செய்திகள்

ஜெயலலிதாவின் மரணம்: முடிவுக்கு வருகின்றதா கொழும்பின் தலைவலி?

– சபரி –

ஜெயலலிதாவின் மறைவு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ போன்ற தலைவர்கள் என்னதான் அனுதாபம் தெரிவித்திருந்தாலும், ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கதான் கொழும்பின் உண்மையான உணர்வைப் பிரதிபலித்திருக்கின்றார். “இலங்கையைப் பாதித்திருந்த தலைவலியும், தொல்லையும் ஜெயலலிதாவின் மரணத்தோடு விடுபட்டதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம்.” இதுதான் அவர் சொன்னது. மற்றைய தலைவர்கள் வெறுமனே சம்பிரதாயத்துக்காக அறிக்கை வெளியிட, ஶ்ரீ வர்ணசிங்க மட்டும் மனச்சாட்சியைத் திறந்து பேசியிருக்கின்றார்.

ஜெ. மீதான உறுமயவின் சீற்றத்துக்குக் காரணம் உள்ளது. போர்க் குற்ற விவகாரத்தில் இராணுவத்தினரை குற்றவாளிகள் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் அவர். இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் கதவடைப்புச் செய்தவர் அவர். சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுத்தவர். கச்சதீவை மீளப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். இவை அனைத்தும்தான் ஜெ. மீதான உறுமயவின் சீற்றத்துக்குக் காரணம். இப்போது ஜெ.யின் மரணத்துடன் இந்த நிலை முடிவுக்கு வந்துவிடும் என அவர்கள் நம்புகின்றார்கள். அது சாத்தியமா?

தமிழக மக்களைப் போலவே ஈழத் தமிழர்களுக்கும் ஜெயலலிதாவின் மரணம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஈழத் தமிழர்கள் கருதுவதற்கு காரணங்கள் உள்ளன. 1983 க்குப் பின்னரான காலப்பகுதியில் ஈழத் தமிழர்களுக்கு கவசமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதேபோல 2009 முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பின்னர் ஈழத் தமிழர்களுக்கு கவசமாக இருந்தவர் ஜெயலலிதா. இலங்கை விவகாரம் குறித்து ஜெயலலிதா தமிழக சட்டப் பேரவையில் கொண்டுவந்த தீர்மானங்களும், அவரது செயற்பாடுகளும் ஈழத்தமிழர்கள் அனாதரவாக இல்லை என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தது. அதேபோல கொழும்புக்கும் அவரது செயற்பாடுகள் அதிர்ச்சியைக் கொடுத்தன. ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு அதிக அக்கறையை எடுப்பதற்கான அழுத்தங்களையும் அவரது தீர்மானங்களே கொடுத்தன. இப்போது ஜெயலலிதா என்ற அந்த பெரும் ஆளுமை இல்லாத நிலையில், அவரது பணி தொடரப்போவது யார்?

அதிகாரத்திலிருக்கும் போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து கொழும்புக்கு சிம்மசொப்பணமாக எம்.ஜி.ஆர் இருந்தமையைப் போலவே, அண்மைக்காலம் வரையில் ஜெயலலிதா இருந்தார். ஈழப் பிரச்சியை அவர் தனது கைகளில் எடுத்தார். தீவிரமான ஒரு நிலைப்பாட்டை இவ்விடயத்தில் எடுத்தார். இதன் மூலம் தமிழ்த் தேசியவாத அமைப்புக்களை தனக்குப் பின்னால் வரச் செய்தார். ஜெயலிதாவின் அரசியல் வாரிசாக – புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்ச்செல்வம் அவ்வாறான ஆளுமையைக் கொண்ட ஒருவரல்ல. தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் அரசியல் அனைவருக்கும் தெரிந்ததுதான். அவருக்கோ அவரது அரசியலுக்கோ அஞ்சும் நிலையில் கொழும்பும் இல்லை. தமிழ்த் தேசியவாத அமைப்புக்களும் பலவீனமான நிலையிலேயே உள்ளன. இதனால் ஈழத் தமிழர் விவகாரம் இந்தியாவில் முன்னைய முக்கியத்துவத்தை இழந்துவிடக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் தமிழக அரசியல் அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருந்து வந்திருக்கின்றது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழகம் கொதித்தெழுவதென்பது அண்ணாத்துரையின் காலத்திலிருந்தே நடைபெறுகிறது. தமிழகத்தின் கொந்தளிப்பு அல்லது அழுத்தம்தான் இந்திய மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றது. 1983 இல் வெடித்த ஜீலைக் கலவரத்தைத் தொடர்ந்துதான் இராஜதந்திர ரீதியில் இலங்கை விவகாரத்தில் டில்லி தலையிட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ஆதரவுடன் இடம்பெற்ற முழு அடைப்பும், அவரது அழுத்தங்களும்தான் சிறப்புத் தூதுவராக பி.வி.நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பிவைக்க இந்தியப் பிரதமராக அப்போதிருந்த இந்திரா காந்தியை தூண்டியது.

