எங்களை காப்பாற்றுங்கள் – அலப்போ மக்கள் உருக்கமான வேண்டுகோள்
அலப்போ நகரம் எந்தவேளையிலும் சிரிய படையினரின் கரங்களில் விழும் நிலை உருவாகியுள்ள அதேவேளை அந்த நகரில் சிக்கியுள்ள மக்கள் தங்களை காப்பாற்றுமாறு சர்வதேச சமூகத்திடம் மன்றாட்ட வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
அலப்போவை கைப்பற்றிவிட்டோம் என்ற அறிவிப்பை சிரியபடையினர் எந்நேரத்திலும் வெளியிடலாம் என சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலப்போ நகரில் காணப்பட்ட கிளர்ச்சிக்காரர்களின் பாதுகாப்பு நிலைகள் திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.கிளர்ச்சிக்காரர்கள் தற்போது மிகச்சிறிய பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதுடன் கடும் விமானதாக்குதலை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை அலப்போ நகரம் தொடர்ச்சியாக குண்டுவீசி அழிக்கப்படுகின்றது,முழுமையாக எரியூட்டப்படுகின்றது என அந்த நகரில் சிக்கியுள்ள முகமத் அபு ரஜாப் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார்.இது உலகிற்கான இறுதி அபாயக்குரல்,குழந்தைகள் பெண்கள் சிறுவர்களின் உயிர்களை காப்பாற்றுங்கள்,இதற்கு பிறகு உங்களால் எங்கள் குரல்ககைள கேட்கமுடியாமல் போகலாம்,அலப்போ நகரை காப்பாற்றுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




