாய்வுத்துறை என அடையாளப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவ் அமைப்பினர் இயக்குனர் ரவீந்திர டி சில்வா, இந்த நிகழ்வை நடத்துவதில் நாம் பல இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளோம். கடந்த காலத்தைப் போல் இன்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்கிறது. இன்று மட்டும் பலர் எனது தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன செய்கிறீர்கள், ஏன் செய்கிறீர்கள், எங்கு செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளனர். அதேபோல் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் எம்மை ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் எனவும், பெரியளவில் கோசம் எழுப்ப கூடாது எனவும் அமைதியாக ஊர்வலம் செய்யுமாறும் கூறியிருந்தார். தற்போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் புகைப்படம் எடுக்கிறார்கள். மாத்தளையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு தொடர்பிலும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாறி நல்லாட்சி எனக் கூறுகின்ற போதும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் குறையவில்லை எனத் தெரிவித்தார்.
IMG_0179a IMG_0201 IMG_0203 IMG_0207a
N5