அந்தக் காலகட்டத்தின் கெடுபிடிப்போர் மற்றும் பிராந்திய அரசியல் நிலைமைகளுக்கு இசைவாக இலங்கை குறித்த தமது அணுகுமுறையை இந்தியா வகுத்துக்கொண்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களையும், ஆயுதப் பயிற்சியையும் கொடுப்பதென்ற முடிவை இந்தியா எடுத்தது. டில்லி அவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்திருந்த காலப்பகுதியிலேயே எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுடன் குறிப்பாக அதன் தலைவர் வே.பிரபாகரனுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு நிதி உதவியையும், தமிழகத்தில் தங்கியிருப்பதற்கான வசதிகளையும் எம்.ஜி.ஆர். செய்துகொடுத்தார். மறுபுறத்தில் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத் தமிழ் அகதிகளுக்கான கல்வி, வாழ்வாதார வசதிகளும் அவரால் செய்துகொடுக்கப்பட்டது.

1987 இல் கைச்சாத்தான இலங்கை – இந்திய உடன்படிக்கையும், அதே வருடம் இடம்பெற்ற அவரது மரணமும் இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான போரும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையும் இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1991 இல் அதிகாரத்துக்கு வந்த ஜெயலலிதா ஈழப் பிரச்சினையில் அக்கறை காட்டாத ஒருவராகவே இருந்தார். ராஜீவ் படுகொலை அதற்குக் காரணம். 2002 இல் அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் இடம்பெற்ற போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவையும், சந்திரிகா குமாரதுங்கவையும் அவர் சந்தித்த போதிலும், வேறு சிங்களத் தலைவர்களையே தமிழ்த் தலைவர்களையே சந்திப்பதையும், ஈழப் பிரச்சினை தொடர்பிலான செயற்பாடுகளையும் தவிர்த்தே வந்திருந்தார். எம்.ஜி.ஆர். வளர்த்த இயக்கம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அவரது வாரிசான ஜெயலலிதா மௌனமாகவே இருந்தார். இது காலத்தின் துயரம்.

இருந்தபோதிலும் இந்த நிலையில் 2009 க்குப் பின்னரான காலப்பகுதியில் மாற்றம் ஏற்பட்டது. முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கும், அங்கு இடம்பெற்ற சித்திரவதைகளுக்கும் எதிராக சர்வதேச அரங்கில் தமிழினம் நீதி கோரிப் போராடிய போது அவர்களுக்குத் துணை நிற்க எந்த அரசும் தயாராக இருக்கவில்லை. தமிழகத்திலும் அரசியல் ரீதியாக பலத்தைக்கொண்டிராத தமிழ்த் தேசியவாத அமைப்புக்கள் சில மட்டுமே இந்தக் கோரிக்கைக்காக குரல் கொடுத்தன. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், இலங்கை அரசாங்கத்தை அச்சமடையச் செய்யும் வகையிலான தீர்மானங்கள் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்துக்கும் பின்னணியில் இருந்தார் ஜெயலலிதா.
தமிழக முதலமைச்சராக இருந்துகொண்டு ஜெயலலிதா சட்டப் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்களும், அதன் மீது அவர் நிகழ்த்திய உரையும் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்தவை. தமிழீழம் அமைவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் கொண்டுவந்த முதலாவது தீர்மானமும், பின்னர் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கொண்டுவந்த தீர்மானமும், பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போது இலங்கை அரசுக்கு அச்சுறுத்தலைக்கொடுக்கும் ஒருவராக ஜெயலலிதா மாற்றமடைந்தார். இந்த நிலையில்தான் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஒன்று ஜெயலலிதாவை மோசமாகச் சித்தரிக்கும் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்காக பின்னர் மன்னிப்பும் கோரி, அதனை அகற்றிக்கொண்டது. ஆதரவற்றவர்களாக அனாதரவாக இருந்த ஈழத் தமிழர்களுக்கு இந்தத் தீர்மானங்கள் நம்பிக்கையைக் கொடுத்தது.

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழக சட்டப் பேரவைத் தீர்மானமும் அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் தெரிவானதையிட்டு வாழ்த்துத் தெரிவித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை இவ்வருடம் மே மாதத்தில் அனுப்பிவைத்திருந்தார். ஜெயலலிதாவுக்கு இது போல அனுப்பப்படும் கடிதங்களுக்கு வழமையாக பதில் வருவதில்லை. ஆனால், இந்தக் கடிதத்துக்கு ஜெயலலிதாவிடமிருந்து பதில் வந்தது. ஈழத் தமிழ்த் தலைவர் ஒருவருடன் ஜெயலலிதா தொடர்பை ஏற்படுத்தியது இதுதான் முதல்முறையாக இருக்க வேண்டும். விக்னேஸ்வரனின் கடிதத்துக்கு அதில் நன்றி தெரிவித்த ஜெயலலிதா, இருவருக்கும் வசதியான ஒரு தினத்தின் விக்னேஸ்வரனைச் சந்திப்பதற்கும் விருப்பம் தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவின் கடிதத்தின் விபரம் இதுதான்:

“அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் நான் பெற்ற வெற்றி குறித்த உங்களது பாராட்டுக் கடிதத் திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் தொப் புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல்- அமைச்சர் என்ற முறையில் நான் எடுத்துள்ளேன். இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகம் மற்றும் இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் என்னை சந்திக்க நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களது நல்வாழ்த்து களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஜெயலலிதா தன்னுடைய கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார். இதற்கமைய இரு முதல்வர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில்தான் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இதன்மூலம் தவிர்க்கப்பட்டுவிட்டது. இந்தச் சந்திப்பு மட்டும் இடம்பெற்றிருந்தால், இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பல மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அழுத்தங்களை ஜெயலலிதா செய்திருப்பார். ஆனால், தூரதிஷ்ட வசமாக இந்தச் சந்திப்பு இடம்பெறாமல் போய்விட்டது. ஜெயலலிதவுக்கான அனுதாபப் பிரேரணை வடமாகாண சபையில் கொண்டுவரப்பட்டபோது முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.

ஜெயலலிதாவின் மறைவு பாரிய வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஆதரவு இருந்தால் மட்டுமே இலங்கை அரசினால் போர்க் குற்றங்கள் போன்ற விடயங்களிலிருந்து இலங்கை அரசால் தப்பித்துக்கொள்ள முடியும். இவ்விடயத்தில் டில்லிக்கு அழுத்தம் கொடுகக்கூடிய ஒருவராக அண்மைக்காலம் வரையில் இருந்தவர் ஜெயலலிதா மட்டும்தான். ஏனைய அனைத்துத் தமிழ்த் தேசியவாதிகளும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தாலும், அதற்கான அழுத்தத்தை டில்லிக்குக் கொடுக்கக்கூடியளவுக்கு பலத்தைக் கொண்டவர்களாக இருக்கவில்லை. கடந்த வருடம் டில்லி சென்ற இலங்கை அமைச்சர் ஒருவருக்கு டில்லி தெரிவித்த ஆலோசனை இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது. “நீங்கள் டில்லி வந்தால் மட்டும் போதாது. சென்னைக்கும் செல்ல வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார். இதன் அர்த்தம் கவனிக்கத்தக்கது. தமிழகத்திலிருந்து தமக்கு வரும் அழுத்தங்கள் குறித்துத்தான் அதன் அதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாதததும், அவரது இடத்தை நிரப்பக்கூடிய ஒருவர் இல்லாததும், டில்லி மீதான அழுத்தத்தைக் குறைக்கும். சர்வதேச அரங்கில் இது கொழும்புக்கு சாதகமாக அமையலாம். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒருவராக பன்னீர்ச்செல்வம் இருக்கப்போவதில்லை. அதற்கான ஆளுமையும் அவரிடம் இல்லை. கருணாநிதியும் ஈழப்பிரச்சினையில் அக்கறை காட்டப்போவதில்லை. அதேவேளையில் அது தொடர்பில் மத்திய அரசுக்கு அழுத்தத்தைக்கொடுக்கும் ஒருவராகவும் அவரைக் காணமுடியவில்லை. தமிழ்த் தேசியவாத அமைப்புக்களும் பலவீனப்பட்டவையாக வெவ்வேறு நிகழ்ச்சி நிரலில் செயற்படுபவையாக உள்ளன. இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பாரிய வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது உண்மைதான். அதற்கு மேலதிகமாக ஶ்ரீ வர்ணசிங்க சொன்னதைப் போல, இலங்கையைப் பாதித்திருந்த தலைவலியும், தொல்லையும் ஜெயலலிதாவின் மரணத்தோடு விடுபட்டதாகவே தோன்றுகிறது.